தன்னுடைய சிறப்பான எழுத்தாலும், இயக்கத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பதித்து, மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் விஜய். சென்டிமெண்ட், காமெடி, காதல், அதிரடி என அனைத்து வகை படங்களிலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய முந்தைய படத்தின் சாயல் இல்லாமல் இயக்கும் பிரத்தியேக பாணியை கடைபிடிக்கும் இயக்குநர் விஜய், தற்போது ‘DEVI(L)’ என்னும் திகில் கலந்த தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் பிரபுதேவா – தமன்னா – சோனு சூட் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.
நடனம் மட்டும் இல்லாமல், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளில் முன்னோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் நடனப் புயல் பிரபுதேவா, இந்த படத்தில் பத்து வருடங்கள் கழித்து கதாநாயகனாக நடிப்பது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
‘தோழா’ படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் எல்லோர் மனதையும் கவர்ந்த தமன்னா மற்றும் ‘அருந்ததி’ படத்தின் மிரட்டலான வில்லனான சோனு சூட் ஆகிய இருவரும் இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளனர்.
இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வண்ணமாக இயக்குநர் விஜயோடு இணை கதாசிரியராக கை கோர்த்திருக்கிறார், உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் – கதாசிரியர் பவுல் ஆரோன்.
1999-ம் ஆண்டு வெளியான ‘இன் டூ டீப்’ என்னும் ஹாலிவுட் வெற்றி திரைப்படத்தை தயாரித்து, அதற்கு கதை எழுதியவர் பவுல் ஆரோன். அது மட்டுமில்லாமல் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களான ‘அண்டர் ஒன் ரூப்’, ‘ரோனி’ஸ் காட் எ கன்’, ‘பைலட்’ போன்ற பல புகழ் மிக்க தொடர்களிலும், படங்களிலும் இவர் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பேசிய இயக்குநர் விஜய், “இந்தத் தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘சைவம்’ திரைப்படத்தின் சவுண்ட் ரெகார்டிங்கில் இருக்கும்போதுதான் குணல் ராஜன் என்னும் ஹாலிவுட் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் மூலம் பவுல் ஆரோனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது நாங்கள் இருவரும் ‘சைவம்’ படத்தை பற்றி கலந்துரையாடினோம்.
தற்போது ஆரோனே முன் வந்து எங்கள் படத்திற்காக கதை எழுதுவதை நினைக்கும்போது மெய்சிலிர்த்து போயிருக்கிறேன். இதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கு வேறெதுவும் இருக்க முடியாது..” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறுகிறார்.
திரைக்கதையை மெருகேற்றுவதற்காக உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் ஒரு ஜாம்பவானுடன் இயக்குநர் விஜய் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தற்போது ‘DEVI(L)’ திரைப்படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் வானளவு அதிகரிக்க செய்திருக்கிறது.









