full screen background image

டெவில் – சினிமா விமர்சனம்

டெவில் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மாருதி பிலிம்ஸ், ஹெச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன், ஹரி, ஞானசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், மிஷ்கின், ரமா, சுபஸ்ரீ  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவுகார்த்திக் முத்துக்குமார், படத்தொகுப்புஇளையராஜா, கலை இயக்கம்ஆண்டனி மரிய கெர்லி, பாடல்கள்மிஷ்கின், ஒலிக்கலவைதபஸ் நாயக், ஒலி வடிவமைப்புஎஸ்.அழகியகூத்தன், இணை இயக்கம்ஆர்.பாலசந்தர், கலரிஸ்ட்ராஜராஜன் கோபால், சண்டை இயக்கம்ராம்குமார், உடைகள் வடிவமைப்புஷமிமா அஸ்லம், புகைப்படங்கள்அபிஷேக்ராஜ், விளம்பர வடிவமைப்புகண்ணதாசன், VFX – ARTFX STUDIO VFX supervisor – டி.மாதவன், பத்திரிக்கை தொடர்புசதீஷ்குமார்.

இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். ‘சவரக்கத்தி’ இயக்குநரான ஆதித்யா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்என்னும் நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

டெவில்என்ற தலைப்பைப் பார்த்தவுடன் பேய்ப் படமாக இருக்குமோ என்று நினைத்தால் அது தவறு. பேயில்லாமல் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் டைப்பில் கடவுளையும் இணைத்து கதையையே மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இது வேற எந்த சினிமாவிலும் பார்த்திருக்கவே முடியாது.

தொடர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும்தான்  இந்தப் படத்தின் கதையை ஊகிக்க முடியும். அல்லது இதுதான் கதை என்று உணர்ந்து கொள்ள முடியும். அப்படியொரு கதை, திரைக்கதையில் இந்தப் படத்தை  உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.

பிரஸ் ஷோ முடிந்ததும் பத்திரிகையாளர்கள் இயக்குநர் ஆதித்யாவிடம் படத்துல விதார்த் செத்துட்டாரா..? இல்லையா..?” என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்தப் படத்தின் கதை பத்திரிகையாளர்களுக்கே புரிந்திருக்கிறது என்றால் படத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

பத்திரிகையாளர்களுக்கே இப்படியொரு குழப்பம் வந்தது என்றால் சாதாரண பொது மக்களுக்கு என்னென்ன குழப்பமெல்லாம் வந்திருக்கும்ன்னு தெரியலை..!

விதார்த்துக்கும், பூர்ணாவுக்கும் கல்யாணம் நடக்குது. பர்ஸ்ட் நைட்லயே பாதில எந்திரிச்சு தன்னோட கள்ளக் காதலியை பார்க்க ஓடுறாரு விதார்த். இந்தக் கள்ளக் காதல் விஷயம் பூர்ணாவுக்கு ஒரு நாள் தெரிஞ்சு அவங்க ரொம்ப அதிர்ச்சியாகி வீட்டுக்கு கார்ல போறாங்க.

அந்த நேரத்துல பூர்ணாவோட கார்ல ஆதித் அருண் தன்னோட பைக்ல வந்து மோதுறார். அவருக்கு அடிபடுது. அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்து சிகிச்சை கொடுத்து வீட்டுக்குக் கொண்டு போய்விடுறாங்க பூர்ணா.

அதுக்கப்புறமும் அவர் மேல இருந்த பாசத்துல வீட்ல இருந்து சாப்பாடெல்லாம் கொண்டு போய் குடுக்குறாங்க பூர்ணா. இதை அட்வாண்ட்டேஜா எடுத்துக்கிட்டு அருண், பூர்ணாவை நெருங்க.. அதை ஏத்துக்க முடியாமல் தவிக்கிறாங்க பூர்ணா.

அன்னிக்கு ராத்திரியே விதார்த் வீடு திரும்பி பூர்ணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சரண்டராகுறார். அடுத்த நாள் நடு ராத்திரில அருண் திரும்பவும் பூர்ணாகிட்ட வந்து காதல் மொழி பேசுறார்.

இந்த நேரத்துல விதார்த்தும் கண் முழிச்சு வந்து பார்க்க என்ன, ஏதுன்னு கேட்காமலேயே விதார்த் அருணை தாக்கத் தொடங்க.. இருவருக்குமிடையில் மோதல் துவங்குகிறது. இனியென்ன என்பதுதான் இந்த ‘டெவில்’ படத்தோட திரைக்கதை.

பூர்ணா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். முக்கால்வாசி காட்சிகளில் அவருடைய முகத்துக்கு குளோஸப் ஷாட்டுகளையே வைத்திருப்பதால் அவரது நடிப்பை இன்ச் பை இன்ச்சாக நமக்குக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். மிகவும் ரசிக்க முடிந்திருக்கிறது பூர்ணாவை..! வெறுமனே முகத்தைக் காட்டியே ரசிகர்களை சொக்க வைக்கலாம் என்பதற்கு இந்தப் படமும், பூர்ணாவுமே ஒரு உதாரணம்..!

மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டு, மனைவியிடம் மாட்டிக் கொண்டவுடன் சட்டென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கணவனாகும் விதார்த்தின் கேரக்டர் ஸ்கெட்ச் நெருடலாக இருந்தாலும் காட்சிப்படுத்தலில் ஒரு உண்மைத்தனம் இருப்பதால் ‘ஓகே’ சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும், முதல் இரவு நேரத்திலேயே கள்ளக் காதலியைப் பார்க்க ஓடுவதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை இயக்குநரே..!

