ஆண்டவன் கட்டளை – சினிமா விமர்சனம்

ஆண்டவன் கட்டளை – சினிமா விமர்சனம்

தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன். தன்னுடைய முந்தைய இரண்டு திரைப்படங்களையுமே திரைப்பட கல்லூரிகளில் திரைப் பாடங்களாக வைக்க வேண்டிய படைப்புகளாக கொடுத்து கொடை வள்ளலாக ஆகியிருக்கும் இயக்குநர் மணிகண்டன், இதோ இந்த மூன்றாவது படைப்பையும் அதே போல இன்னொரு பாடமாக வைக்க அளித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவுலகம் அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட வேண்டும்..!

நேர்மையாக பயணிப்பது கடினம்தான். ஆனால் அதுதான் நிலைக்கும். குறுக்கு வழி குறுகிய லாபத்தை அளிக்கும். ஆனால் நீண்ட கால சந்தோஷத்தைக் கொடுக்காது. இது அனைவருக்கும் தெரிந்த்துதான். இருந்தும் குறுக்கு வழியில் வெகு சீக்கிரமாக வேலையை முடிக்க வேண்டும். செல்வந்தராக வேண்டும் என்றெண்ணத்தில் இல்லாத்தையும், பொல்லாத்தையும் செய்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.

இடைத் தரகர்கள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர்களின் ராஜ்ஜியம் அனைத்துத் துறைகளிலும் சிலந்தி வலையாக பரவயிருக்கிறது. புரோக்கர்களே இல்லாமல் இன்றைக்கு டிரைவிங் லைசென்ஸோ, பாஸ்போர்ட்டோ, அரசு வேலையில் ஒரு உதவியோ நாம் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் குறுக்கீடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவ்வளவு ஏன்..? ஒரு திரைப்படம் சென்சார் போர்டில் சென்சார் ஆக வேண்டும் என்பதற்குகூட நேர் வழிகள் பல இருந்தும் அந்த சென்சார் போர்டு அலுவலக வாசலில் இருக்கும் புரோக்கர்களே உடனுக்குடன் முடித்துக் கொடுப்பார்கள். என்ன சர்டிபிகேட் வேண்டும்..? அதற்கு என்ன செய்ய வேண்டும்..? பிரச்சினை வந்தால் யாரைப் பார்த்தால் காரியம் நடக்கும்..? என்பதெல்லாம் அந்த புரோக்கர்களுக்கு அத்துப்படி. அதையெல்லாம் சமாளித்துதான் இப்போதைய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அப்படியொரு இடைத்தரகர்களை நம்பிக் கெடும் ஒரு இளைஞனின் கதைதான் இந்த ஆண்டவன் கட்டளை.

காந்தி என்கிற விஜய் சேதுபதி ஒரு பொறுப்பான இளைஞன். பெற்றோரை இழந்தவர். தனது அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய கடனையே இன்னமும் அடைக்க முடியாமல் இருப்பவர். அதற்கு மேலும் தொழில் செய்வதற்காக அக்காவின் நகைகளை வாங்கி அடகு வைத்து தொழில் செய்து நஷ்டப்பட்டு இப்போது கடனில் தத்தளித்து வருகிறார்.

அதே ஊர்க்காரரான நமோ நாராயணன், லண்டன் சென்று 3 வருடங்கள் கழித்து கையில் நிறைய பணத்துடன் ஊர் திரும்பியிருக்கிறார். அவரிடம் ஏதாவது வெளிநாடு சென்றாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் விஜய் சேதுபதி.

நமோ நாராயணன் ஒரு போன் நம்பரை கொடுத்து சென்னைக்கு சென்று அவரைச் சந்தித்தால் அவர் வழிவகை செய்து தருவார் என்கிறார். தனது நண்பனான யோகி பாபுவுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு படையெடுக்கிறார் விஜய் சேதுபதி.

நமோ நாராயணன் சொன்ன புரோக்கர் எஸ்.எஸ்.ஸ்டான்லியை சந்திக்கிறார் விஜய். அவரோ பலவிதமாக விஜய்யை மிரட்டி வைக்கிறார். இங்கிலாந்து சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை புட்டுப் புட்டு வைக்கிறார்.

