தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு பேசும்போது, “உளப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான வகையில் இந்தக் ‘கர்ணன்’ என்ற திரைக் காவியத்தை உருவாக்கியுள்ளார் தம்பி மாரி செல்வராஜ்.
மாரி செல்வராஜை என்னிடம் அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ்தான். இந்தப் படத்தில் அத்தனை வேலைகளையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ்.

பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இல்லையே என்ற குறையை எனக்கு தம்பி மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். வெற்றி மாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ, அதேபோல் தம்பி மாரி செல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் கதையை ஒரு புத்தகமாகக் கொடுத்துள்ளார் மாரி. அதை என் பூஜை அறையில் பத்திரமாக வைத்துள்ளேன். படம் முடிந்த பின்பு உங்களை இருக்கையை விட்டு எழவிடாமல் சிந்திக்க வைக்கப் போகிறது இப்படம். இந்த படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. கர்ணன் வருவான். கர்ணன் வெல்வான்…” என்றார்.