மிமோஷா என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’.
இந்தப் படத்தில் கோகுல் கதாநாயகனாகவும், நீனு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் அப்புக்குட்டி, மன்சூரலிகான், பிரியா மோகன், மதுமிதா, மலையாள நடிகர் ஜெயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மறைந்த மலையாள இயக்குநரும், கதாசிரியருமான லோகிததாஸின் சீடரான உதயசங்கரன் இயக்கியிருக்கிறார்.
அறிமுக இசையமைப்பாளரான வல்லவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இன்றைக்கு மக்கள் நாடு முழுவதும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு பிச்சைக்காரர்களை போல தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விழா நடப்பதால் விழா மேடையில் யாராவது ஒருவராவது அதைப் பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில் வில்லன் நடிகர் மன்சூரலிகான் இந்த நோட்டு பிரச்சனையில் கொதித்துப் போய், நரேந்திர மோடியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.
மன்சூரலிகான் பேசும்போது, “உண்மையில் இன்று காலை நான் வேறொரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் படப்பிடிப்பிற்கு தேவையான பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வர நேரமாகும் என்பதால் படப்பிடிப்பை மதியத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள். அதனால்தான் என்னாலும் இங்கே வர முடிந்தது.
இந்த மூன்று நாட்களில் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சினிமா தியேட்டர்களில் கூட்டமே இல்லை. மக்கள் கைககளில் பணம் இல்லாததால் அவர்கள் தியேட்டருக்கு வரவில்லை. தியேட்டர்களே காலியாக கிடக்கின்றன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சினிமா துறையே முடங்கிவிட்டது.
இதற்கு திரையுலகத்தினர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் அனைவரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். சினிமா துறை நொடிந்து போயிருக்கும் நிலையில் நாம் குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.
படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இசை வெளியீட்டு விழாவை இத்தனை பெரும் தொகையை செலவழித்து நடத்துகிறார்கள். வருமானமே நின்று போனால் என்ன ஆவது..? என்ன செய்வது..? சினிமா துறையினர் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும்.
சில்லறை நோட்டுக்காக பொதுமக்கள் வீதி, வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நாள் முழுக்க காத்துக் கிடக்கிறார்கள். மக்களை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கிறது. சினிமாவின் நிலைமையும் மோசமாகிவிட்டது. இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு என்று ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். நான்கு தடவை அதனை பாக்கெட்டில் வைச்சு எடுத்தாலே தானா கிழிஞ்சிரும். அந்த லட்சணத்தில் அவ்வளவு மோசமாக இருக்கிறது. கலைத்துறையைச் சேர்ந்த நமது கலை இயக்குநர்களிடத்தில் கேட்டிருந்தால்கூட இதைவிட நல்ல நோட்டை தயார் செய்திருக்கலாம்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதை.. ஒழிக்க நினைப்பதை அனைவருமே வரவேற்கிறோம். ஆனால் அதே நேரம்.. அதற்கான முன் ஏற்பாடுகள் எதையுமே செய்யாமல் பிரதமர் மோடி இரவாடு இரவாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து பெரும் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டார். மக்கள் அனைவரையும் ஒரே நாள் இரவில் இராப்பிச்சைக்காரனாக்கிவிட்டார்..” என்று வெளுத்து வாங்கிவிட்டார்.
திரையுலகத்தில் இவருக்காச்சும் இந்த அளவுக்கு தைரியம் இருக்கே..! பாராட்டுக்கள் ஸார்..!











