தமிழர்களின் பூர்வீகக் கடவுளான முருகனின் துதி பாடும் ‘கந்த சஷ்டி கவச’த்தை அப்படியே மாற்றி ‘சூரியன்’ திரைப்படத்தில் ‘பதினெட்டு வயது இள மொட்டு மனது’ என்ற திரைப்படப் பாடலாக உருவாக்கியிருந்தார்கள் சினிமாக்காரர்கள்.
தற்போது அதே ‘கந்த சஷ்டி கவச’த்தில் இடம் பெறும் ‘நோக்க நோக்க’ என்ற வரிகளை படத்தின் தலைப்பாக ஆக்கியிருக்கிறார்கள்.
இந்த ‘நோக்க நோக்க’ படத்தை ஆர்.புரொடெக்சன்ஸ், மற்றும் ஏ.வி.பி.சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் ஆர்.முத்துக்குமார் தயாரித்து, இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம் அர்ஜூன் சுந்தரம் அறிமுகமாகுகிறார். நாயகியாக ஜோதி ராய் நடிக்கிறார்.
இவர்களுடன் கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், அலிஷா, பாவனா, சிந்தியா, பேபி அமுல்ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பண மதிப்பு இழப்புத் திட்ட அறிவிப்பு வந்தபோது நடந்த முறைகேடுகளை தொலைக்காட்சி செய்தியாளரான நாயகி ஆதாரங்களுடன் சேகரித்து வெளியிடுகிறார். இதையறியும் சமூக விரோதிகள் அவரையும், அவரது மகளையும் கொன்று விடுகிறார்கள். ஒரு குழந்தை தப்பிக்கிறது. தப்பித்த அந்தக் குழந்தை அந்தக் கயவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இந்தத் திரில்லர் படத்தின் கதையாம்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இசைத் தட்டை ஜாக்குவார் தங்கம் வெளியிட பி.ஆர்.ஓ. யூனியன் சங்கத் தலைவரான டைமண்ட் பாபு பெற்றுக் கொண்டார்.