“100 ரவுடிகளை கட்டி மேய்ப்பவன்தான் இந்த ‘சுல்தான்’..!” – நடிகர் கார்த்தி பேட்டி..!

“100 ரவுடிகளை கட்டி மேய்ப்பவன்தான் இந்த ‘சுல்தான்’..!” – நடிகர் கார்த்தி பேட்டி..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சுல்தான்’.

இந்தப் படத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதையொட்டி நடிகர் கார்த்தி இந்த ‘சுல்தான்’ படத்தில் நடித்த அனுபவங்களை பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் கார்த்தி இது பற்றிப் பேசும்போது, “இயக்குநர் பாக்கியராஜ் ஸார் இந்த ‘சுல்தான்’ படத்தின் கதை பற்றி ஒரு வரியில் கூறும்பொழுது, தந்தைக்காக இவன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். ஆனால், இவனுக்கு வாழ்க்கை லட்சியமே வேறு. ஆனால் தந்தை கூறியதை செய்யலாமா வேண்டாமா என்று அவனுக்குள் குழப்பம் ஏற்படுகிறது.

இருப்பினும் நம் வாழ்வில் வருத்தப்படக் கூடிய விஷயம் நாம் செய்யாமல் தவறவிட்ட செயல்கள்தான். ஆகையால், நான் இந்த முயற்சியில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அப்பா சொல்வதற்காக அதையே செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் ‘சுல்தான்’.

அதன் பிறகுதான் அவனுக்கு தெரிகிறது “நூறு பேரை சமாளிக்க வேண்டும்…” என்று. அவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்களை அவன் எப்படி கட்டி மேய்க்கிறான் என்கிற சவால்தான் இந்த சுல்தான்’ திரைப்படம்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் 20 நிமிடங்கள் இக்கதையைக் கூறிய உடனேயே இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். பிறகு, எஸ்.ஆர்.பிரபுவிடம், “இக்கதையை கேளுங்கள்…” என்று கூறினேன். அவரும் கேட்டுவிட்டு “நன்றாக இருக்கிறது..” என்றார்.

அதன் பின்பு, உணர்வுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூற , பாக்கியராஜ் கண்ணன் படத்தின் திரைக்கதையை அமர்க்களமாக ரெடி பண்ணினார். அதேபோல், நகைச்சுவை பகுதிகளும் கதையில் தானாகவே வந்து அமர்ந்துவிட்டது.

ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே அவ்வளவு போராட்டம் வருகிறது. ஆனால், 100 பேர் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து கொள்ளுங்கள். அங்கு, நகைச்சுவை, சண்டை, கேலி.. கிண்டல், அவமானம் என்று அனைத்தையுமே கொண்டு வர முடியும். அதற்காக ஒன்றரை வருட காலம் நேரம் எடுத்து கதையை மெருகேற்றினார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்.

இப்படத்தில், இன்னொரு சவாலான விஷயம் 100 பேரையும் காட்சிக்குள் கொண்டு வருவதுதான். அதேபோல், இப்படத்தில் எழுந்த இன்னொரு சிக்கல், எந்த லென்ஸ் போட்டு 100 பேரையும் ஒரே காட்சியில் அடைப்பது என்கிற குழப்பம் தீரவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது.

மேலும், தந்தை கூறியதற்காக 100 பேரை சமாளித்து விடலாம் என்று நினைக்கும்பொழுது, நிலைமை கை மீறிப் போகின்றது. அப்பொழுதுதான் கதை தீவிரமாக போகின்றது. இப்படம் ஒரு நல்ல பொழுது போக்கான படமாக நிச்சயம் இருக்கும். 100 பேர் இருந்தாலும், இறுதிக் காட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்…” என்றார் நடிகர் கார்த்தி.

Our Score