full screen background image

வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களை தயாரிக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்..!

வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களை தயாரிக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்..!

முன்பெல்லாம் “சினிமாவை தயாரிப்பதுகூட சுலபம். ஆனால், அதை வெளியிடுவதுதான் கஷ்டம்…” என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். இப்போதைய கொரோனா காலக்கட்டம் அதையும் தாண்டி “சினிமா தயாரிப்பதுகூட தேவையா..?” என்று கேட்க வைத்துள்ளது.

தயாரிப்பாளர்களின் கையில் 200-க்கும் மேற்பட்ட புத்தம், புதிய திரைப்படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. அப்படியே திறந்தாலும் மக்கள் கூட்டம் பழையபடி வருமா என்றும் பலருக்கும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் அளவுக்கான பணம் தமிழ்த் திரைப்பட துறையில் முடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் தயாரித்த படங்களின் இரண்டாம் பாகங்களைத் தயாரிக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

’அட்டகத்தி’, ’பீட்சா’, ’சூது கவ்வும்’, ’தெகிடி’, ’முண்டாசுபட்டி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான சி.வி.குமார், தற்போது ‘கொற்றவை’ என்ற படத்தைத் தயாரித்து அவரை இயக்கமும் செய்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளும் தற்போது முடிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலைமையில் இதே ‘கொற்றவை’ படத்தின் 2-ம் பாகம், மற்றும் 3-ம் பாகத்தையும் தயாரிப்பதற்கான முஸ்தீபில் இறங்கியிருக்கிறாராம் சி.வி.குமார். அந்த அளவுக்கு ‘கொற்றவை’ படத்தின் கதையில் ஸ்கோப் இருக்கிறதாம்.

இது மட்டுமில்லாமல் ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களின் 2-ம் பாகத்தையும் தயாரிக்க எண்ணி, அதற்கான கதை விவாதங்களையும் நடத்தி வருகிறாராம்.

‘பீட்சா-3’ என்ற ஒரு படமும் தயாராக இருக்கிறது. இந்தப் படத்திற்கும் ‘பீட்சா-2’-வுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் அந்தப் படத்தின் கதையம்சம் தலைப்புடன் பொருந்து வருகிறதாம்.

இதோடு தற்போது சி.வி.குமாரின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘4ஜி’ என்ற படமும், கலையரசனின் நடிப்பில் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ என்ற படமும் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

திரையுலகத்தில் உழைப்பதற்கும், முன் முயற்சி எடுப்பதற்கும் எப்போதும் தயாரிப்பாளர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

இதனால் இந்தக் கொரோனாவையும் கடந்து தமிழ்ச் சினிமா வாழும் என்றே சொல்லலாம்.

Our Score