full screen background image

கோடம்பாக்கத்து சினிமா சங்கங்களில் இதெல்லாம் நடக்குமா?

கோடம்பாக்கத்து சினிமா சங்கங்களில் இதெல்லாம் நடக்குமா?

சங்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பு..!

99 சதவிகித மலையாள நடிகர்களுடன் சில தமிழ் நடிகர், நடிகைகளும் இதில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். வருடத்திற்கொரு முறை மோகன்லால், மம்மூட்டி முதற்கொண்டு அனைவருமே பொதுக்குழுவுக்கு ஆஜராகிவிடுவார்கள். யாரும் தப்ப முடியாது. வரவில்லையெனில் ஷோ கேஷ் நோட்டீஸ். பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனானப்பட்ட திலகனையே கேள்வி கேட்டதால், சங்கத்தில் இருந்து வெளியேற்றியவர்கள்..

இவர்களுக்கே இப்போது ஒரு தர்மசங்கடமான நிகழ்வு. கடந்த வெள்ளியன்று கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஹைதரபாத்திற்கு ஒரு விமானம் புறப்பட்டது. அதில் செலிபிரேட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் பைனல் மேட்ச்சில் விளையாட கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர்களும் கிளம்பினார்கள். உடன் அணியின் விளம்பரத் தூதுவர்களான நடிகைகள் பாவனா, மைதிலி..!

மொத்தமாக 30 பேர் வரையிலும் விமானத்தில் ஏறியவர்கள் இருக்கையில் அமராமல் பேசிக் கொண்டும், கத்திக் கொண்டுமாய் இருந்திருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்ட விமான சிப்பந்தியை கேலி செய்திருக்கிறார்கள் சிலர். விமான பணிப்பெண் ஒருவரிடம் வேலையை பார்த்துக் கொண்டு போகும்படி கோபத்துடன் சொல்லியிருக்கிறார்கள் சிலர். இதைப் பார்த்த அந்த இண்டிகோ கேர் விமானத்தின் விமானி, “இவர்களை என்னால் அழைத்துச் செல்ல முடியாது. இவர்களை இறக்கிவிட்டால்தான் விமானத்தை எடுப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்தச் சச்சரவால் விமானம் ஒன்றரை மணி நேரம் கால தாமதமாகக் கிளம்பியது, வீரர்களை இறக்கிவிட்டுத்தான்..!

கேரள ஸ்டிரைக்கர்ஸ் வீரர்கள் வேறொரு விமானத்தில் ஹைதரபாத் புறப்பட்டுச் சென்றார்கள். இது பற்றிய செய்தி வெளியானவுடன் ‘அம்மா’ அமைப்பின் தலைவரான இன்னசென்ட் இது பற்றி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

“அந்த வீரர்களிடமும், அணி நிர்வாகத்திடமும் இது பற்றி ‘அம்மா’ அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது. அவர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருமளவுக்கு அன்றைக்கு நடந்திருந்தால் ‘அம்மா’ அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் எங்களது உறுப்பினர்கள் மீது தவறு இல்லையெனில் அந்த விமான நிறுவனத்தின் மீதும் நாங்கள் வழக்கு தொடுப்போம்..” என்று கூறியுள்ளார்.

கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக மோகன்லால் இருக்கிறார். அணியின் உரிமையாளர் இயக்குநர் பிரியதர்ஷன். இந்தச் சர்ச்சையோ என்னவோ..? பைனல் மேட்ச்சில் கர்நாடக புல்டோசர் அணியிடம் தோல்வியடைந்து ரன்னர் கப்புடன் கேரளா திரும்பி அம்மா அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்திருக்கிறது கேரள ஸ்டிரைக்கர்ஸ் டீம்.

அப்போது அவர்களிடத்தில் தனித்தனியாக இன்னசென்ட் விசாரணை நடத்தினாராம்.. இது குறித்து எழுத்து மூலமாக பதில் சொல்லும்படியும் உத்தரவிட்டிருக்கிறாராம்..

கோடம்பாக்கத்து சினிமா சங்கங்களில் இதெல்லாம் நடக்குமா..?

Our Score