full screen background image

“ரகுவரன்தான் என் குரு…” – நடிகர் ஹரிஷ் உத்தமனின் பெருமிதம்..

“ரகுவரன்தான் என் குரு…” – நடிகர் ஹரிஷ் உத்தமனின் பெருமிதம்..

நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘தொடரி’ படத்தில் ராதாரவிக்கு பாதுகாப்பு அளிக்கும் கருப்புப் பூனை படை கமாண்டராக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்திருக்கிறார் நடிகர் ஹரிஷ் உத்தமன்.

தன்னுடைய குடும்பத்தின் போன் கால்களால் வேலை பாதிக்கப்பட்டும் அந்த டென்ஷனை குறைக்க மாத்திரைகளை சாப்பிட்டும் போதாமல், சக மாநிலத்தவளாக இருந்தும் கீர்த்தி சுரேஷின் அலட்சியமும் அவரை அவமானப்படுத்த.. தொடர்ந்து பல சிக்கல்களில் மாட்டித் தவிக்கும் ஹரிஷ் உத்தமனின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் அவருடைய நடிப்பும் ‘தொடரி’ படத்திற்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.

ஹரிஷ் உத்தமனின் இந்த வளர்ச்சி சாதாரணமானதல்ல. 2010-ம் வருட கடைசியில் வெளிவந்த அற்புதமான தமிழ்த் திரைப்படமான ‘தா’ என்கிற ஒரு படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நடிகராக அறிமுகமானார் ஹரிஷ் உத்தமன்.

அந்தப் படம் ரிலீஸான அன்றைய நாள் முதல் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதிலும் அடித்த பேய் மழையில் இந்தப் படமும் ஆத்து வெள்ளத்தில் காணாமல் போன துண்டு பேப்பராகி போனது.

ஒரு விமான சிப்பந்தியாகப் பணியாற்றிவிட்டு நடிப்பின் மீதான ஆர்வத்தில் சினிமாவுக்குள் நுழைந்த ஹரிஸுக்கு முதல் படம் சிறப்பானதாக இருந்தும் படம் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டது அவரது துரதிருஷ்டம்தான்.

அதனால் அவர் துவண்டுவிடவில்லை. ஹீரோ என்றில்லை.. இரண்டு ஹீரோக்களில் ஒருவர். அதுவும் இல்லையா..? வில்லன் கேரக்டராவது கொடுங்க என்று கேட்டு வாங்கி நடிக்கத் துவங்கினார்.

சுசீந்திரனின் ‘பாண்டிய  நாடு’, ‘வில் அம்பு’ படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தார். இப்போது தயாரிப்பில் இருக்கும் சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’, விஜய் சேதுபதியின் ‘றெக்கை’, நயன்தாராவின் ‘டோரா’, விஜய்யுடன் ‘பைரவா’ படம் வரைக்கும் நடித்து வருகிறார்.  

சமீபத்தில் பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

“கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கோவை பகுதியின் வாளையாரில்தான் பிறந்தேன். என்னுடைய பதினெட்டு வயதுவரையிலும் அங்கேதான் இருந்தேன்.  பின்னர் எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாண்மை பணியில் இருந்தேன். அப்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் கேபின் க்ரூவாகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. வேலையில் சேர்ந்து பணியாற்றி வந்தேன்.

அந்த நேரத்தில்தான் என் சகோதரரின் நண்பரான இயக்குநர்  சூர்ய பிரபாகர்,   தான் இயக்கும் ‘தா’ படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க அழைத்தார். எனக்கு முதலில் அந்த அழைப்பு இனிய அதிர்ச்சியாக இருந்தாலும், ஒன்றரை மாதம் நேரம்  எடுத்துக் கொண்டுதான் ‘ஒகே’  சொன்னேன்.  படம் வெளியாகி அப்போது நன்றாக ஓடவில்லையென்றாலும் இப்போதும் அந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டுகிறார்கள். இதுவே எனக்கு சந்தோஷமான விஷயம். 

சுசீந்திரன் சாரோட ‘பாண்டிய நாடு’ படம்தான் எனக்கு ஒரு  நல்ல அடையாளம் கொடுத்தது. அப்புறம் பல படங்கள்.  ‘றெக்கை’ படத்துல நானும் ஒரு முக்கியமான வேடத்துல நடிச்சிருக்கேன். நயன்தாராகூட நடிக்கிற ‘டோரா’  படத்தில் அவங்களுக்கு அடுத்த முக்கியமான கேரக்டர் என்னுடையதுதான். அவங்களுக்கு ஜோடின்னே வைச்சுக்குங்க. ஆனாலும் அவங்களோட எனக்கு டூயட்டெல்லாம் இல்லை.

சுசீந்திரன் தற்போது இயக்கி வரும் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் ஒரு  போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறேன் . பல தலைமுறைகளுக்கு முன்பு பழனி பகுதியில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியைப் பற்றிய படம் அது. ‘பைரவா’ படத்தில் விஜய் சாருடன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இது தவிர தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் பல படங்களில் நடித்துளேன்.

துவக்கத்தில் என் பெயர் வெறும் ‘யு.ஹரிஷ்’தான். அப்பா இறந்த பின்பு அவருக்கு ஏதாவது பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்து, அவர் பேரையும் சேர்த்து ‘ஹரீஷ் உத்தமன்’னு மாத்திக்கிட்டேன். 

ஹீரோ,  வில்லன் என்றெல்லாம் நான் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. கதை, திரைக்கதையில் முக்கியத்துவம் உள்ள எந்த கதாபாத்திரமென்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் எனக்கு குருநாதரா நினைக்கிறது நடிகர் ரகுவரனைத்தான். ஒரு படத்துல ரகுவரன் இருந்தா அவரை அந்த கேரக்டராத்தான் பார்ப்பாங்க. அது நிச்சயம் பேசப்பட்டிருக்கும். அது போலவே நானும் இருக்கணும்னு நினைக்கிறேன்…” என்றார் உற்சாகமாக ஹரீஷ் உத்தமன்.

ரகுவரன்னு சொல்லிட்டீங்க. அதுனால அவரை மாதிரி நடிப்புல ‘மட்டும்’ நல்லா வரணும்னு வாழ்த்துறோம்..! 

Our Score