full screen background image

“சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை..” – நடிகர் கமல்ஹாசனின் திடீர் முடிவு..!

“சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை..” – நடிகர் கமல்ஹாசனின் திடீர் முடிவு..!

தனது அடுத்த படமான ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழாவையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் தான் “வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை..” என்றார்.

கமல்ஹாசனிடம், “இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட வருவீங்களா..?” என்று பத்திரிகையாளர்க6ள் கேட்டபோது, “சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு, மே 16-ம் தேதிதான் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் தொடங்குது. ஜூன், ஜூலைல படம் மொத்தத்தையும் முடிச்சிரலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்.

இருந்தாலும் என் அமெரிக்கப் பயணம் இன்னமும் திட்டமிடப்படவில்லை. 16-ம் தேதி நான் இங்கே இருந்தால் நிச்சயம் வாக்களிப்பேன்.

போன பாராளுமன்றத் தேர்தலப்போ என் ஓட்டை வேற யாரோ போட்டுட்டு போயிட்டாங்க.. இந்த தடவையாச்சும் போட்டிரணும்னு நினைத்துள்ளேன். ‘வாக்காளர் பட்டியல்ல என் பேரே இல்லை’ன்னுட்டாங்க.. இத்தனைக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரி என்னுடைய நெருங்கிய நண்பர்தான். இருந்தாலும் என்ன செய்வது..?

நானும் இந்த நாட்டு குடிமகன்தான் என்று கூறி வாக்குரிமை பெற வேண்டியது எனது கடமை. நான் இன்னும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்யவில்லை.

தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. எனது நற்பணி மன்றத்தினருக்கு நான் எந்த உத்தரவையும் போடலை. அவங்க, அவரவர் சொந்த விருப்பபடி வாக்களிக்கலாம். நான் இந்த நற்பணி இயக்கத்தை துவக்கும்போதே இது அரசியலுக்குள் வராது என்று சொல்லிவிட்டுத்தான் துவக்கினேன்.

என் ரசிகன் எனது அலுவலகத்திற்கு வரும்போது, ‘செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு வர’ சொல்லுவேன். அதுபோல, திரும்ப செல்லும்போது, ‘அந்த செருப்பை மாட்டிக் கொண்டு செல்’ என்று சொல்லுவேன். அதற்காக நான் ‘செருப்பு’ என்று சொன்னதை தவறான உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் அரசியல் கொண்டு வர வேண்டாம். என்னுடைய நற்பனி இயக்கங்களுடன் சேர்ந்து தொண்டு செய்வதே எனக்கு போதுமானது..” என்றார் கமல்.

வாக்காளர் பட்டியலில் சேர்க்க தான் இன்னமும் விண்ணப்பிக்கவில்லை என்று கமல்ஹாசன் பேட்டியளித்த சில மணி நேரங்களில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கமல்ஹாசனின் பெயரும், கவுதமியும் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை புகைப்படமெடுத்து தனது வாட்ஸ்அப் மூலமாக பரப்புரை செய்திருக்கிறார்.

kamal-gowthami-1

ஆக.. இந்த விஷயத்தில் நடிகர் கமல்ஹாசனை ஏமாற்றியது யார் என்று அவரிடத்தில்தான் கேட்க வேண்டும்..! என்ன இருந்தாலும் ஒரு பொறுப்பான குடிமகனாக நடிகர் கமல்ஹாசன் தனது பொன்னான வாக்கினை செலுத்திவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பம்..!

Our Score