தமிழ்த் திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

தமிழ்த் திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வந்த பிரபல திரைப்பட நடிகரான பாலா சிங் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67. 

கடந்த 5 நாட்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்த சிகிச்சையின்போது இதயம், நுரையீரல், கிட்னி என்று அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து போய் நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை 2 மணிக்கு பாலாசிங் காலமானார்.

பாலாசிங் 1952-ம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி பிறந்தவர். நாடக நடிகராகவே பல மேடைகளில் தொடர்ந்து நடித்து வந்த அவரை நடிகர் நாசர்தான் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

1995-ம் ஆண்டு தான் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில்தான் பாலாசிங்கை நடிகராக அறிமுகப்படுத்தினார் நடிகர் நாசர். இதைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளில் சமீபத்தில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் வரையிலும் சுமார் 100 தமிழ்த் திரைப்படங்களில் பாலாசிங் நடித்திருக்கிறார்.

‘இந்தியன்’, ‘ராசி’, ‘புதுப்பேட்டை’, ‘விருமாண்டி’, ‘என்.ஜி.கே.’ போன்ற படங்களில் பல்வேறு  குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பைப் பாராட்டும் வகையில்  தமிழக அரசு இவருக்கு  ‘கலைமாமணி’  விருது கொடுத்து கவுரப்படுத்தியது.

பாலாசிங்கின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடை நாடகக் கலைஞரும் தமிழ் சினிமாவில் பல  வேடங்களில் குணசித்திர நடிகராக நடித்து பிரபலமானவருமான  திரு. பாலசிங் அவர்களது மரண செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்   திரு.பாலசிங் அவர்கள். `புதுப்பேட்டை’, `விருமாண்டி’ படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

அவரது எதிர்பாராத  மறைவு தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்திலும் பங்கு கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்…” என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அவரது வீட்டில், இன்று  மாலைவரை பாலாசிங்கின் உடல் வைக்கப்படுகிறது. பின்பு அவரது உடல், அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

நாளை நாகர்கோவிலில் பாலாசிங்கின் இறுதிக் காரியங்கள் நடைபெறவிருக்கின்றன.

Our Score