“இந்த உலகத்துல கெட்டவங்களவிட மோசமானவங்க யாருன்னா…” என்ற கம்பீர குரலில் ஆரம்பிக்கும் ‘கடுகு’ படத்தின் டீசர்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் மக்கள் இடத்தில் தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்த இயக்குநர் விஜய் மில்டன், இந்த ‘கடுகு’ படத்தை இயக்க, ‘ரஃப் நோட்’ நிறுவனத்தின் சார்பில் பாரத் சீனி தயாரிக்கிறார்.
நடிகர் பரத், இயக்குநர் ராஜகுமாரன் மற்றும் விஜய் மில்டனின் சகோதரரும், தயாரிப்பாளருமான பாரத் சீனி ஆகியோர் இந்த ‘கடுகு’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இரண்டரை நிமிடம் ஓடக் கூடிய இந்த டீஸரில், முதல் ஒன்றரை நிமிடம் பிரபல இயக்குநர்களான சுசீந்திரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நையாண்டியான யோசனைகளை கூற, அதன் பிறகு ஆரம்பமாகிறது டீசர்.
‘கோலிசோடா’ படத்திற்கு பின் என்ன பண்ணலாம் என்று படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் கேட்க, அதற்கு இயக்குநர் சுசீந்திரன், “இறுதிச் சுற்று மாதிரி ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே…?” என்றும், இயக்குநர் பாண்டிராஜ் “பேசமா கோலி சோடா பார்ட்-2-வே பண்ணிடுங்க” என்றும் சொல்கின்றனர்.
அதனை தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் ‘கடுகு’ படத்தின் கதையை நடிகர் பரத்திடமும், நடிகை சுபிக்சாவிடமும் சொல்கிறார். “ஒரு பத்து பேர் உள்ள பஸ் ஸ்டாண்ட்ல, உன்னய மாதிரி ஒரு பையனையும், அவங்கள மாதிரியுள்ள ஒரு பெண்ணையும்தான் நோட் பண்ணுவாங்க. ஆனா மூணாவதா மக்கள் நோட் பண்ண கூடிய ஆள் யாரு..?” என்று கேட்கிறார்.
இருவரும் தெரியாமல் முழிக்க.. “யார் அந்த மூன்றாவது நபர்..?” என்ற ஆர்வம் பார்வையாளர்களின் மனதில் அலைந்து ஓட, அந்த இடத்தில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகரும், இயக்குநருமான ராஜகுமாரன்.
“ராஜகுமாரனையா நடிக்க வைக்க போறீங்க..?” என்று இயக்குநர் லிங்குசாமி ஆச்சரியத்துடன் கேட்க, இயக்குநர் வெங்கட் பிரபுவோ, “அப்படின்னா இந்த ‘கடுகு’ படம் அதிரடியா..? இல்ல.. திகில் படமா..?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார்.
அதனை தொடர்ந்து ராஜகுமாரனை விஜய் மில்டனும் அவரது ‘கடுகு’ படக் குழுவினரும் கதை சொல்ல அணுகுகின்றனர். ஆனால் ராஜகுமாரனோ “நல்லா யோசிச்சீங்களா.. நான்தான் நடிக்கனுமா..?” என்று நையாண்டியாக கேட்கும்விதம் பார்வையாளர்களை கலகலவென சிரிக்க செய்கிறது.
“அவர் நடிப்பதில் அவருக்கே சந்தேகமா..?” என்று இயக்குநர் பாண்டிராஜ், விஜய் மில்டனிடம் கேட்க, “அவரை வச்சி முதலில் ஒரு டீசர் எடுங்க. அது நல்லா ஹிட் ஆச்சுன்னா அப்படியே தொடர்ந்து போங்க..” என்று இயக்குநர்கள் பாலாஜி சக்திவேலும், லிங்குசாமியும் கூறுகின்றனர்.
அப்போது ஆரம்பமாகும் ‘கடுகு’ படத்தின் டீசர், “இந்த உலகத்துல கெட்டவங்களவிட மோசமானவங்க யாருன்னா….” என்ற வார்த்தைகளோடு துவங்கி, “தப்பு நடக்கும்போது ஏன்னு தட்டி கேக்காத நல்லவங்கதான்….” என்ற வார்த்தைகளோடு முடிவடைகிறது.
புலி வேஷம் போட்டிருக்கும் ராஜகுமாரனின் கெட்டப் ‘கடுகு’ டீசரின் ஆரம்பத்தில் கம்பீரமாகவும், இறுதியில் அவர் பார்க்கும் பார்வை, அனைவரையும் சிரிக்க வைக்கும் விதத்திலும் அமைந்திருப்பது ‘கடுகு’ டீசரின் சிறப்பம்சமாகும்.
‘கடுகு’ டீசரை யூ டியூப்பில் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, “விஜய் மில்டனின் கதைக் களம் எப்போதுமே சற்று வித்தியாசமானதுதான். அதை நிரூபிக்கும்விதமாக அமைந்திருக்கிறது இந்தப் படத்தின் டீசர்..” என்றார்.
டீஸரை பார்த்த பிறகு பேசிய இயக்குநர் லிங்குசாமி, “இந்த அளவிற்கு ‘கடுகு’ டீசர் என்னை சிரிக்க வைத்துவிடும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக விஜய் மில்டனுக்கு இந்த ‘கடுகு’ திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும். ‘கடுகு’ படக் குழுவினருக்கும், விஜய் மில்டனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இயக்குநர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடுகு – விஜய் மில்டனின் ஒரு தைரியமான முயற்சி..” என்று எழுதியிருக்கிறார்.
இப்படி பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள் விஜய் மில்டனின் ‘கடுகு’ டீசருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பல சுவாரசியங்களை உள்ளடக்கியுள்ள ‘கடுகு’ திரைப்படம் மக்கள் மனதிற்கு பிடித்த திரைப்படமாக இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்தப் பரபரப்பை ஊட்டியிருக்கும் ‘கடுகு’ படத்தின் டீஸர் இதுதான் :









