full screen background image

இளையராஜாவின் பின்னணி இசை சரியில்லையாம்-இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

இளையராஜாவின் பின்னணி இசை சரியில்லையாம்-இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

பின்னணி இசையில் ‘இசை ஞானி’ இளையராஜாவை அடித்துக் கொள்ள தற்போதைக்கு வேறு ஆளே இல்லை என்று தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், இளையராஜா அமைத்த பின்னணி இசை சரியில்லை என்று சொல்லி அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து பின்னணி இசை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஒருவர்.

இந்த விஷயம் தெரிந்து தமிழ்த் திரையுலகமே அதிர்ச்சியடைந்திருக்கிறது.

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிகண்டன் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் ‘நல்லாண்டி’ என்ற முதியவர்தான் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் விவசாயிகளின் தற்போதைய வாழ்க்கையைச் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜாவைத்தான் இசையமைக்க ஒப்பந்தம் செய்திருந்தனர்.

படம் முழுவதும் தயாரான நிலையில் இளையராஜா அமைத்துக் கொடுத்த பின்னணி இசை இயக்குநர் மணிகண்டனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இளையராஜா அமைத்திருந்த இசையை முழுமையாக நீக்கிவிட்டு, வேறொரு இசையமைப்பாளரை வைத்து புதிதாக பின்னணி இசையமைக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

இந்தப் படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தனக்கு தெரிவிக்காமலேயே இந்தப் படத்தில் இருந்து பின்னணி இசையை நீக்கிவிட்டார்கள் என்று தற்போது இசையமைப்பாளர் சங்கத்தில் இசைஞானி’ இளையராஜா புகார் அளித்திருக்கிறாராம்.

இந்தக் ‘கடைசி விவசாயி‘ படம் முதலில் ஓடிடியில் வெளியாவதாக இருந்து தற்போது தியேட்டரில் வெளியிட முடிவெடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில்தான் ‘இசை ஞானி’யின் இந்த புகார் பிரச்சினை எழுந்துள்ளது.

இதைக் கேள்விப்பட்டு “பார்ரா.. இந்த இயக்குநருக்கு இவ்ளோ தைரியத்தை..?” என்று புருவத்தை உயர்த்தியிருக்கிறார்கள் திரையுலகத்தினர்.

Our Score