தமிழ் சினிமா உலகில் எண்ணற்ற படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் திரைக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் விஜய் கூட்டணியில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படம், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
தனித்துவமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறம் பெற்றவர் ஜெயம் ரவி. சென்ற ஆண்டு அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. அதே போல் படத்திற்கு படம் வித்தியாசங்களை கையாண்டு, தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் இயக்குநர் விஜய்.
இப்படி திறமைக்கு சான்றாக விளங்கும் இந்த இருவரும் கூட்டணி அமைத்திருப்பது, தமிழ் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வண்ணமாக, இந்த இருவர் கூட்டணியோடு இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹாரிஸுன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய நடிகர் ஜெயம் ரவி, “ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணி புரிவதில் எங்கள் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதையில் பல சுவாரசியங்களையும், மக்களின் ரசனைகளுக்கு ஏற்ற பல விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம். இப்படி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எல்லா குணாதிசயங்களும் இந்த படத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் எங்களுடன் கை கோர்த்திருப்பது எங்களுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. அது மட்டுமின்றி, இந்த படத்தை மக்களிடையே பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் வலிமையான தூணாகவும் ஹாரிஸ் திகழ்வார் என்று நம்புகிறேன்.
விரைவில் இந்த படத்துக்கான பாடல்களை தனக்குரிய மெட்லி ஸ்டைலில் இசையமைக்க இருக்கிறார் ஹாரிஸ். அவருடைய இசையில் உருவாகும் பாடல்கள் யாவும் மக்களுக்கு இசை விருந்தாக அமையும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் நடிகர் ஜெயம் ரவி.
இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். விஜய் இதுவரையிலும் இயக்கியிருக்கும் 9 திரைப்படங்களில் 7 திரைப்படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார்.
ஆனால் இந்தப் புதிய படத்தில் புதிதாக ஹாரிஸ் ஜெயராஜுன் விஜய் இணைகிறார். இப்போது ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கும் படங்களுக்கும், மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் மட்டுமே இசையமைத்து வருகிறார். அதோடு அவருடைய இசையும் முன்புபோல் இல்லாமல் ஏனோதானாவென்று வருவதையும் இயக்குநர்கள் கவனிக்காமல் இல்லை.
இதனால்தான் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு பதிலாக ஹாரிஸ் ஜெயராஜை புக் செய்திருப்பதாக கோடம்பாக்கத்து தகவல்.









