full screen background image

இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்..!

இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்..!

இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறாராம்.

இயக்குநர் சீனு ராமசாமி தற்போதைய தமிழ்த் திரையுலகத்தில் பட்ஜெட் இயக்குநராக பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். அவரை வைத்து படம் தயாரித்த எந்தவொரு தயாரிப்பாளரும், இதுவரையிலும் அவரைப் பற்றி ஒரு குற்றம், குறை சொல்லாத அளவுக்கு நடந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

அதே சமயம் எந்தவிதத்திலும் தரம் குறையாத படங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த தேசிய விருது பெற்ற இயக்குநர்.

கூடல் நகர்(2007), தென்மேற்குப் பருவக் காற்று(2010), நீர்ப்பறவை(2012), இடம் பொருள் ஏவல்(2013), தர்மதுரை(2016), கண்ணே கலைமானே(2019), மாமனிதன்(2020) என்று வரிசையாக படங்களை இயக்கியிருக்கிறார்.

இதில் ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘மாமனிதன்’ ஆகிய படங்கள் மட்டுமே இன்னும் திரைக்கு வரவில்லை. அவைகள் இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது அடுத்தப் படத்திற்கான கதையை தற்போது எழுதி முடித்திருக்கும் சீனு ராமசாமி அந்தக் கதைக்கேற்ற நாயகனாக ஜீ.வி.பிரகாஷை தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க.. கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இத்திரைப்படம் இதுவரையிலும் வெளிவந்த சீனு ராமசாமியின் படங்களில் இருந்து சற்று மாறுதலாக கிராமத்து பின்புலத்தில் ஆக்சன், திரில்லர் கலந்த படமாக உருவாகப் போகிறதாம்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.

Our Score