full screen background image

“இப்பவும் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்…” – நடிகர் யுகேந்திரன் பேட்டி

“இப்பவும் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்…” – நடிகர் யுகேந்திரன் பேட்டி

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகனான நடிகர் யுகேந்திரன் தனது தந்தையின் மரணத்திற்கு பின்பு கொஞ்ச காலம் சிங்கப்பூரில் குடியிருந்தவர், இப்போது மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியிருக்கிறார்.

ஏற்கெனவே ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் வில்லனாக திரையுலகத்திற்கு அறிமுகமானார் யுகேந்திரன். அதன் பிறகு பல படங்களில் நடித்திருக்கும் யுகேந்திரன், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு திரையுலகத்திற்குள் நுழைவது குறித்து பேட்டியளித்துள்ளார்.

இது பற்றி பேசிய நடிகர் யுகேந்திரன், “பிறப்பிலேயே சினிமா வரம் பெற்று வந்த நான் எனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்க நினைத்தேன். பல நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகனாக என்னை நிலைநிறுத்திக் கொண்டேன். ஆனால் சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது, அதன் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் தமிழ் நாட்டிலும் எனது குடும்பம் சிங்கப்பூரிலும் என இருந்ததுதான் எனக்கு பின்னடைவாக இருந்தது. அடிக்கடி நான் என் குடும்பத்தை பார்க்க சிங்கப்பூர் சென்று விடுவதாகவும் இதனால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இது முற்றிலும் பொய். நான் என் குழந்தைகளின் விருப்பத்துக்காக மட்டுமே சிங்கப்பூரில் தங்க நேர்ந்தது. 2013-ம் ஆண்டு ‘விழா’ என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்து படத்தில் டப்பிங் பேசி முடிக்கும்வரை நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை. படத்தை முடித்து கொடுத்தபின்தான் சென்றேன்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நான் சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டேன், அதற்குள்ளாக சிலர், ‘இனி யுகேந்திரன் இந்தியா வர மாட்டாராம்’ என்றெல்லாம் கதை கட்டிவிட்டுள்ளார்கள். இதோ நான் என் தமிழ் சினிமாவுடன் மீண்டும் இணைய வந்துவிட்டேன்.

இது என்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் பணத்துக்காக எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்ளாமல். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்..” என்கிறார்.

Our Score