ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதி ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்கிற ஈரானிய மொழி திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு நமது ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப் பற்றி மக்கள் பொதுவெளியில் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதாலும், இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட கூடாது என்று மும்பையில் உள்ள சன்னி முஸ்லீம் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், இந்த படத்தை இந்தியாவில் வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குநர் கைவிடாததால், இயக்குநர் மஜித் மஜிதி, மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ரசா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி நேற்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் மஜித் மஜிதி ஆகியோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.. என்றும், அவர்கள் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அவர்களின் திருமணமும் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பத்வா பற்றி நமக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல்கள் இவை :
“பத்வா என்பது ஒருவர் இஸ்லாமியை நெறிமுறைப்படி நடக்கிறாரா..? இருக்கிறாரா..? செயல்படுகிறாரா..? என்றெல்லாம் பார்ப்பதுதான். இஸ்லாத்தின் புனித நூலான குரானில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை மையமாக வைத்தே இந்த ‘நெறிமுறைப்படி’ என்கிற வார்த்தை அர்த்தப்படுத்தப்படும்.
அவர்களுடைய செயல் இஸ்லாத்துக்கு அன்னியமானது என்றோ, குரானில் சொல்லப்பட்டிருக்கும் கூடாத விஷயங்களை பின்பற்றுகிறது என்றோ தெரிந்தால் அந்த நபருக்கு, அல்லது அவர்களுக்கு பத்வா என்னும் தடையை விதித்து இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேற்றுவதாக அறிவிப்பார்கள். இதைத்தான் இப்போது இந்த மும்பை சன்னி பிரிவு இஸ்லாம் அகாடமியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பத்வாவை அறிவித்திருப்பது சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாடு முழுவதிலும் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் இதனை ஏற்பார்கள் என்பதற்கில்லை. ரஹ்மானும் சென்னையில் வசிப்பதால் இந்த பத்வாவினால் அவருக்கு எந்தத் தொல்லையும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தை எதிர்த்து அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் ஒன்று திரண்டு போர்க்கொடி தூக்கினால் நிச்சயம் பிரச்சினை வரும்..!” என்றார்.
“அனைவரும் முஸ்லீம்கள்தானே.. அப்புறமென்ன பிரச்சினை..?” என்றால், “இது பல தலைமுறைகளாக இஸ்லாமிய இனக் குழுக்களுக்குள் நடந்து வரும் போராட்டத்தின் வெளிப்பாடுதான் இது. 99 சதவிகிதம் முஸ்லீம் மக்களைக் கொண்ட ஈரானில் 90 முதல் 95 சதவிகிதம் பேர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். 5 முதல் 10 சதவிகிதம் பேர்தான் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்குமிடையே இஸ்லாத்தை அணுகுதல், பின்பற்றுதல் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளும், சிக்கல்களும் இருக்கின்றன.
இந்தச் சிக்கல்களின் தொடர்ச்சியாகத்தான் அதே சன்னி பிரிவைச் சேர்ந்த மும்பை வாழ் சன்னி பிரிவு முஸ்லீம்களின் அமைப்பு இவர்களுக்கு ‘பத்வா’ என்னும் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது…” என்கிறார் அந்த நண்பர்.
இயக்குநர் மஜித் மஜிதி உலகம் முழுவதிலும் அறியப்பட்ட, பாராட்டப்பட்ட புகழ் பெற்ற இயக்குநர். இவர் Baduk, Father, Children for heaven, The colour of paradaise, Baran, The Willo Tree, The Song of Sorrows போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய படங்கள் அனைத்தும் இன்றும் உலக சினிமாக்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இயக்குநருக்கென்றே உலகம் முழுவதிலும் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் உண்டு.
“இப்படிப்பட்டவர் இயக்கும் படத்திற்கு இசையமைப்பது தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்று படத்தின் துவக்கத்திலேயே கூறியிருந்தார்…” ஏ.ஆர்.ரஹ்மான்.
அதிலும் ஒரு இந்துவாக பிறந்து இஸ்லாமாக மாறிய பின்பும் இஸ்லாம் மீது மிகுந்த பற்றுடன் இருக்கும் ரஹ்மானுக்கு இறை தூதர் முகம்மதுவின் பெயரிலேயே ஒரு படம் தயாராவதும், அதில் தன்னுடைய இசை இடம் பெறுவதும் தன்னுடைய வாழ்நாள் பாக்கியம் என்றே கருதி பேட்டியளித்திருந்தார்.
நமது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த மத அடிப்படைவாத சிக்கலை எதிர்கொண்டு பிரச்சினையில்லாமல் தீர்த்துக் கொள்வார் என்றே நம்புகிறோம்..!
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைப்பதுகூட சிக்கல்தான் என்று இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது கடல் கடந்து ஈரானிலும் இதே நிலைமைதான் என்று சொல்லி நம்மை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..!
‘சாத்தானின் கவிதைகள்’ என்கிற நூல் இறை தூதர் முகம்மதுவை அவதூறாகச் சித்தரிப்பதாகச் சொல்லி அதை எழுதிய எழுத்தாளர் சாலமன் ருஷ்டிக்கு ஈரானின் அப்போதைய ஆட்சியாளர் அயதுல்லா கொமேனி ருஷ்டிக்கு ‘பத்வா’ விதித்து அதற்குத் தண்டனையாக அவருக்கு மரண தண்டனையையும் அறிவித்திருந்தார். கொமேனி உயிருடன் இருந்தவரையிலும் சாலமன் ருஷ்டி இங்கிலாந்து அரசின் பாதுகாப்பில் இருந்தார் என்பது உலக வரலாறு..!
மதத்திற்கெல்லாம் மதம் பிடித்தால் இப்படித்தான் நடக்கும்..!