full screen background image

மீன் குழம்பும் மண் பானையும் – சினிமா விமர்சனம்

மீன் குழம்பும் மண் பானையும் – சினிமா விமர்சனம்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாயிருக்கும் படம் இது. நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது சொந்த பேனரில் தயாரித்திருக்கும் முதல் படமும் இதுவாகும்.

காரைக்குடி பிள்ளையார்பட்டியில் இருந்து மலேசியாவிற்கு கைக்குழந்தையுடன் பிழைப்புக்காக சென்றவர் அண்ணாமலை. தனது கடின உழைப்பால் இப்போது மீன் குழம்பும் மண் பானையும் என்கிற ஹோட்டலை நடத்தி வருகிறார். பெரும் பணக்கார்ராகவும் இருக்கிறார். அவருடைய மகன் காளிதாஸ். கல்லூரியில் படித்து வருகிறார்.

அப்பாவுக்கும், மகனுக்கும் ஏழாம் பொருத்தம். பிள்ளையை செல்லமாக கஷ்டமே தெரியாமல் வளர்த்துவிட்டதால் அப்பாவை புரிந்து கொள்ளாமலும், மதிக்காமலுமே வளர்ந்திருக்கிறார் காளிதாஸ்.

இன்னொரு பக்கம் ஹீரோயின் ஆஷ்னா சாவேரி மலேசியாவில் வசிக்கும் இந்திய தூதரக அதிகாரியான ஊர்வசியின் மகள். ஊர்வசிக்கும், அவரது கணவரான தலைவாசல் விஜய்க்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது டைவர்ஸ் வரைக்கும் வந்து நிற்கிறது.

மகன் காளிதாஸுக்கும், அப்பா பிரபுவுக்கும் இடையில் கடும் மனஸ்தாபம் ஏற்பட்டு மனதளவில் இருவருமே பெரும் வருத்த்த்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகன் இருவரையும் தன் வீடு இருக்கும் தீவுக்கு திட்டம் போட்டு அழைக்கிறார்.

அங்கேயிருக்கும் விவேகானந்த சாமியாரான கமல்ஹாசன், இருவருக்குமான பிரச்சினை என்னவென்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய சக்தியால் இருவரின் மனதையும் இடம் மாற்றிவிடுகிறார்.

இதன்படி மகன் காளிதாஸின் உடலில் அப்பா பிரபுவின் மனமும், அப்பா பிரபுவின் மனதில் மகன் காளிதாஸும் குடியேறுகிறார்கள்.

இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.

இதே பாணியில் கூடுவிட்டு கூடு பாயும் கதையுடன் பல தமிழ்த் திரைப்படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் இது புத்தம் புதிய திரைக்கதையுடன் வந்திருக்கிறது.

அடக்கமான, பக்தி மயமான முதலாளி அண்ணாமலையாக பிரபு. மகன் மீதான பாசத்தைக் கொட்டுவதையும், மகன் தன்னைப் புரிந்து கொள்ளாத்தை நினைத்து வருத்தப்பட்டாலும், அந்த வருத்த்த்தை மகன் மீது கோபத்தோடு காட்டாமல் ஏக்கத்துடன் வெளிப்படுத்துவதிலும் ஒரு குணச்சித்திரத்தைக் காண்பித்திருக்கிறார் இளைய திலகம்.

இதற்கு நேர்மாறாக இடைவேளிக்கு பின்பு சேர்த்து வைத்து வெளுத்திருக்கிறார். அந்த இளைஞரான கெட்அப்பில் அவர் வரும் காட்சிகளெல்லாம் சிரிக்கவும் வைத்திருக்கிறார் பிரபு.

ஹீரோ காளிதாஸுக்கு இது அறிமுகப் படம் என்பதால் குறைகளைவிட்டுவிடுவோம். நிறைவாக இன்னமும் அழுத்தமான கதையும், சிறந்த இயக்குநரும் கிடைத்து மென்மேலும் உயரட்டும் என்று வாழ்த்துகிறோம்.

சந்தேகமேயில்லாமல் இந்த முறையும் ஊர்வசி அனைவரையும் நடிப்பில் முந்தியிருக்கிறார். கணவரிடம் படா படாவெ பொரிவது.. மகள்களைக் கண்டிப்பது என்று துவங்கி டிராக் மாறி அண்ணாமலையின் திட்டத்தினால் பகைமை மறந்து கணவரிடம் பேசி சமாதானமாவதுவரையிலும் ஊர்வசி வரும் காட்சிகளெல்லாம் அவர் ஒருவரே நடித்து பெயரை தட்டிச் சென்றிருக்கிறார்.

ஹீரோயின் ஆஷ்னா சாவேரி அப்படியொன்றும் அழகியல்ல. ஆனால் ஏதோவித ஈர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது போலும்.. இதற்கு முந்தைய படங்களை போலவே இதிலும் வழமையான காதல் காட்சிகள்தான். மென்மையாக நடித்து முடித்திருக்கிறார்.

பூஜா குமாருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான். டான் கெட்டப்பில் வாட்டசாட்டமான தோற்றத்தில் அழகைக் காட்டினாலும் கொஞ்ச நேரம் கழித்து புடவையில் வந்து அசத்துகிறார்.

இவ்வளவு பெரிய டான், எதற்கும் பயப்படாதவர்.. சாதாரண ஒரு காபியைக் குடித்தவுடன் அண்ணாமலை மீது பிரியம் ஏற்பட்டு அவருடைய பணிவை பார்த்து சட்டென்று அவரை காதலிப்பதெல்லாம் என்ன இயக்குநர் ஸாரே..? கொஞ்சம் திரைக்கதையை செப்பனிட்டிருக்கலாம்.

பூஜா குமாரின் அழகை கேமிரா படமாக்கியிருக்கும்விதம்தான் படத்தின் மிக அழகு. பிரபு, பூஜா குமாரின் பாடல் காட்சியை பார்த்தால் இவர்களே ஹீரோ, ஹீரோயின்கள் என்பது போலத்தான் தோன்றியிருக்கிறது.

இடைவேளைக்கு பின்புதான் இந்தப் படத்தில் அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார்கள். இதில் எம்.எஸ்.பாஸ்கர் டீமுக்கு பெரும் பங்குண்டு. எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நகைச்சுவை தர்பார்.

‘ஸாரி சொல்லுங்க’ என்கிற அழகான பாடல் படத்தின் கதையையே சொல்லிவிடுகிறது. சிறந்த ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது. சண்டை காட்சிகளிலும் நகைச்சுவையை புகுத்தி இறுதியில் கொஞ்சமேனும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

அண்ணாமலையின் பூர்விகக் கதைதான் படத்திற்கு ஆணிவேர். ஆனால் அதுவே இங்கே சாதாரணமாக படமாக்கப்பட்டு சாதாரணமாகவே சொல்லப்படுவதால் அழுத்தமாக மனதில் பதியவில்லை. இதனாலேயே பிரபுவின் மீது வந்திருக்க வேண்டிய பரிதாப உணர்வு வராமலேயே போய்விட்டது.

படத்தின் முற்பாதியில்விட்டதை பிற்பாதியில் ஈடு கட்டியிருக்கிறார்கள் என்றாலும் ஒட்டு மொத்தமாய் படம் நகைச்சுவையில் மிளிர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்..!

ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score