full screen background image

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்ற சம்பவம் படமாகிறது..!

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்ற சம்பவம் படமாகிறது..!

CCL அமைப்பின் நிறுவனரான விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films நிறுவனம் இனைந்து 1983-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற புருடென்ஷியல் உலக கோப்பையை வென்ற, இந்திய கிரிக்கெட் அணியை பற்றிய படத்தை தயாரிக்கிறார்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய புகழுக்கு ‘1983’-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற புருடென்ஷியல் உலக கோப்பையை வென்றது ஓர் முக்கியமான காரணம்.  அதுவரையிலும் நடைபெற்ற இரண்டு உலக்க் கோப்பை போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணியே வெற்றி பெற்றிருந்தது. காரணம், அவர்களிடத்தில் இருந்த அதிவேக பந்து வீச்சாளர்கள். உலகத்தின் வேறு எந்த அணியினரும் அவர்களை போல வேகமாக பந்து வீசும் திறன் படைத்தவர்கள் அல்ல.

kapildev-1983-worldcup

இதனால் இந்த மூன்றாவது உலக்க் கோப்பையையும் மேற்கிந்திய தீவுகள் அணிதான் வெல்லும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அடித்துச் சொல்லியிருந்த சூழலில் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து உலக்க் கோப்பையை வெற்றி கண்டது மிகப் பெரிய உலக சாதனையாகும்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ், கவாஸ்கர், மொஹீந்தர் அமர்நாத், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், யஷ்பால் சர்மா, சந்தீப் பட்டீல், கீர்த்தி ஆஸாத், ரோஜர் பின்னி, மதன்லால், சையத் கிர்மானி, பல்விந்தர் சிங் சந்து ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

1983-team-2

இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆக.. இந்திய அணி வெற்றி மகுடம் சூட்டியது.

இந்த வெற்றியை அன்றைய இந்திய நாடு முழுவதுமே கொண்டாடியது. இந்திய பிரதமர் இந்திராகாந்தி இந்திய கிரிக்கெட் அணியினரை தனது வீட்டுக்கே  வரவழைத்து விருந்து வைத்து பரிசளித்தார். இந்திய அரசு தரப்பிலும் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அந்த கோலாகலமான தருணத்தைதான் இப்போது செல்லுலாய்டில் பதிவு செய்யப் போகிறார்களாம். அந்தப் போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது முதல் வெற்றி பெற்றதுவரையிலான சுவாரஸ்யமான கதையை CCL-ன் நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films மது மாடேனா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

1983-team

1983 இங்கிலாந்தில் நடைபெற்ற புருடென்ஷியல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற அனைத்து வீரர்களும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் MOU-வில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த MOU-வின்படி இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களின் நிஜப் பெயர்களையும், சம்பவங்களையும்  பயன்படுத்தலாம் மற்றும் காட்சிப்படுத்தலாம்.

இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 14 வீரர்களில் 3 பேரை தவிர்த்து 11 வீரர்கள் கடந்த ஜூன் பத்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அக்காலம் தொட்டு இன்றுவரை கிரிக்கெட் நமது இந்திய ரசிகர்களால் ஒரு மதமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருவதை பற்றி பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கபில்தேவ், “1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கு கொண்ட எங்களின் பயணம் ஊக்கம் அளிக்க கூடிய ஒன்றாகும். உலகத்தில் நடக்கும் எதை பற்றியும் சிறிதளவும் சிந்திக்காமல் இலக்கு ஒன்றே குறியாக கடுமையாக உழைத்தோம். வெற்றியும் பெற்றோம்..” என்றார். 

1983-team-1

படம் பற்றி தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி பேசும்போது, “இப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வாமாகவும் உள்ளோம்.. இப்படம் எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பாகும் ஏனென்றால் இக்கதையை போல் ஒரு உன்னதமான படைப்பை தயாரிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 2017 முதல் துவங்கவுள்ளது.” என்றார்.

ஒரு வரலாற்றை பதிவு செய்ய வரும் இவர்களை வருக, வருகவென வரவேற்கிறோம்.

Our Score