அம்மாவின் அன்புக்காக ஏங்கும் பேச்சுலரான அருணுக்கு புதியதொரு பெண்ணின் அன்பும், பாசமும் கிடைத்தவுடன் அவர் மனமும் ஆணாதிக்கத்தை நோக்கி ஓடுவதை திரைக்கதையில் வலுவாக எழுதாமல்விட்டதால் இந்தக் கதாப்பாத்திரம் வில்லனாகிவிட்டது. ஆனால் அருணின் நடிப்பில் குறையில்லை.

பூர்ணாவின் அம்மாவான ரமாவின் அந்த கதறல் அந்த நேரத்திய சோகத்தை வலிந்து ஏற்படுத்த வைக்கப்பட்ட திரைக்கதை என்பது அடுத்தடுத்த காட்சிகளில் தெரிகிறது.

படத்தில் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் அற்புதம் என்றே சொல்ல்லாம். ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் வித்தியாசமான கோணங்களில் காட்சிகளை லட்டுபோல் படமாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் அடுத்தடுத்த காட்சிகள் வேறுவேறு கோணங்களில் தென்படுவதால் திரைக்கதையில் சோர்வில்லை. ஈர்ப்பாகத்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சியைப் படமாக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது. சிற்சில இடங்களில் பேய்ப் படம் போலவே மிரட்டியிருக்கிறார்கள்.

இசையமைத்திருக்கும் மிஷ்கின் தனக்கு மிகவும் பிடித்தமான வயலின் இசையை படம் நெடுகிலும் அள்ளித் தெளித்திருக்கிறார். சில இடங்களில் பின்னணி இசை இல்லாமல் மெளனித்தும் இருக்கிறார். கலவிப் பாடல் கேட்க வைக்கிறது..!

இன்னொரு பாராட்டுக்குரிய விஷயம்.. சவுண்ட் டிசைனிங்கும், சவுண்ட் மிக்சிங்கும் அட்டகாசம் செய்திருப்பதுதான். ஒரு சின்ன ஒலியைக்கூட மிஸ் செய்யாமல் பதிவு செய்திருக்கின்றனர்.

சின்னதா போஸ்ட் கார்டின் பின் பக்கத்துல எழுத முடிஞ்ச கதைதான். திரைக்கதையும் அவ்வளவுதான். ஆனால் தெளிவில்லாத திரைக்கதை என்பதால் படமே முழுமையடையாமல் இருக்கிறது. கதை சொல்லலில் மீதியை நீங்களாக புரிந்து கொள்ளுங்கள் என்பதுபோல படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு காட்சியை மட்டும் இயக்குநர் இதில் வைத்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும். தியேட்டரைவிட்டு வெளியில் வரும்போது அவ்வளவு சந்தோசமா சொல்லி இருப்பார்கள். மிஸ் செய்துவிட்டார் இயக்குநர்.

மிஷ்கின் பூர்ணாவிடம் “போய் உன் புருஷனை காப்பாத்து” என்று சொன்னவுடனேயே ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த பூர்ணா திடீரென்று கண் விழித்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் கணவன், அருண் இருவரையும் தடுத்திருந்தால் அதுவொரு கனவு என்று நாம் ஊகித்திருக்கலாம்.

ஆனால் இந்தக் காட்சியை வைக்காமல் திடுதிப்பென்று பேக் டூ பேக்காக காட்சிகளை கொண்டு வந்து இடையில் திடீரென்று பூர்ணா சண்டையை தடுப்பதுபோல வைத்திருப்பதால் ரசிகர்களுக்குப் பெரும் குழப்பம் வந்துவிட்டது.

இந்தக் குழப்பம் வந்ததற்கு காரணம் மிஷ்கின்தான். அவரது கேரக்டர் முழுமையாக விவரிக்கப்படவில்லை. படம் முடிந்து வெளியில் வந்து இயக்குநரிடம் கேட்டதற்கு “மிஷ்கினை கடவுளாகக் காட்டியிருக்கிறேன்…” என்றார். அவர் கடவுள்தான் என்பது இயக்குநருக்கு மட்டும் தெரிந்தால் போதுமா..? பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டாமா இயக்குநரே..?

இந்தப் புரிதல் இல்லாத்தினாலேயே படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த முக்கியமான கேள்வியே படத்தின் ஹீரோவான விதார்த் படத்துல இறந்துட்டாரா..? இல்லையா..? என்பதுதான்..!

இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காததால்தான் ‘சவரக்கத்தி’ படத்திற்குக் கிடைத்த ஒட்டு மொத்த கவன ஈர்ப்புகூட, இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை என்பதை இயக்குநரும், தயாரிப்பு குழுவும் புரிந்து கொள்ள வேண்டும்.

படத்தின் மேக்கிங் மிக சிறப்பு. குறையே சொல்ல முடியாது. ஆனால் திரைக்கதையில்தான் வில்லங்கமே நடந்துள்ளது. தனது அடுத்தடுத்த படங்களில் இயக்குநர் ஆதித்யா இதை சரி செய்து கொள்வார் என்று நம்புகிறோம்.

RATING : 3 / 5

Our Score