புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த, ‘குடியிருந்த கோவில்’ திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் புலவர் புலமைப்பித்தன். அன்று பாடல்களை எழுத ஆரம்பித்தவர் தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட படங்களில் 600-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி பல விருதுகளுக்கு சொந்தமானவர்.
இவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அரசவை கவிஞராக நியமிக்கப்பட்டார். 80 வயதான புலவர் புலமைப்பித்தன், இன்றுவரையிலும் நான்காவது தலைமுறையினருக்கும் பாடல்களை எழுதி வருகிறார்.
இப்போது புலவர் புலமைபித்தனின் பேரனான திலீபன் புகழேந்தியும் திரையுலகில் கால் பதித்திருக்கிறார். ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய வில்லனாக அறிமுகமாகிறார் திலீபன்.
திலீபன் லண்டன் திரைப்பட கல்லூரியில் திரைப்பட தயாரிப்பு பயிற்சி பெற்றவர். 9-ம் வகுப்பு படிக்கும்போதே ‘ப்ரோக்கன் ட்ரீம்ஸ்’ என்னும் குறும் படத்தில் நடித்துள்ளார். லண்டனில் தன்னுடைய் படிப்பை முடித்த பிறகு சென்னை திரும்பி வந்த திலீபன், இங்கே நடிகர் ஜெயராமன் நடத்தும் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சியைப் பெற்றுள்ளார்.
கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி முடித்த பிறகு, திலீபன் ஒரு திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வுக்கு சென்றுள்ளார். அந்த தேர்வில் 36 புதுமுகங்கள் கலந்த் கொண்டுள்ளனர். அந்த 36 பேரில் திலீபன் ஒருவர்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த படம்தான் திலீபன் தற்போது அறிமுகமாகும் முதல் திரைப்படமான ‘பள்ளிக்கூடம் போகாமலே’.
இப்படத்தை ஜெயமுருகன் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா என்னும் புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி, தேவதர்ஷினி, இயக்குநர் ராஜ்கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராமனும் ஒரு கவரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தைப் பற்றி பேசிய திலீபன், “இந்த ‘பள்ளிக்கூடம் போகாமலே’ திரைப்படம் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை மையமாக கொண்டது. மாணவர்கள் மத்தியில் தற்கொலை முயற்சியை முற்றிலும் கைவிட வேண்டும் என்கிற அறிவுரை சொல்லும் படமாகவும் இது இருக்கும். இந்தப் படம் இந்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.
திலீபன் நடிகர் மட்டுமன்றி ஒரு மிகச் சிறந்த பைக் ரேசரும்கூட. அது மட்டுமின்றி பைக்கை ஒரு சக்கரத்தில் ஓட்டும் வல்லமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டில் பைக் ரேசில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
திலீபன் தற்போது ‘எவன்’ என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை துரைமுருகன் இயக்க திலீபன் கதாநாயகனாகவும், தீப்தி மானே கதாநாயகியாக நடித்து வருகின்றனர்.











