“பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு

“பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு

R.P.M. சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கருத்துக்களைப் பதிவு செய்’.

இந்தப் படத்தில் ‘கலையுலகின் இலட்சிய நடிகர்’ என்று போற்றப்பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள்தான்.

ஒளிப்பதிவு – மனோகர், இசை – கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் – சொற்கோ, கலை இயக்கம் – மனோ, படத் தொகுப்பு – மாருதி, நடன இயக்கம் – எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை – D.P.வெங்கடேசன், கதை திரைக்கதை வசனம் – ராஜசேகர், இணை தயாரிப்பு – J.S.K. கோபி,  இயக்குநர் – ராகுல் பரமஹம்சா.

செல்போன்களால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றிய கதை உள்ளடக்கியது இத்திரைப்படம். மேலும் இளைஞர்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ள படமாகவும் உருவாகி இருக்கிறது.

இதனாலேயே இப்படக் குழுவை தொல்.திருமாவளவன் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இயக்குநர் ராகுல் பரமஹம்சா  இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

jsk gopi

விழாவில் இணைத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.கோபி பேசும்போது, “இந்தப் படம் ஒரே இரவில் முடிவான படம். இந்தப் படம் இந்தளவிற்கு வந்ததற்கான காரணம் இயக்குநர் மற்றும் அவரது டீமும்தான். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் படமே தயாரிக்க முடியாது என்ற நிலை இருந்தது. பின் படங்களைத் தயாரித்துவிடலாம். ஆனால் வெளியிடுவதுதான் முடியாது என்றார்கள். இப்போது இசை வெளியீட்டு விழாக்களையும் நடத்த முடியாது என்றார்கள். இது அத்தனையும் சாத்தியமானது இப்படத்தில்தான். அதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி” என்றார்.

EW8A1165

இயக்குநர் ராகுல் பரமஹம்சா பேசும்போது, “வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்தக் ‘கருத்துக்களை பதிவு செய்’ படம் தயாரிப்பாளர் சொன்னது போல ஓர் இரவில் முடிவு செய்த படம். பட்ஜெட் என்பதையும் மனதில் வைத்து நாட்டுக்குத் தேவையான கருத்துள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இப்படத்தின் இயக்குநர் மட்டும்தான் நான். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் ராஜசேகர்தான். இந்தப் படத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதன் பிறகு அதைச் சரி செய்தவர் மோகன் சார்தான். இந்தப் படத்தை சக்சஸ்புல்லா எடுக்க முடிந்ததிற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது.

இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம். அப்படங்களில் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறோம். அதேபோல் இப்படத்தில் நிறைய நல்ல விசயங்களை சொல்லியுள்ளோம். தயவு செய்து அதையெல்லாம் பாலோ பண்ணுங்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இப்படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

k.rajan

தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன் பேசும்போது, “இந்தக் ‘கருத்துக்களைப் பதிவு செய்’ திரைப்படம் ஒரு அற்புதமான ஒரு விசயத்தை தொட்டிருக்கிறது. இந்தப் படம் செல்போனால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசியுள்ளது. இன்று செல்லம் கொடுத்த வளர்த்த பெண்ணை ஒரு அப்பன் செல்போன் வாங்கி கெடுத்து வருகிறான். இன்னொரு பக்கம் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மது என்னும் பூதம் கெடுத்து வருகிறது.

என்னிடம் ஒரு சேனலில் நடந்த நேர்காணலில் இரண்டு பெரிய ஹீரோக்கள் பெயரைச் சொல்லி ‘அந்த நடிகர்கள் கால்ஷீட்  தந்தால் படம் தயாரிப்பீர்களா?’ என்று கேட்டார்கள். ‘சத்தியமாக எடுக்க மாட்டேன்’ என்றேன். அதற்குப் பதில் இப்படியான இளைஞர்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன்.

