Capital Film Works நிறுவனத்தின் சார்பில் S.P.சரண் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ள ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படம் வரும் ஜூன் 26-ம் தேதி வெளிவரவுள்ளது.
நகைச்சுவை கலந்த காதல் படமாக தயாராகியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள், அனுபவசாலிகள் என தங்கள் நடிப்பால் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வருகிறார்கள் ‘மூணே மூணு வார்த்தை’ படக் குழுவினர்.
மேடை நாடக கலைஞரான அர்ஜுன் சிதம்பரம் இப்பாடத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
தனது கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறுகையில், “நமது அக்கம் பக்கம் வீடுகளில் தினமும் பார்க்கும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அர்ஜுன் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது நிஜத்திலும் என்னுடன் ஒத்துபோகும் கதாப்பாத்திரம் என்பதால் நடிப்பதற்கு எனக்கு எளிதாய் இருந்தது.
S.P.B. சார் மற்றும் லட்சுமி மேடம் ஆகியோருடன் முதல் நாள் நடிப்பதற்கு மிகவும் படபடப்பாய் இருந்தது. படத்தில் SPB சார் எனக்கு தாத்தாவாக வருகிறார் அவரை ‘தாத்ஸ்’ என்று செல்லமாக அழைப்பேன். இப்பொழுது அதுவே பழக்கமாகிவிட்டது.
S.P.B. சார் பாடலுக்கு நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது, எனினும் இப்படத்தில் ஒரே ஒரு மாண்டேஜ் பாடல்தான் பாடியுள்ளார். எனது அடுத்த படங்களில் இக்கனவு நிறைவேறும் என நம்புகிறேன்.
S.P.B. சார், லட்சுமி மேடம் இருவருடனும் பழகுவது முழு என்சைக்கிலோப்பீடியா படிப்பதுபோல் இருந்தது. ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து நடிப்பார்கள். இடையிடையே நான் நடிக்கவும் விட்டுக் கொடுப்பார்கள்.
மேடை நடிப்பிலிருந்து கேமிரா முன் நடிப்பதற்கும் இருக்கும் நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு சிறிது நேரம் எடுத்தது. எனினும் திரைப்பட நடிப்பிற்கு தேவையான விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் வெங்கி.
என் மேல் நம்பிக்கைவைத்து, என் தவறுகளை பொறுத்துக் கொண்டு என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கும் எனது இயக்குநர் மதுமிதா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்பொழுது எனக்கு தெரிந்த ‘மூணே மூணு வார்த்தை’ சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்..“ என்கிறார் புன்சிரிப்புடன்.










