full screen background image

“நான் ரொம்ப நல்ல பையன்ங்க. சொன்னா நம்புங்க…” – நடிகர் ஜீவனின் வருத்தமான பேச்சு..!

“நான் ரொம்ப நல்ல பையன்ங்க. சொன்னா நம்புங்க…” – நடிகர் ஜீவனின் வருத்தமான பேச்சு..!

2002-ம் ஆண்டு ‘யுனிவர்சிட்டி’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ஜீவன். இதன் பின்பு அடுத்த ஆண்டே ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்தார். இதன் பின்பும் கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘திருட்டு பயலே’ படத்தில் ஹீரோவாக நடிக்க.. இந்தப் படத்தின் ஓட்டத்தினால் கொஞ்சம் பேசப்பட்டார்.

இதற்கடுத்த ஆண்டு வெளியான ‘நான் அவனில்லை’ படமும் இவரைக் கை தூக்கிவிட.. பல படங்களில் நடிப்பதற்கு புக்கானார். ஆனால் படங்கள்தான் வெளிவரவில்லை. பூஜையோடு நின்றுவிட்ட படங்களும் இருக்கின்றன.

இதன் பின்பும் ‘மச்சக்காரன்’, ‘தோட்டா’, ‘நான் அவனில்லை-2’ ஆகிய படங்களிலும் நடித்து முடித்துவிட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போதுதான் அதிபர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் கவிதாலயா தயாரித்த ‘கிருஷ்ண லீலை’ படம் திரைக்கு வராமலேயே முடங்கிக் கிடப்பது ஏன் என்றும் தெரியவில்லை.

தமிழ்த் திரையுலகில் என்ன காரணத்தினால் தனக்கு இத்தனை பெரிய இடைவெளி கிடைத்துள்ளது என்பது அவருக்கே தெரியாதாம். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் ‘அதிபர்’ படத்தின் பிரஸ்மீட்டில் பேசியபோது இதனை தெரிவித்தார் நடிகர் ஜீவன்.

athibar-vidhya

அவர் மேலும் பேசும்போது, “நான் ரொம்ப நல்லவன்ங்க.. பிரச்சினை செய்யாதவன். யார்கிட்டேயும் எந்த வம்பு, தும்புக்கும் போகாதவன்.. என் மேல எப்படி இத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்துச்சுன்னு எனக்கே தெரியலை.. என்னோட கேரியருக்கு ஏற்பட்ட இடைவெளி நிச்சயமா நானா திட்டமிட்டு உருவாக்கினதில்லை. அது தானா உருவானதுதான்.

இப்பக்கூட மாதம் 45000 ரூபாய் வாடகைல ஒரு ஆபீஸ் பிடிச்சு உக்காந்திருக்கேன். யார் வேண்ணாலும் என்கிட்ட கதை சொல்ல வரலாம். காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் என்கிட்ட இதே மாதிரிதான் கதை சொல்ல வந்தாங்க. கதை பிடிச்சிருந்த்தால சட்டுன்னு ஒத்துக்கிட்டேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. படமும் இப்போ முடிஞ்சிருச்சு. அடுத்து, ‘ஜெயிக்கிற குதிரை’, ‘நானும் ரெளடிதான்’ படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கேன்.

என்னைப் பற்றிய தப்பான செய்திகள் வெளிவர்ற மாதிரி நான் என்னிக்கும் நடந்துக்கிட்டதே இல்லை. இனியும் நடக்க மாட்டேன். இங்க சாலிகிராமத்துலதான் என்னோட ஆபீஸ் இருக்கு. கதை சொல்ல வர்றவங்க தாராளமா வரலாம்.. மீடியாக்கள் இதனை கொஞ்சம் வைரலா திரையுலகத்துல கொண்டு போகணும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இதோ நாமளும் சொல்லிட்டோம்..! 

Our Score