full screen background image

‘ஒரு கனவு போல’ படத்தின் முன்னோட்டம்

‘ஒரு கனவு போல’ படத்தின் முன்னோட்டம்

இறைவன் சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல.’   

இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, சுப்ரமணி, கவி பெரியதம்பி, வின்னர் ராமச்சந்திரன்,  ஸ்ரீலதா,  பாலாம்பிகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.  கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு   –   அழகப்பன்.N.  இசை – E.S.ராம், பாடல்கள் – புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், கலை – M.D.பிரபாகரன், எடிட்டிங் – சாபு ஜோசப், சண்டை பயிற்சி – தியாகராஜன், நடனம் – எஸ்.எல்.பாலாஜி, ஒலிப்பதிவு – ஜி.தரணிபதி, தயாரிப்பு மேற்பார்வை – எம்.செந்தில், தயாரிப்பு – சி.செல்வகுமார், எழுத்து, இயக்கம் – வி.சி.விஜயசங்கர்.

இவர் ‘பாரதி கண்ணம்மா’, ‘ அழகி’,  ‘மறுமலர்ச்சி’,  ‘ஆட்டோகிராப்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘23-ம் புலிகேசி’, ‘பாண்டவர் பூமி’, உட்பட ஏராளமான வெற்றிப் படங்களில் பணியாற்றிய இணை இயக்குநர்.  இவர் இயக்கும் முதல் படம் இது. இவர் சில படங்களில் வசனம் எழுதியதோடு, பாடல்களையும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குநர்  விஜயசங்கர் கூறும்போது, “லாரி டிரைவராக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கும், சினிமாவில் பாடகராக வேண்டும் என்று லட்சியத்துடன் வாழும் சௌந்தர்ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையை சொல்லும் படம் இது.

வாழ்க்கையே ஒரு கனவு போல – ஆனால் அதில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும் ஒரு கவிதை போல என்கிற உயரிய, யதார்த்த கருத்தை பதிவு செய்யும் படம் இது.

கணவன், மனைவி உறவின் உன்னதங்களை, உள்ளுக்குள் இருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் படம் இது. இந்த கதை எல்லோரது வாழ்க்கையிலும் நடந்த கதை..! ஆனால் அதை யாரும் வெளியில் சொல்லாத கதை..!

படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாகுமரி, கொடைக்கானல், சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது..” என்றார்.

Our Score