ஆறு மாத டூரிஸ்ட் விசாவில் லண்டனுக்கு சென்று பாஸ்போர்ட்டையும், விசாவையும் தொலைத்துவிட வேண்டும். போலீஸில் பிடிபட்டால் இலங்கை தமிழர் என்று ஏதாவது ஈழத்தின் ஊர்ப் பெயரைச் சொல்லி சமாளிக்க வேண்டும். லண்டன் போலீஸ் கைது செய்தால் ஒரு ஆறு மாத காலம் சிறையில் அடைப்பார்கள். அதன் பின்பு அகதி அந்தஸ்து கொடுத்து ரிலீஸ் செய்துவிடுவார்கள்.

அதன் பின்பு நமக்கு வேலை கிடைக்கும்வரையில், மாதாமாதாம் ஐம்பதாயிரம் ரூபாயை நம்முடைய வாழ்க்கைச் செலவுக்காக கொடுப்பார்கள். கிடைப்பதில் சேமித்து வைத்து ஊருக்கு வந்து கடனை அடைக்கலாம் என்கிறார் ஸ்டான்லி.

இந்த்த் திட்டத்திற்கு விஜய்யும், யோகி பாபுவும் சம்மதிக்கிறார்கள். ஆனால் இதற்கு முதலில் பாஸ்போர்ட் வேண்டுமே..? பாஸ்போர்ட்டுக்கு முதலில் சென்னையில் தங்கியிருப்பது போல முகவரி சான்று வேண்டுமே..? இதற்காக வீடு தேடி அலையோ அலையென்று அலைந்து ஒரு வீட்டில் குடியேறுகிறார்கள் இருவரும். இவர்களுடன் இலங்கை தமிழரான நேசன் என்பவரும் இணைந்து கொள்கிறார்.

பாஸ்போர்ட்டில் பேச்சுலர் என்று இருந்தால் லண்டனுக்கு விசா கிடைக்காது. டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை கிடைத்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று சொல்லி விசா தர மாட்டார்கள் என்கிறார் ஸ்டான்லி. மாற்று வழியையும் அவரே சொல்கிறார். மனைவி பெயருக்கான இடத்தில் யாராவது ஒரு பெண்ணின் பெயரை ச்சும்மாவாச்சும் போட்டு வைக்கும்படி சொல்ல.. யோகி கார்மேகம் என்கிறார். அதனுடன் குழலியைச் சேர்ந்து கார்மேக குழலி என்று ஆளே இல்லாத மனைவிக்கு பெயர் சூட்டி வைக்கிறார் விஜய்.

ஆனால் விசாவுக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் விஜய் சொதப்பிவிட விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் யோகியின் விண்ணப்பம் ஏற்கப்பட அவர் லண்டனுக்கு பயணமாகிறார்.

அடுத்த முறையான விசா விண்ணப்பம் ஆறு மாதங்கள் கழித்துதான் ஏற்கப்படும் என்பதால் அதுவரையிலும் சென்னையிலேயே இருக்க நினைக்கிறார் விஜய். இதற்காக தனது ஊர்க்கார்ரும், நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் நாசரிடம் நடிப்புக் கலை பயில்பவருமான நண்பரிடம் சரணடைகிறார் விஜய்.

அவருடைய உதவியோடு நாசரின் அலுவலகத்திலேயே அக்கவுண்ட்டண்ட் வேலை பார்க்கிறார் விஜய். இப்போது திடீரென்று நாசர் லண்டனில் தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றம் செய்யப் போவதாகச் சொல்கிறார். இந்தக் குழுவினருடன் விஜய் சேதுபதியையும் அழைக்கிறார்.

லண்டனுக்கு செல்ல ஆசையாக இருக்கும் விஜய் இதற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் பாஸ்போர்ட்டில் அவருடைய மனைவியின் பெயர் இருப்பது இப்போது பிரச்சனையாகிறது. அந்தப் பெயரை நீக்க வேண்டும் என்று நினைக்கிறார் விஜய். இதற்கென்ன வழி என்று கேட்டு மீண்டும் புரோக்கர் ஸ்டான்லியை அணுகுகிறார் விஜய்.

அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார் என்று அவரைக் கை காட்டுகிறார். அந்த நண்பரோ, தனக்குத் தெரிந்த வக்கீலிடம் அனுப்புகிறார். வக்கீலோ யாராவது ஒரு பெண்ணை பிடித்து அழைத்து வந்தால், அவரை கார்மேகக் குழலியாக நீதிபதி முன் நிறுத்தி மியூச்சுவல் டைவர்ஸ் என்று சொல்லி டைவர்ஸ் வாங்கிக் கொடுத்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதை நீக்கிவிடலாம் என்று கிரிமினல் ஐடியா கொடுக்கிறார்.

இந்த நேரத்தில்தான் ஒரு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றும் கார்மேகக் குழலி என்ற பெயர் கொண்ட ரித்திகா சிங்கை பார்க்கிறார்கள் விஜய்யும், நேசனும். இருவரும் ரித்திகாவிடம் பேசுகிறார்கள். முதலில் ரித்திகாவிடம் தனக்குப் பேச்சு வராது என்று சொல்லி ஏமாற்றுகிறார் விஜய்.

பல வழிகளில் ரித்திகாவின் அன்பைப் பெற்று அவர் பெயரிலான வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை பெற்று டைவர்ஸுக்கு முயல்கிறார் விஜய். ஆனால் அன்றைக்கு பார்த்து வேறொரு நீதிபதி  குடும்ப நல கோர்ட்டுக்கு வந்து விசாரிக்க.. நேரடியாக ஆஜராகாமல் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார் புதிய நீதிபதி.

இப்போது நிஜமாகவே ஒரு பெண்ணை அழைத்து வர வேண்டிய கட்டாயம் விஜய் அண்ட் கோ-வுக்கு ஏற்படுகிறது. என்ன செய்தார்கள்..? யாரை அழைத்து வந்தார்கள்..? டைவர்ஸ் கிடைத்த்தா இல்லையா..? பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயர் நீக்கப்பட்டதா இல்லையா..? லண்டன் சென்ற யோகி பாபுவின் நிலைமை என்ன..? விஜய்சேதுபதி லண்டனுக்கு பயணமானாரா என்பதெல்லாம்தான் இந்த சுவையான திரைப்படத்தின் அதி சுவையான திரைக்கதையாகும்.

வெறும் 1300 ரூபாய் செலவில் செய்யப்பட வேண்டிய வேலைக்காக புரோக்கர் ஸ்டான்லி தனக்கு பணம் வேண்டுமே என்பதற்காக கதையைத் திருப்பிவிட.. விஜய்யின் வாழ்க்கையில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள்தான் படத்தின் அடிப்படையான கதை.

புரோக்கர்களை நம்பாதீர்கள். எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி.. அதனை நேர் வழியில் சென்று சந்தியுங்கள். கால தாமதம் ஆனாலும் அதுதான் நமக்கு நல்லது என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.

மூத்த பத்திரிகையாளரான டி.அருள் செழியன் தான் இயக்குவதற்காக வைத்திருந்த இந்தக் கதையை கேட்டு, இம்பரஸ்ஸாகி, தான் இயக்குவதாக அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கதையை வாங்கி பொறுப்பாக, அற்புதமாக இப்படி படமெடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் மணிகண்டனுக்கு முதற்கண் நமது கோடானு கோடி நன்றிகள்..!

படத்தின் துவக்கத்தில் தனது நண்பனான யோகி பாபுவை சைக்கிளில் வைத்து அழைத்து வரும் விஜய் சேதுபதியை, படத்தின் முடிவில் அவருடைய வருங்கால மனைவியான ரித்திகா சிங் தன்னுடைய டூவீலரில் அழைத்துச் செல்கிறார். இதுதான் முதலும், கடைசியுமான காட்சிகள்.. என்னவொரு குறியீடு..!? வாவ்..!

