full screen background image

“முடிந்தால் கருணாஸை நீக்கிப் பாருங்கள்…” – தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால்..!

“முடிந்தால் கருணாஸை நீக்கிப் பாருங்கள்…” – தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கப்பட்டதாக இன்று மதியம் 3 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.

அந்தக் குறிப்பில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் நிர்வாகிகள் யாருடைய கையெழுத்தும் இல்லாமல், ஒரு வெள்ளை பேப்பரில் டைப் செய்யப்பட்டு கடைசியாக சங்கத்தின் சீல் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

tamil-film-producers-council-vishal-suspend-letter

இதையடுத்து அவசரம், அவசரமாக நடிகர் விஷால் இன்று மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை இப்போதுதான் நான் கேள்விப்பட்டேன். எனக்கு இது வியப்பளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.

எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும்போதும், முதலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டுதான் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவார்கள். ஆனால் நான் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதை பத்திரிக்கையாள நண்பர்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். எனக்கு இப்போதுவரையிலும் கடிதம் எதுவும் வரவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் நல்லது நடக்க வேண்டும். சிறிய பட தயாரிப்பாளர்களும், பெரிய தயாரிப்பாளர்களும் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருந்தேன்.

மேலும், போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்திருந்தேன். அப்படி நான் சொன்னதில் தவறில்லை.

‘போண்டா’, ‘பஜ்ஜி’ என்பது கெட்ட வார்த்தையா…? அது ஒரு தவறான உணவு இல்லை. நடிகர் சங்கத்தில், எங்கள் படப்பிடிப்பில்கூட நாங்கள் அவைகளைத்தான் சாப்பிடுகிறோம். என்னை பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் என்றில்லாமல் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.

img_8690

கேள்விகள் கேட்க எனக்கு உரிமைகள் இருக்கின்றன. திருட்டு விசிடி பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகள் எனக்கு அதிருப்தியை அளித்தன. 7 புதிய படங்களை பெங்களூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் திருட்டு விசிடியில் படமாக்கி வெளியிட்டனர். அதனை தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு போயும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது போன்ற பல பிரச்சினைகள் இருந்ததால் சில கருத்துக்களை வெளியிட்டேன்.

தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம். அதற்கு ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். கேள்வி கேட்பது தவறே இல்லை. எல்லா சங்கத்திலும் கேள்வி கேட்க முடியும். கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். நடிகர் சங்கத்திலும் இதே போன்றுதான் கேள்வி கேட்டோம். பதில் சொல்ல மறுத்ததால் தேர்தலில் நின்று இப்போது பொறுப்புக்கு வந்துள்ளோம்.

நான் இப்போது என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசி கொண்டு இருக்கிறேன். நான் இதை நிச்சயம் எதிர்கொள்வேன். இதற்கு சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதை நான் என்னுடைய வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

இந்த நீக்கம் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆச்சரியப்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இதுவரையிலும் இதே போன்று யாரையும் நீக்கியதாக முன் உதாரணங்கள் இல்லை. அவசரப்பட்டு யாரையும் நீக்க முடியாது.

நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக கூறப்பட்டது. நானும் அது போன்ற கட்டப்பஞ்சாயத்தில் சிக்கினேன் என்றும் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நீக்கும் நடவடிக்கையா என்றும் எனக்குத் தெரியவில்லை.

அடுத்தாண்டு ஜனவரியில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரப் போகிறது. தயவு செய்து அந்தத் தேர்தலை நடத்த விடுங்கள். முறையாக அந்த தேர்தல் நடைபெற வேண்டும். எல்லோருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கும். எல்லோருடைய பார்வைக்கும் மதிப்பளித்து தேர்தலை நடத்த விடுங்கள்.

இளைஞர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும். அந்த அணி மிகுந்த துடிப்புடன் போட்டியிடும். என்னை பொறுத்தவரை தாணு அண்ணனுக்கும் எனக்குமிடையில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் தாணு அண்ணனிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. நான் நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக வருவதற்கு முன்னரே கேள்வி கேட்டுள்ளேன். இப்போது நான் பதவிக்கு வந்த பிறகு எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியது எனக்கு கட்டாயம். அதே போல் அது என்னுடைய பொறுப்பு.

அதே போலத்தான் தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கியும் கேள்வி கேட்கிறேன். நிச்சயம் நான் அவர்களுக்கு எதிரி இல்லை. நான் ஜனநாயக முறையில் அவர்களிடம் கேள்வி கேட்டேன். எனக்கு கேள்வி கேட்கவும் பயமில்லை. கேள்வி கேட்டால் பதில் வரவில்லை என்னும் பட்சத்தில் தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை.

விஷால் என்ற தயாரிப்பாளருக்கே இந்த கதி என்றால், சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கேள்வியே கேட்க கூடாதா…? விஷாலுக்கு இந்த முடிவு எடுத்திருக்கும் நீங்கள், இதே முடிவை கருணாஸுக்கு எடுக்க முடியுமா..? நிச்சயமாக எதிர் அணி என்பது இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலில் அந்த அணி போட்டியிடும். அந்த அணிக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன்.

திருட்டு வி.சி.டி எங்கு பிடிபட்டாலும் என்னைத்தான் எல்லோரும் டேக் செய்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் முதலில் ஓடி வந்து நிற்பேன். என்னை பொறுத்தவரை நான் முன்னரே கூறியதுபோல நான் யாருக்கும் எதிரான ஆள் இல்லை. நாம் அனைவரும் இணைந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக பாடுபடுவோம்…” என்றார் நடிகர் விஷால்.

ஓ.. இந்தக் காமெடியும் நல்லாத்தான் இருக்கு..!

அடுத்து ஜனவரியில் தமிழகத்தின் டிவி சேனல்களுக்கு நாள் முழுக்க நேரலை ஒளிபரப்பிற்கு ஒரு விஷயம் கிடைத்துவிட்டது..!

Our Score