சமீபத்திய கன்னட சினிமாவில் புதிய பாதையைக் காட்டி வெற்றி பெற்ற திரைப்படம், ஷரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்த ‘யூ டர்ன்’.
இந்தப் படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்று, மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஷரதா, தற்போது ‘பிரேமம்’ புகழ் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
தமிழில் அறிமுகமாவது பற்றிப் பேசிய நடிகை ஷரதா, “ராணுவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் எனக்கு பல தரப்பு மக்களுடனும் பேசிப் பழகும் சூழ்நிலையும், பல்வேறு மாநில மக்களின் கலாச்சாரங்களை கற்று கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
அடிப்படையில் சட்டம் பயின்று, வழக்கறிஞராக பணி புரிவதால், வாழ்க்கையின் மதிப்புகளையும், சவால்களையும் நான் நன்கு அறிவேன். இது ஒருபுறம் இருந்தாலும், நாளுக்கு நாள் எனக்கு சினிமாவின் மேல் இருக்கும் ஈர்ப்பு அதிகமாகி கொண்டே போனது. அதுவே என் நடிப்பு ஆர்வத்தை மேம்படுத்தும்விதமாக நாடகங்களில் கவனம் செலுத்தி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தது.
அந்த அனுபவங்கள்தான் எனக்கு ‘யூ டர்ன்’ என்னும் கன்னட படத்திலும், தற்போது புதுமுக இயக்குநரான கௌதம் இயக்கும் இந்த தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பினை பெற்றுத் தந்தது.
பெங்களூரில் பிறந்த எனக்கு தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் சினிமா மீதும் ஒரு தனி மரியாதை உண்டு. இந்த படத்தின் மூலம் என்னை தமிழ் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..” என்கிறார்.
நிவின் பாலியுடன் ஜோடி சேரும் கதாநாயகிகள் அனைவரும் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால், ஷரதாவும் அந்த வரிசையில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.