‘தர்மதுரை’க்கு பின்பு விஜய் சேதுபதிக்கு இன்னுமொரு வெற்றிப் படம் இது.  ‘மக்கள் செல்வன்’ என்று பட்டம் பெற்றிருக்கும் விஜய் சேதுபதி, படம் முழுவதையும் தனது நடிப்பால் நிரப்பியிருக்கிறார். காட்சிக்கு காட்சி அவரது இயல்பான நடிப்பால் நகைச்சுவையும் மிளிர்கிறது. கதையோட்டமும் புரிகிறது. கதையும் நகர்கிறது.

நல்ல பண்பட்ட நடிகரைப் போல காட்சிகளில் ஒன்றிப் போய் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தன் மூலமாகவே பல லட்சக்கணக்கான காந்திகளை சற்று யோசிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய அக்காவின் கழுத்தில் எதுவும் இல்லாத நிலைமை.. தன்னுடைய மாமனின் குத்தல் பேச்சுக்கள்.. அத்தனையும் அவரை எப்படியாவது பணம் சம்பாதித்து கடனை அடைத்து, அக்கா நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இந்த நோக்கத்தை தொடர்ந்த பயணத்தில் காந்தியின் தொடர்செயல்பாடுகள் எதுவும் இயல்பு தன்மைக்கு மாறாத நிலைமையிலேயே சென்றிருப்பதால் எதுவும் தவறாகப் படவில்லை. மாறாக தப்பு பண்றானே.. எங்க போய் மாட்டப் போறானோ என்றெண்ணம்தான் ரசிகர்களின் மனதில் எழுகிறது.

ரித்திகா சிங்கிற்கு அதிகம் காட்சிகள் இல்லை என்றாலும், கிளைமாக்ஸில் விஜய் சேதுபதி கேட்கும் கேள்விக்கு அவர் காட்டும் ரியாக்ஷன்கள் செமத்தியான ஆக்சன்.. கோர்ட்டில் ஏதோவொரு உந்துதலில் விஜய்க்கு உதவப் போய் மாட்டிக் கொண்டு பின்பு கவுன்சிலிங்கிலும் கன்னா பின்னா கேள்வியிலால் டென்ஷனாகி தவிப்பதுமாக தனது கேரக்டரில் நியாயப்படியான நடிப்பில் பதற வைத்திருக்கிறார் ரித்திகா. இது இரண்டாவது படம் அல்லவா. நடிப்பு அம்மணிக்கு தானாகவே வருகிறது போலும்..!

பாண்டியாக நடித்திருக்கும் யோகி பாபுவின் சில பல கமெண்ட்டுகள் அப்போதைக்கு சிரிக்க வைத்தாலும் அவைகளும் ஆயிரம் கதைகளைத்தான் சொல்கின்றன. இந்த மூஞ்சிக்கு இப்படியொரு பொண்டாட்டியா..? மெட்ராஸ்ல சொந்த வீடு இருந்தா போதும். எல்லாம் அமைஞ்சிரும் போலிருக்கு என்று அவர் சொல்லும் கமெண்ட்டுகள் ச்சும்மா அல்ல. உண்மையான கமெண்ட்டுதான்..!

ஐ ஆம் எம லண்டன் சிட்டிஸன் என்று எம்பஸி வாசலில் நின்று விஜய்யுடன் சண்டையிடும்போதும், திரும்பி விஜய்யை சந்தித்துவிட்டு ஆட்டோவில் வரும்போது சுத்தி நின்னு பிரிஞ்சு மேய்ஞ்சுட்டாங்க என்று சிங்கள போலீஸை சொல்லிவிட்டு ஓயும்போதும் பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார். இத்தனையிலும் மதுரை பஸ்ல ஏத்திவிடுங்கடான்னா திருப்பதி பஸ்ல ஏத்தி விட்டிருக்கீங்க என்று கோபத்துடன் கேட்டுவிட்டு நடப்பதும் இன்ஸ்டண்ட் காமெடி.

