ஆறடி – சினிமா விமர்சனம்

ஆறடி – சினிமா விமர்சனம்

ஸ்ரீசிவகுடும்பம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன்குமார் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் விஜயராஜ், தீபிகா ரங்கராஜூ, ‘சாப்ளின்’ பாலு, ஜூவிதா, சுப்புராஜ், டாம் பிராங்க், சண்முகம், சுமதி, மாக்கான், ஜெயமணி, பெஞ்சமின், தினேஷ், சிபி பத்ரிநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர்.கே.விஜயன், இசை – அபி ஜோ ஜோ, பாடல்கள் – கண்ணன் பார்த்திபன், ஆரூர் நாடன், கோபால் தாசன், அபி ஜோ ஜோ, இணை தயாரிப்பு – சண்முகம், துரைராஜ், கதை, திரைக்கதை, வசனம் – சக்திவேல், படத் தொகுப்பு – இயக்கம் – சந்தோஷ் குமார்.

குடும்பச் சுமைக்காக ஒரு பெண், ஆண்கள் மட்டுமே செய்து வரும் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேலையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளை எந்த வகையில் சந்திக்கிறாள்..? எப்படி மீள்கிறாள்..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக் கரு.

தமிழகத்தின் ஏதோவொரு குக்கிராமம். அந்தக் கிராமத்திலேயே வெட்டியான் வேலை செய்யும் ஒரே நபர் ‘சாப்ளின்’ பாலு. இவருக்கு மனைவியில்லை. ஆனால் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உண்டு.

மூத்த மகளுக்குக் கல்யாண வயது வந்தும் இன்னமும் திருமணமாகவில்லை. தனது தம்பி, தங்கையை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்த பின்புதான் தன்னைப் பற்றி நினைக்கப் போவதாகச் சொல்கிறார் மூத்த மகளான ‘தாமரை’ என்னும் தீபிகா.

அதேபோல் தம்பியை கல்லூரியில் படிக்க வைக்கிறாள் தாமரை. தங்கையும் பள்ளியில் படிக்கிறாள். திடீரென்று ஏற்படும் ஒரு மின் கசிவு விபத்தில் சிக்கிய அவளது தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறான். அப்பா இந்த மின் தாக்குதலால் ஒரு கை செயல்படாமல் போய் படுக்கிறார்.

இப்போது அந்தக் குடும்பச் சுமை தாமரையின் மீது விழுகிறது. அப்பாவுக்குப் பதிலாக தானே வெட்டியான் வேலை செய்ய முடிவெடுக்கிறாள் தாமரை. அவளது தங்கையான ஜீவிதாவும் தப்பு அடிக்கும் வேலையைத் துவக்குகிறாள். இப்படித்தான் இவர்கள் அந்தக் கிராமத்தில் வாழத் துவங்குகிறார்கள்.

இந்த நேரத்தில் தாமரையை விரட்டி, விரட்டி காதலிக்கிறார் விஜயராஜ் என்னும் பத்திரிகையாளர். உயர் சாதி.. பணக்காரர்.. என்ற எட்ட முடியாத வேறு அடையாளம் இருந்தாலும், ‘அடைந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி’ என்பதைப் போல தாமரையையே சுற்றிச் சுற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் தாமரையும் மனசிரங்கி விஜயராஜின் காதலுக்கு ஓகே சொல்கிறார். வீட்டுக்கு ஒரே மகன் என்பதால் இந்தக் கல்யாணத்துக்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்ளும் விஜயராஜின் பெற்றோர், கல்யாணத்திற்கு வரதட்சணையாக 1 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். கூடுதலாக 10 பவுன் நகையுயைம் கேட்கிறார்கள். தாமரையின் அப்பா பணத்தையும், நகையையும் செய்து கொடுப்பதாக வாக்களிக்கிறார்.

பரிசம் போடும் அன்றைக்கு தான் இதுவரையிலும் சேமித்து வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை பறி கொடுக்கிறார் தாமரையின் அப்பா. இதனால் நிச்சயத்தார்த்தம் பாதியிலேயே நின்று போகிறது. இந்த அதிர்ச்சியில் தாமரையின் அப்பா மரணமடைய.. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சேலத்தில் தற்போதும் ஒரு பெண் தனது குடும்பச் சுமைக்காக வெட்டியான் வேலை செய்து வருகிறார். அதனை கருத்தில் கொண்டே இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இயக்குநர் கூறுகிறார். சிறந்த முயற்சிதான். பாராட்டத்தக்கது.

கிராமத்துக் கதைகளில் வித்தியாசமான படங்களாக வருபவைகளே மிகக் குறைவு. அதிலும் இது போன்ற சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களோடு வரும் படங்களும் குறைவுதான். இந்தச் சூழலில் இத்திரைப்படம் ஒரு புதிய மலர்ச்சியைக் காட்டுகிறது. தமிழ்த் திரையுலகத்தின் கதை சொல்லும் போக்கில் ஒரு தனித் தன்மை இருப்பதையும் இத்திரைப்படம் உணர்த்துகிறது.

‘தாமரை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை தீபிகா ரங்கராஜூ வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இத்தனைக்கும் இவருக்கு இது முதல் படமாம். படத்தில் பார்த்தால் அப்படி தெரியவில்லை.