உதட்டோடு உதடு ஒட்டுவது போல் ஒரு காட்சி இப்படத்தின் ட்ரைலரில் வந்தது. ஆனால் டக்கென்று மறைத்து விட்டார். சந்தோஷம். இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள்கூட ஹீரோயின் உதட்டை கிழித்துவிடுகிறார்கள். ‘குருதிப் புனல்’ படம் ஹீரோயினின் உதட்டை இன்னும் காணவில்லை.

இந்த இயக்குநரின் வெளிப்படையான பேசிய விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தின் நடிகர்கள் டெக்னிஷியன்ஸ் எல்லாம் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் நல்ல கருத்துக்களை பதிவுசெய்ய வருகிறது. அது மக்களின் இல்லங்களையும், உள்ளங்களையும் கவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

‘சென்சார் போர்டு’ என்ற ஒன்றை வைத்து எங்களை சித்ரவதை செய்கிறார்கள். நாயை நாய் என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். அப்புறம் எப்படிடா சொல்ல வேண்டும்.? சென்சாரில் எங்களிடம் மட்டும் இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே. டிவி சீரியல்களில் எவ்வளவு கேவலமான காட்சிகள் வருகிறது. அதையெல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறீர்கள். போஸ்டர் ஒட்டுபவர்களிடம் உள்ள கட்டுப்பாடுகூட தயாரிப்பாளர்களிடம் இல்லை. அதனால்தான் இந்த நிலைமை…” என்றார்.

k.baghyaraj

நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் பேசும்போது, “என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால்தான். எனக்கு ஒரு காட்சி பிடிக்கவில்லை என்றால் அவர் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் அந்த இயக்குநரிடம் இந்தக் காட்சி நன்றாக இல்லை என்று ஓப்பனாகவே சொல்லிவிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன்.

‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்பது பழமொழி. ஆனால், அதுதான் உண்மையும்கூட. பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழியில்லை. பெண்கள் எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்துவிட்டால் அவர்கள் மீதான தவறுகள் நடக்காது.

ஆண்களை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது. ஆண்கள் தவறு செய்தால் அப்படி போயிட்டு, போன போக்குல அப்படியே வந்துவிடுவார்கள். அந்த விஷயத்தில் பெண்கள் தப்பு பண்ணிட்டாங்கன்னா அது மிகப் பெரிய தவறில் கொண்டு போய்விடும். சொல்லும்போது எனக்கே கஷ்டமாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொண்டால், அவர்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவார்கள். அந்தமாதிரி சயமத்தில் பெரிய வீட்டைக் கூட தொந்தரவு செய்ய மாட்டார்கள். இதுவே செய்திகளில் பார்த்தால் பெண்கள் கள்ளக் காதலனுக்காக கணவனைக் கொன்றுவிட்டார்கள்.. குழந்தையையும் கொன்றுவிட்டார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது. இதற்காகத்தான் பெண்கள் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். சுய கட்டுப்பாடும் வேண்டும்.

செல்போன்கள் பாதுகாப்பிற்காகத்தானே தவிர; அது தவறு செய்வதற்காக அல்ல. பொள்ளாச்சியில் தப்பு நடந்தால் அதற்கு ஆண்கள் மட்டும் காரணமில்லை. உங்களது பலவீனத்தை சரியான முறையில் ஆண்கள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டார்கள். அதில், ஆண்கள் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தியதும் தவறுதான்.

இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி வந்திருக்கிறார். அவர் ‘ஏதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள்…’ என்றார்.

ஒரே கோரிக்கைதான். எல்லா தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப் படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்தப் பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காகத்தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், பெண்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப்படுகிறது…” என்றார்.

vijayadharani

சட்டமன்ற உறுப்பினர் திருமதி.விஜயதரணி பேசும்போது, “ஒரு சமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக இந்தப் படக் குழுவினரை பெரிதும் பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால்  தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடப்பட்ட அம்மா திரையரங்கத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும்வகையில் அதை அமைக்கக் கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்பப் போகிறேன்.

மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15 நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கேட்க போகிறேன்..” என்றார்.

Our Score