நேசன் என்ற இலங்கை தமிழர் கேரக்டரில் நடித்திருப்பவரின் சிறிது நேர பதைபதைப்பும், அவருடைய நடிப்பும் அந்தக் கேரக்டருக்கு வெயிட் சேர்த்திருக்கிறது. குடியுரிமைத் துறையினர் தேடி வந்த நபர் தான்தான் என்பதை அமைதியாக ஒத்துக் கொண்டு பிரச்சனையை வளர்க்காமல் விஜய் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் அந்தப் பக்குவத்தினால் அந்தக் கேரக்டருக்கே பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

குடியுரிமைத் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஹரீஷ் போரடியின் நடிப்பும் படத்தில் நிச்சயம் பேசப்படும். மலையாளியான இவர் வரும் காட்சிகளிலெல்லாம் இயக்குநரின் அசத்தலான இயக்கத்தினால் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்புக்கு முன் பின் பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை தமிழ்த் திரை ரசிகன் பெறுகிறான் என்பதுதான் உண்மை.

கூத்துப் பட்டறை மு.ராமசாமியின் சாயலில் நாசரின் கூத்துப் பட்டறை ஒர்க் ஷாப். அந்த நாடக்க் குழுவினர். இடையிடையே நாடகம் நடக்கும் சூழல்.. நாசரின் பண்பட்ட நடிப்பு.. விஜய்யின் கடன் தொகையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுவது.. என்பதெல்லாம் படத்துடன் ஒன்றிப் போய்விட்ட உணர்வை காட்டுகிறது.

வக்கீலாக நடித்திருக்கும் ஜார்ஜூம், ஜூனியரான வினோதினியும் ஒரு இனம் புரியாத வக்கீல் பாசத்தை நம் மீது செலுத்தியிருக்கிறார்கள். இனிமேல் வக்கீலிடம் பேசும்போதும் போலீஸைவிடவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இவர்களே உணர்த்தியிருக்கிறார்கள். இடையிடையே சீனியருக்கும், ஜூனியருக்குமான உரசல், நெருடல், சண்டை இதையெல்லாமும் திரைக்கதையில் கொண்டு வந்து நம்மை கலகலப்பாக்கியிருக்கிறார் இயக்குநர்.

வீட்டு புரோக்கரான சிங்கம்புலி, வீட்டு ஓனர், அவருடைய மனைவி, பாஸ்போர்ட் ஆபீலிஸ் தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோவில் பார்த்திருக்கியா என்று கேட்கும் ஆங்கிலேய அதிகாரி.. போலி கையெழுத்தை அட்சரம் பிசகாமல் போடும் தாத்தா.. அழுத்தமான திருடன் என்கிற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு உதாரணமாக நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்க அல்லல்படும் மாமாவாக ஏ.வெங்கடேஷ், ரித்திகாவின் அம்மாவாக நடித்திருக்கும் ராஜலட்சுமி பரமேஸ்வரன் என்று பலரும் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வசனங்களே படத்திற்கு இன்னொரு பலமாகவும் அமைந்திருக்கின்றன. வீடு தேடும் படலத்தின்போது கிடைக்கும் அனுபவங்களே சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. “சம்பாதிக்கறது லண்டன்லேயும் சௌதிலயும். ஆனா முஸ்லீமுக்கும், கிறிஸ்டீனுக்கும் வாடகைக்கு விடமாட்டாங்களா..?”, “சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜெக்ட்..”, “வேலைக்கு விசுவாசமா இருக்கறதா.. இல்லாட்டி வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா..?” என்று விஜய் சேதுபதி கொதிப்பதெல்லாம், வசனத்தின் மூலம் மேலும் கொளுத்துகிறது..!

சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவும், அனு சரணின் படத் தொகுப்பும் படத்திற்கு மிகவும் உதவியிருக்கின்றன. இயக்குநர் திறமைக்காரராக இருந்தால் கூட்டாளிகளின் திறமையும் நன்றாகவே வெளிப்படும். இசையமைப்பாளர் கே-வின் மெல்லிய மெலடி இசையும், இதற்கான மாண்டேஜ் காட்சிகளும் அசத்தல். அதிலும் ரித்திகாவை இவர்கள் துரத்துகின்ற காட்சிகளிலேயே நகைச்சுவை தெறிக்கிறது.  