மிக இயல்பாக.. தன்னுடைய தங்கையின் மீதும், தந்தையின் மீதும் தான் கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும்போதும், காதலை ஏற்காமல் காதலனைத் துரத்தியடிக்க நினைக்கும் சராசரி பெண்ணாக தன்னைக் காண்பிக்கும்போதும், நடிப்பில் இயல்புத் தன்மையைக் காட்டியிருக்கிறார் தீபிகா.

அவர் பேசும் வசனங்கள் முதிர்ச்சியானவைகளாக.. யதார்த்தக் களத்தைச் சுட்டிக் காட்டுபவையாக.. இந்தச் சமூகத்தில் இருக்கும் சாதி என்னும் அரக்கனின் கொடூரத்தைச் சுட்டிக் காட்டும்விதமாய் இருக்கிறது. இவருக்கு பேசப்பட்ட டப்பிங் குரல் மட்டுமே இவருக்கானதாக இல்லை. மற்றபடி நடிப்பில் ஒரு குறையும் இல்லாமல் கொண்டாடப்பட வேண்டிய நடிகையாக காணப்படுகிறார் தீபிகா.

இவருக்குத் தங்கையாக ஜீவிதா. அக்காவின் காதல் காய்ச்சலை அதிகப்படுத்தும்விதமாக அடிக்கடி குத்திக் காட்டிப் பேசுவதும், அக்கா மீதான பாசத்தைத் துளிகூட குறையாமல் திருப்பிக் காட்டுவதும், பேசுவதுமாக.. குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

‘சாப்ளின்’ பாலு மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுடுகாட்டில் ‘கூலியைக் கொஞ்சம் கூட்டிக் கொடுங்க சாமி’ என்று தன்னுடைய இயலாமையை.. தன்னுடைய குடும்பச் சூழலை அவர் வெளிப்படுத்தும்விதம் உருக்கமானது.

எங்கெங்கோ காசைக் கொட்டும் நமது சமூகம், சுடுகாட்டில்கூட பேரம் பேசும் அவலத்தை இத்திரைப்படத்தில் சுட்டிக் காட்டியிருப்பதற்காக, இயக்குநருக்கு நாம் ஒரு நன்றியினைத் தெரிவிக்க வேண்டும்.

வாராது வந்த மாமணிபோல் கிடைத்திருக்கும் மாப்பிள்ளையை விட்டுவிட மனசில்லாமல் நகையையும், பணத்தையும் கொடுக்கிறேன் என்று பதட்டத்துடன் சொல்லி மகளின் கண்களில் பாசக் கண்ணீரை வரவழைக்கும் காட்சியில் நமது மனம் நெகிழ்கிறது.

காதலராக நடித்திருக்கும் விஜயராஜ் பத்திரிகையாளர் கோதாவில் இருந்தாலும், தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நக்கலும், நையாண்டியுமாக பேசும் அத்தையையும், அம்மாவையும் அவ்வப்போது அடக்கிப் பேசும்விதமும், காதலை வளர்க்க காதலியின் வீட்டுக்கே வந்து நாகரிகமாக தனது காதலை வெளிப்படுத்தும்விதத்திலும் நம்மைக் கவர்கிறார். டீக்கடைக்காரரான பெஞ்சமினும் இன்னொரு பக்கம் தனது குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.கே.விஜயனின் ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் படம் என்பதை சொல்லாமல் சொன்னாலும், அதுவே குறையில்லாமலும், தெளிவாகவும் இருப்பதால் அவருக்கு நமது பாராட்டுக்கள்.

அறிமுக இசையமைப்பளரான அபே ஜோ ஜோவின் இசையில் மூன்று பாடல்களுமே மூன்று ரகம். அனைத்து பாடல்களின் வரிகளுமே காதில் தெளிவாகக் கேட்கும்வகையில் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையும் காட்சிக்கேற்ற பீலிங்கை நமக்குத் தருவதைப் போலவே வடிவமைத்திருக்கிறார்கள்.

‘என் உலகமே’, ‘ஏ காதலே..’, ‘சுத்தும் பூமியிலே..’, ‘எங்கே.. எங்கே..’ ஆகிய நான்கு பாடல்களுமே அந்த நேரத்தின் திரைக்கதையைத் தொட்டுச் சொல்லும்விதமாக அமைந்திருப்பதால், பாடல் காட்சிகள் எந்த இடையூறையும் இந்தப் படத்திற்குத் தரவில்லை.

தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் யாருமே தொடாத ஒரு கதைக் களத்தைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் குமார். கதை ஒரே நேர்க்கோட்டில் செல்லும்வகையில் திரைக்கதை அமைத்து.. ஒரு நிமிடம்கூட கதையைவிட்டு அகலாத வண்ணம் திரைக்கதை, வசனத்தையும் அமைத்திருக்கிறார்.

அதேபோல் மிகச் சிறப்பான இயக்கம் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் தலையைக் காட்டியிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களையும் நடிக்க வைத்திருக்கிறார். சாவு விஷயங்களை தொடர்ச்சியாக காட்டும்போதுகூட போரடிக்காதவண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு பெண்ணிய நோக்கிலான அருமையான படமாக இந்த ‘ஆறடி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

இது போன்ற படங்களுக்கு நாம் ஆதரவளித்தால்தான் இவை போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தமிழ்ச் சினிமாவில் வலம் வரும். எனவே இத்திரைப்படத்தை ஆதரிக்க வேண்டியது தமிழ்ச் சினிமா ரசிகர்களின் கடமையாகும்.

அவசியம் இத்திரைப்படத்தைப் பார்த்து ஆதரவு கொடுங்கள் ரசிகர்களே..!

Our Score