full screen background image

கூத்துக் கலைஞர்கள் பற்றிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் ‘காதல்’ சுகுமார்..!

கூத்துக் கலைஞர்கள் பற்றிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் ‘காதல்’ சுகுமார்..!

’திருட்டு விசிடி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற நடிகர் காதல் சுகுமார், இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘சும்மாவே ஆடுவோம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில், தற்போது நலிவடைந்து வரும் கூத்துக் கலை பற்றியும் கலைஞர்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

45 காமெடி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்டமான காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அருண் பாலாஜி நாயகனாகனாக நடிக்கிறார். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலாசிங், பாண்டு, ராபர்ட், யுவரானி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி காதல் சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சதிஷ் பி.கோட்டாய் படத்தொகுப்பு செய்கிறார். கலைத் துறையை மதூர் எஸ்.சிவா கவனிக்க, டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். முருகன் மந்திரம், அஸ்மின் ஆகியோர் பாடல்கள் எழுத, தினா, ஜாய் மதி, பாலகுமாரன், ரேவதி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகத்தை சார்லஸ் கவனிக்க, மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

படம் குறித்து கூறிய இயக்குநர் காதல் சுகுமார், ”கூத்துக் கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்தக் கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.

நலிவடைந்த கூத்துக் கலைஞர்களைப் பற்றிய கதை என்பதால், இதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையான படமாக சொல்லியிருக்கிறேன்.

கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்துக் கலைஞர்களுக்காக வீட்டு மனைகளை இலவசமாக கொடுக்கிறார். அதன்படி கூத்துக் கலைஞர்கள் வாழும் அந்த கிராமத்திற்கு ‘கூத்துப் பேட்டை’ என்று பெயர். கூத்து தொழிலை விட்டால் வேறு ஏதும் தெரியாத அந்த மக்கள், நவீன கால வளர்ச்சிக்கு போட்டி போட முடியாமல் தடுமாறும் நேரத்தில், ஜமீன் அவர்களுக்கு இலவசமாக கொடுத்த அந்த இடத்திற்கு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை அவர்கள் எப்படி எதிகொள்கிறார்கள் என்பது காமெடியாக சொல்லியிருக்கிறோம். 

கூத்து என்பது நாகரீக வளர்ச்சியால் அழிந்து வந்தாலும், தற்போது மறைமுகமாக சினிமாவில் கூத்து கலையின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்..” என்றார்.

இப்படத்தின் கதை மூன்று காலகட்டத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான காட்சிகளை படமாக்கியுள்ள காதல் சுகுமார், சில காட்சிகளை ஒரே ஷாட்கள் மூலமாகவும் படமாக்கியுள்ளாராம். 

ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Our Score