தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி. சமீபத்தில் அவர் இதுவரை சினிமாவில் கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அவரது உடைகளோ, நவநாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியதை விட அந்த புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆமாம், நடிகர் அஜீத்குமார்தான் அவரை புகைப்படம் எடுத்த புகைப்பட நிபுணர்.
இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நினைவில் இருக்கும் நடிகர் அப்புக்குட்டி இது பற்றி பேசும்போது, “வீரம்’ படப்பிடிப்பின்போது அஜீத் சார் என்னிடம் ‘தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்தவரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமியப் படங்களை தவிர, நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும்..’ என வலியுறுத்தினார்.
‘என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க..? யார் சார் படம் பிடிப்பாங்க..?’ என்று நானும் கேட்டேன். அப்போது ஏதும் பேசாமல் போனவர், சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து, ‘வர்ற 29-ம் தேதி ப்ரீயா இருந்தா சொல்லுங்க..’ என்றார். நானும், ‘கண்டிப்பா வரேன் ஸார்’னு சொன்னேன். எங்கே, என்ன, எது எனக் கேட்காமல். அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிது. அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போறார்னு..!
அதைவிட ஆச்சரியம் என்னன்னா..? என் உருவ அமைப்புக்கேற்ப கச்சிதமாக தைக்கப்பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப்படுத்தி இருந்தார். ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை.
ஒரு கை தேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும், தொழில் நேர்த்தியும் என்னை பரவசம் ஊட்டியது. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை.
மேலும், என்னுடைய இயற்பெயர் ‘சிவபாலன்’ என்பதைத் தெரிந்து கொண்டு அந்தப் பெயரிலேயே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை ‘சிவபாலன்’ என்றே அழைக்கப்படுவதை விரும்புகிறேன்.
இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். இந்த தாள் என்னால் மறக்க முடியாத ஒரு நாள்…” என்று சிலிர்க்கிறார் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி.