full screen background image

“வாஸ்துவுக்கு வக்காலத்து வாங்கவில்லை…” – நடிகர் சிபிராஜின் மறுப்பு..!

“வாஸ்துவுக்கு வக்காலத்து வாங்கவில்லை…” – நடிகர் சிபிராஜின் மறுப்பு..!

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம் ‘கட்டப்பாவ காணோம்’.

விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்  சார்பில் தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், சிவக்குமார், வெங்கடேஷ் மற்றும் லலித் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மணி செய்யோன் இந்த படத்தை இயக்குகிறார்.

சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், சாந்தினி, காளி வெங்கட், ‘மைம்’ கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், ‘விஜய் டிவி’ சேது, திருமுருகன், ஜெயக்குமார், டாடி சரவணன் மற்றும் பேபி மோனிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

“ஒரு வாஸ்து மீனை மையமாக கொண்டுதான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படம் நகரும். வெறும் கம்ப்யூட்டர் கிராபிக்சை வைத்து நாங்கள் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால்தான் ஒரு உண்மையான வாஸ்து மீனை, ‘கட்டப்பா’வாக இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம்.

கதை ஓகே ஆன அடுத்த நிமிடமே நான் இந்த வாஸ்து மீனை வாங்கி அதனோடு சுமார் நான்கு மாதமாக பழகி வந்தேன். நாய்களை போலவே மீன்களுக்கும் தங்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தி இருக்கிறது என்பதை அதன் பிறகுதான் நான் உணர்ந்தேன்.

ஒரு பொருளின் மதிப்பானது அதன் விலையில் கிடையாது. என்னதான் வைர கல் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அது நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவில்லை என்றால், நாம் அதை அணிய மாட்டோம். அதே சமயம் விலை மலிவான யானையின் முடி நமக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமானால், அதை நாம் முழு மனதோடு அணிந்து கொள்வோம். அந்த வகையில் நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளத்திலும் எங்களது அதிர்ஷ்ட மீனான கட்டப்பா நீந்தி செல்லும்..” என்கிறார் படத்தின் இயக்குநர் மணி செய்யோன்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “ஜாக்ஸன் துரை’ படத்தை எல்லோரும் வெற்றிப் படமாக ஆக்கியதற்கு நன்றி. இந்த சந்தோஷத்துடன்தான் என்னுடைய அடுத்தப் படமான இந்த கட்டப்பாவ காணோம் படத்திலும் நடித்து முடித்துள்ளேன்.

இயக்குநர் அறிவழகனை போலவே, இந்த இயக்குநர் மணி செய்யோனும் தனித்துவமான கதைகளை இயக்குவதில் திறமை படைத்தவர். இதனை படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

இந்தப் படத்தின் கதையை என்னிடம் இயக்குநர் மணி சொன்ன அடுத்த நொடியே, நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்தப் படத்தில் சென்னையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் ஊழியனாக வருகிறேன்.

இந்தப் படத்தில் நடிக்க நான் சம்மதித்தவுடன் இயக்குநர் மணி செய்த முதல் வேலையே படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் வாஸ்து மீனை வாங்கியதுதான். இந்த மீனை வீட்டிலேயே வைத்து பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறார்.

மீன் தொட்டியில் விரலை வைத்துக் காட்டி மீனை திரும்ப வைக்கவும், ஒரு இடத்திலேயே மீனை நிற்க வைக்கவும் அதற்கு பயிற்சி கொடுத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பில் நான் நன்றாக நடித்திருந்தாலும் மீன் சொதப்பி.. ஷாட் ஓகே ஆகாது. இதுபோல் பல காட்சிகளில் பல டேக்குகள் அந்த மீனுக்காகவே எடுத்துள்ளோம். இப்படி படப்பிடிப்பில் எங்களை பாடாய் படுத்திவிட்டது அந்த வாஸ்து மீன்.

பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டர் பெரிதும் பேசப்பட்டதால் அந்தப் பையரையே இந்த மீனுக்கும் வைத்தோம். கதையைக் கேட்டுவிட்டு என் அப்பா சத்யராஜ் கதைக்கு பொருத்தமான டைட்டில்தான் என்றார்.

எனக்கு இந்தப் படத்தில் ரொமான்டிக் காட்சிகளும் கூடவே முத்தக் காட்சிகளும் உண்டு. இந்தப் படத்தின் மூலம் வாஸ்துவுக்கு நாங்கள் வக்காலத்து வாங்கவில்லை. ஒரு முன்னேற்றத்தை அதிர்ஷ்டம் என்று நினைத்தால் அது அதிரஷ்டம். இல்லை.. நம்முடைய உழைப்புதான் என்று நினைத்தால் அது உழைப்புதான். அவரவர் பார்வையில்தான் எல்லாமும் இருக்கிறது.

முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்கும் ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமானது, எங்களின் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் பக்க பலமாக செயல்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இதுவரை ரசிகர்கள் கண்டிராத புதுமையான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படமானது, குழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் சிபிராஜ். 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தில், இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி (இனிமே இப்படித்தான்), ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா (நவீன சரஸ்வதி சபதம், விண்மீன்கள்), படத்தொகுப்பாளராக சதிஷ் சூர்யா (இறுதி சுற்று, நான்), கலை இயக்குனராக எம். லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக முத்தமிழ், உமாதேவி, நடன இயக்குனராக அசார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக பில்லா ஜெகன் (ஜிகர்தண்டா) ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பம்சமாகும்.

Our Score