இயக்குநர் மணிகண்டன் தனது சிறப்பான இயக்கத்தினாலும், சுவையான, உண்மையான திரைக்கதையினாலும் படத்தை போரடிக்காமல் கடைசிவரையிலும் ஒரு செஞ்சதுக்கத்தில் வீர நடை போடும் ராணுவ வீரனை போல நகர்த்தியிருக்கிறார்.

சென்னையில் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பதில் இருக்கும் கஷ்டம்.. வீட்டு ஓனர்கள் செய்யும் அல்ட்ராசிட்டி.. நகரத்துக்கு வரும் புதியவர்கள் வீடு கிடைக்காமல் படும்பாடு என்று அனைத்தையையும் பிட்டு, பிட்டு காட்சிகளில் மிக சுவாரஸ்யமாக தொகுத்தளித்திருக்கிறார் மணிகண்டன்.

இதேபோல் ஒரு தப்பை செய்யப் போய்.. அந்தத் தப்பு எத்தனை தப்புகளை தொடர்ந்து செய்ய வைக்கிறது என்பதையும் சாதாரண பாஸ்போர்ட் விவகாரத்திலேயே பிட்டு, பிட்டு வைத்திருக்கிறார். வெறும் 1300 ரூபாயில் முடிய வேண்டிய விஷயத்தை காசுக்காக திசை திருப்பும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி இருக்கும்வரையிலும் இது போன்று அப்பாவிகள் அல்லல்படுவதும் நடக்கத்தான் செய்யும்.

பொய் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் காந்தி தானே அதிகமாக பேசி விசாவை கெடுத்துக் கொள்வது.. போலி கையெழுத்து தாத்தா, பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லி விவகாரத்து படிவத்தில் மட்டும் கையெழுத்து போடாமல் எஸ்கேப்பாவது. கோர்ட்டில் நீதிபதியின் அழுத்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயங்கும் வாதி, பிரதிவாதிகள்.. குடும்ப நலக் கோர்ட்டில் கியூவில் நிற்கும் இன்றைய இளைய சமூகத்தினர்.. காசுக்காக குடும்பத்தை பிரிக்கவும் தயங்காத வழக்கறிஞர்கள்.. எதைப் பற்றியும் யோசிக்காமல் ஐடியா மட்டுமே கொடுக்கும் ஜூனியர்கள்.. என்று பலதரப்பட்டவர்களையும் உரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஈழத்து அகதியாகவே இருந்தால்தான் என்ன..? அவன் சோகம் அவனுக்கு. ஆனால் நடந்து கொள்ளும் முறை சரியில்லையென்றால் யாராக இருந்தாலும் சொல்லுவோம் என்கிற பாணியில் நேசனின் காபி குடிக்கும் ஸ்டைலை குத்திக் காட்டுவது.. அதே சமயம் அவருடைய சோகக் கதையைக் கேட்டுவிட்டு அவர் ஊமையாக நடித்ததை மன்னித்துவிட்டுவிடுவதுமான திரைக்கதையும் இயக்குநருக்கு பெருமை சேர்க்கிறது.

தானாகவே வந்து சரணடையும் இலங்கை அகதியை போராளியா என்று சந்தேகிக்கும் போலீஸ் என்று நமது ஊடகங்கள் பட்டென்று நியூஸ் போட்டு தாக்குவதையும் விளம்பரப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

நம்முடைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைத்தான் காமெடியும், படபடப்பும், டென்ஷனும், உருக்கமும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.

ஒரு திரைப்படம் கடைசிவரையிலும் பார்க்க வைப்பதோடு, பார்ப்பவரின் மனதுக்கும் ஒரு கனத்தைக் கொடுத்து அதுவரையிலும் அவர் கொண்டிருக்கும் ஒரு கொள்கை தவறு என்று அவரைத் திருத்த முயற்சிக்குமெனில் அந்தப் படமும், இயக்குநரும் நிச்சயம் ரசிகனுக்கு சொந்தமானவர்களே..!  

அந்த வகையில் இந்தப் படம் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்.  

மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

Our Score