விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள ‘புலி’ படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார், சிபு, பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர்.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலி படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கி, விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை, தான் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதை என்றும், தனக்கு உரிய நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என்று தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரான அன்பு செல்வராஜ் மேலும் ஒரு வழக்கு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கத்தி’ பட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படமும் வெளிவர உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இனிமேல் நடைபெறவுள்ளதால் வரவிருக்கும் ‘புலி’ படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியவற்றை இந்த வழக்கு முடியும்வரையிலும் வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த மனு மீது விளக்கம் அளிக்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.