தமிழ் சினிமாவில் ‘சிங்கம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ என மெகா ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவது சீஸனாகி விட்டது. அந்த வரிசையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து ‘மதுரை டூ தேனி வழி : ஆண்டிப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகமாக போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மதுரை டூ தேனி – 2’.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.
பாடல்களை செல்வராஜா எழுத, சரவண கணேஷ் இசையமைத்துள்ளார். நடனம் – தீனா, இருசன், படத் தொகுப்பு – ஆர்.ஜி.ஆனந்த், தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு – டெரிக், நிர்வாகத் தயாரிப்பு – பாலு, ஜெய் கணேஷ்.
போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ். ஜானகி சோணைமுத்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ்வரி, ஜி. ஜானகி, சத்யவாணி அனந்தகிருஷ்ணன். ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.பி.எஸ்.குகன் இயக்கியிருக்கிறார்.
விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் அந்த படம் இயக்கும் கனவு நிறைவேறியதா… இல்லையா… என்பதை காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு தரவிருக்கிறது இந்தப் படம்.
நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் இந்தப் படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.









