ரஃப் நோட் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பரத் சீனி தயாரித்துள்ள புதிய படம் ‘கடுகு’. இந்தப் படத்தில் பரத், சுபிக்சா இருவருடன் நடிகரும், இயக்குநருமான ராஜகுமாரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர், இயக்குநரான விஜய் மில்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த ‘கடுகு’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், சக்திவேல், ஞானவேல்ராஜா மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழவில் நடிகர் பரத் பேசுகையில், “நான் என்றைக்கும் சம்பளத்தை இரண்டாம்பட்சமாகத்தான் பார்ப்பேன். முதல்ல எனக்கு என்னோட கேரக்டர்தான் முக்கியம். அதனால்தான் பதினாலு வருஷமா போட்டிகள் நிறைந்த இந்த தமிழ்ச் சினிமாவில் இப்போதுவரையிலும் நிலைத்து நிற்க முடிந்தது. நான் இதுவரையிலும் படம் தயாரிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களுடைய கஷ்டங்களை பார்த்திருக்கிறேன்.
தமிழ்ச் சினிமாவுக்கு இன்னும் நல்ல இயக்குநர்கள்.. நல்ல கதைகள் வேண்டும். இந்த பதினாலு வருசத்துல நானும் நல்ல படங்களை கொடுக்க முயற்சி பண்ணியிருக்கேன். அந்த வகையில் இந்த படம் எனக்கு கிடைத்த நல்ல படம்.
நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று போராடக் கூடிய கிரியேட்டர்களில் விஜய் மில்டன் சாரும் ஒருவர். ‘காதல்’ படத்தில் இருந்தே மில்டன் சார் எனக்கு பழக்கம். ஒளிப்பதிவாளராக பார்த்தது.. பிறகு ஒரு இயக்குநராக என்னை வைத்து ஒரு படம் இயக்கம் செய்தார். ‘கோலி சோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’, ‘கடுகு’வரைக்கும் அவரோட டிராவலை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.
அவர்கூட 2005-ம் ஆண்டு ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தில் நடித்தேன். அதன் பிறகு சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் நான் பணிபுரிந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நன்றி மில்டன் சார். எனக்கு இந்த கதாபாத்திரத்தை நம்பி கொடுத்ததற்கு..!
இந்த படத்தின் கதையை நாலு கதாபாத்திரங்கள் இணைந்து நகர்த்துகின்றன. இதுல புலி வேஷம் போடுற ஒருவருக்கும், பாக்சர் ஒருவருக்கும் இடையே நடக்கும் மெண்டல் வார்.. மைண்ட் கேம் இது போன்ற விஷயங்கள்தான் இந்த படத்துல டிராமாவா இருக்கும். கண்டிப்பா இந்த படம் என் கேரியர்ல சிறந்த படமாக இருக்கும்.
ராஜகுமாரன் சார் பற்றி சொல்லியாக வேண்டும். அவரை இயக்குநராக பார்த்திருப்பீங்க.. ஆனா ஒரு நடிகராக.. அவரே பார்க்காத ஒரு ராஜகுமாரனை, இந்த படத்துல பார்ப்பீங்க. காமெடியனா சில படங்களில் பண்ணியிருக்காரு. ஹீரோவா அவரோட ஜானர் படங்களில் பண்ணியிருக்காரு. ஆனா, ஒரு நடிகராக அவரை வேறு ஒரு கோணத்தில் இந்த படம் பார்க்க வைக்கும்.
இந்தப் படத்தில் விஜய் மில்டன் ஸார் நிறைய உழைக்க வேண்டி இருந்தது. பிஸிக்கலாகவும் சரி, மெண்டலாகவும் சரி. நிறையவும் உழைத்திருக்கிறார். ‘கோலிசோடா’ படத்திலேயும் அப்படித்தான். நாலு பசங்க, ஒரு தாதாவ அடிக்கறது கதை என்று சொன்னால் காமெடியா இருக்கும். ஆனா அதை படமாக ரொம்ப சிறப்பாக எடுத்துக் காட்டியிருந்தார்.
அப்படித்தான் இந்த படத்திலும் எங்க ரெண்டு பேருக்கு இடையே நடக்கும் மேன் டூ மேன் பைட் சில்லியாக இருக்கும். ஆனால், இந்த படத்தோட கிளைமாக்ஸ் காட்சி ரொம்ப பேசப்படும். அந்த அளவுக்கு உழைச்சிருக்கோம். இதற்கான பாராட்டு விஜய் மில்டன் சாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டருக்கும்தான் போகணும். இதை நாங்க ஈஸியா எக்ஸிகியூட் பண்ணிட்டோம்.. ஆனா அதற்கான ஸ்டோரி போர்ட் வேலையே கிட்டதட்ட ஒரு மாதமாக நடந்தது.
நாம நல்ல படம் பண்ணத்தான் போராடுறோம். சக்ஸஸ் வேண்டும்ன்னு நினைத்துதான் போராடுறோம். ஆனால் நல்ல படம் பண்ணாலும் சில படங்கள் சரியாகப் போவதில்லை. சமீபத்தில் வெளியான ‘என்னோடு விளையாடு’ படம்கூட அப்படித்தான் அமைந்தது. அதுக்கு நல்ல தியேட்டர் கிடைக்கல.. சரியான விளம்பரம் இல்ல.. ஆனால் அது முடிந்து போன விஷயம்.
ஆனால், இந்தப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த படத்திற்கு அனைத்தும் சரியான முறையில் கிடைச்சிருக்கு. படம் 2-டி நிறுவனத்திடம் போய் சேர்ந்திருக்கு. அவங்க இந்த படத்தை ரொம்ப நல்ல முறையில கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சூர்யா அண்ணன்… சினிமாவுல எவ்வளவு பேஷனா இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். நடிக்கிறது மட்டுமில்லாமல், இப்ப படம் தயாரிக்கவும் செய்றீங்க. தரமான படங்கள் கொடுக்கணும் என்று உள்ளே வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
சூர்யா அண்ணாவுக்கு நன்றிகள். ராஜசேகர் சாருக்கு நன்றி. ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த படம் அழகானவர்கள் கையில் சேர்ந்திருக்கு, மார்ச் 24-ம் தேதி படம் ரிலீஸ் ஆகுது. பத்திரிகையாளர்களின் சப்போர்ட் எங்களுக்கு வேண்டும், நன்றி..” என்றார்.