‘திருஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், நிகிதா, சேஷ்னா இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர்கள் ராஜ்குமார் சேதுபதி, அவருடைய மனைவியும் நடிகையுமான ஸ்ரீபிரியா ராஜ்குமார் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.
படத்தின் இரண்டு டிரெயிலர்களும் இரண்டு முறை திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதில் இருந்து சில பகுதிகள் :
“ஏதோ ஒற்றை ஆளாக இந்தப் படத்தை நான் மட்டுமே உருவாக்கியதாக எல்லாரும் என்னைப் பற்றியே பேசினார்கள். அது சரியல்ல. சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல. ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும்.
இதில் ஒரு பாத்திரம் அல்ல. பல நல்ல பாத்திரங்களின் கலவைதான் இந்த ‘பாபநாசம்’. இதன் சமையல் சுவையானது. மற்ற பாத்திரங்கள் நன்றாக நடித்தால்தான் படத்துக்கு தனிச் சிறப்பு. இந்தப் படத்தில் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் மூன்று மொழிகளில் வெற்றி பெற்ற படம். அதை எங்கள் கைகளில் ஒத்திகை பார்க்கக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு சிறப்பானதாக கதை, திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கீத்து ஜோஸப்பிற்கு எனது நன்றிகள்.
நான் இயக்கிய படத்தில் நான் நன்றாக நடித்தால் எனக்குப் பெருமை. ஆனால் மற்ற கேரக்டர்களும் நன்றாக நடித்தால் இன்னும் பெருமை. இதில் அதுதான் நடந்திருக்கிறது. கவுதமி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலரும்.. இன்னும் சிறு வேடங்களில் நடித்த பலரும் நினைவில் இருப்பார்கள். ஒரு படத்தில் நடித்த நடிகர்களைவிட, பாத்திரங்களே இன்றும் பலரின் நினைவில் இருக்கிறது. நான் நடித்த படங்களில்கூட என்னைவிட நான் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களே இன்றைக்கும் பேசப்படுகிறது.
இந்தப் படத்தில் கவுதமி எனக்கு மனைவியாக நடித்திருக்கிறார். பாதி படப்பிடிப்பு முடிந்தவுடன் எடுத்தக் காட்சிகளை போட்டுப் பார்த்தேன். அப்போது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு கவுதமி இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதை நான் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொல்லவில்லை. ஒரு ரசினாக சொல்கிறேன். உண்மையாகவே கவுதமி திறமையான நடிகை. இனி வரும் காலங்களில் அவரது விருப்பத்தின்படியே அவர் நடிப்பார் என்று நம்புகிறேன்.
படப்பிடிப்புத் தளத்தில் என் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் அந்தப் பெண் நடித்திருக்கிறார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் இரண்டு எழுத்தாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவர் அழைத்து வந்து காட்டியவர்தான் இந்த சுகா. கடைசிவரையிலும் என் உடன் இருந்து எனக்கு நெல்லை தமிழை கற்றுக் கொடுத்தவர் இவர்தான். 70, 80 வயதுக்காரர் போல பக்குவமாக இயக்குநர் ஜீத்து ஜோஸப் எங்களை கையாண்டார்.
எம்.எஸ்.பாஸ்கர் என்னை அடிக்கடி ‘கடவுள்’ என்றே சொல்கிறார். நான் ‘கடவுளே இல்லை’ என்று சொல்பவன். சரி.. அவர் ‘அன்பே சிவம்’ ரூட்டில் அவர் செல்கிறாரோ என்று நினைத்து விட்டு வைத்திருக்கிறேன். இந்தப் படம் தமிழுக்கு புதிய கதை. ஆனால் புதிய முயற்சியாக வந்துள்ளது. தமிழக ரசிகர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்றே நம்புகிறேன்.. “ என்றார் கமல்ஹாசன்.