full screen background image

சீன் – சினிமா விமர்சனம்

சீன் – சினிமா விமர்சனம்

ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘சீன்- SCENE’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை அஜ்மல் ஷபு மேற்கொள்ள கலை இயக்கத்தை அஸ்வினி காலே கையாண்டிருக்கிறார்.

காமெடி வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படங்களின் தொடர் வெற்றியை இடத்தை மூன்றாவதாக வெற்றியும் பெற்று ஹார்ட்ரிக் வெற்றியை தொட்டுவிட நினைத்த சூர்யா இந்த முறை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் உடன் கை கோர்த்து இருக்கிறார்.

மத்திய குற்றப்பிரிவு போலீசில் டி எஸ் பியாக இருக்கிறார் இன்பத்துரை என்ற சூர்யா. மிகவும் புத்திசாலியான இவர் சில வருடங்களுக்கு முன்பாக சென்னையில் தொடர் கொலைகளாக நடத்தவைகளை துப்பறிந்து அந்தக் கொலையாளியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்.

ஆனால், இப்போது அவருக்கு கண்ணில் பெரும் குறைபாடு. கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழக்கும் ஒரு வகையான நோய் அவரை தாக்கியிருக்கிறது. ஆனால் இதை வெளியில் சொல்லாமல் வேலையிலிருந்து ராஜினாமா செய்வதாக ஐந்து முறை தன்னுடைய மேலதிகாரியான ஸ்டீபன் என்ற லாலிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் லால் இவரது ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார்.

இந்த நேரத்தில் சென்னையிலேயே மூன்று தொடர் கொலைகள் நடத்திருக்கின்றன. இந்த கொலைகள் சீரியல் கில்லர் செய்த கொலைகளைப் போலவே இருப்பதை அறிந்து “அந்தக் கொலையாளியை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு அதன் பின்பு ராஜினாமா செய்” என்று எஸ்.பி.லால், சூர்யாவை வற்புறுத்துகிறார்.

ஆனால் தன்னுடைய கண் பார்வையில் இருக்கும் குறைபாடினால் சூர்யா இதை ஏற்க மறுக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்தக் கொலைகள் தனக்கு விடப்பட்டிருக்கும் சவால் என்பதை அறியவும் சூர்யா அதை கண்டுபிடிக்க முனைகிறார்.

இதற்காக நஸ்ரியாவை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார் சூர்யா. அதோடு பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த அவருடைய அப்பா, அம்மா இருவரையும் அழைத்து தன்னுடைய வீட்டில் வைத்து அவர்கள் மூலமாக அந்த சைக்கோ குற்றவாளியைக் கண்டுபிடிக்க போராடுகிறார்.

இறுதியில் என்ன நடந்தது? கொலையாளி யார் என்பது தெரிந்ததா? சூர்யா அவரை கைது செய்தாரா என்பதுதான் இந்த ‘சீன்’ படத்தின் திரைக்கதை.

சூர்யாவுக்கு மிகவும் சவாலான ஒரு கேரக்டர். கண் பார்வை இல்லாதவராகவும் அதில் இருந்து கடைசிவரையிலும் குறிப்பறிந்து செயல்பட வேண்டிய ஒரு கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி நிஜமான கண் பார்வை இல்லாதவர்கள் எப்படி செயல்படுவார்களோ, அது போலவே படத்திலும் செய்து இருக்கிறார்.

கண் நன்றாக இருந்து திடீரென்று கண் பார்வை பறிபோன ஒரு மனிதன் என்ன பாடுபடுவானோ… அந்த மனநிலையில் அனைவர் மீதும் எரிச்சல், கோபம் என்று தான் அடக்கி வைத்திருந்த குணங்களை எல்லாம் வெளிப்படுத்திவிட்டு அதை வைத்து எப்படியும் வழக்கினை கண்டுபிடித்து விடுவோம் என்று அவர் போராடும்போது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் நியாயமாக பார்க்கபப்படுகிறது

இடையில் நஸ்ரியா உடனான அவரது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நஸ்ரியா எப்படி இருப்பார் என்பது கூட தெரியாது நிலையில் ஒரு காதலை தனக்குள்ளே வளர்த்துக் கொண்டு சில காட்சிகளில் நஸ்ரியாவுடன் பேசுகின்ற ரொமான்ஸ் காட்சிகளை ரசிக்க முடிகிறது.

சண்டை காட்சிகளிலும் கண் பார்வை இல்லாதவன் எந்த வகையில் எப்படி சண்டையிடுவானோ அது போலவே சண்டையிட்டு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். மேலும் சக போலீஸ் அதிகாரிகளுடன் அவர் பேசுகின்ற பேச்சு, தன்னுடைய அம்மா அப்பாவை அவர் சமாளிக்கும் சுவாரசியமான சூர்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை ரசிக்க வைக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நஸ்ரியா படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அவருடைய சின்ன சின்ன க்யூட் மூவ்மெண்ட்ஸூம், ஆக்ஷன், ரியாக்சன்ஸூம் அவரை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது.

வெறும் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு வருபவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேலையில் மிக தீவிரமாக ஈடுபாடு காட்டுவதும் சூர்யா மீது அவருக்கு எழும் பரிதாபமும், அனுதாபமும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுவதை தனது இயல்பான நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார்.

சூர்யா திட்டும் பொழுதும், கண்டிக்கும் பொழுதும் முதலில் கோபப்பட்டு பின்பு அதை பொருட்படுத்தாமல் சூர்யாக்கு உதவி செய்ய ஓடி வருகின்ற அந்த நேரங்களில் அற்புதமான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் நஸ்ரியா.

எஸ்.பி. ஸ்டீபனாக நடித்திருக்கும் லால் கொஞ்சம் காமெடி கலந்து நடித்திருக்கிறார். நிஜத்தில் இப்படியெல்லாம் ஒரு எஸ்.பி. இருக்கவே மாட்டார் என்பதால் காமெடியாகவே ஆக்கப்பட்டு இருக்கிறார்.

சூர்யாவின் அப்பாவாக நடித்த ஆனந்தராஜ், அம்மாவாக நடித்தவரும் இடைவேளைக்கு பின்பு வந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைத்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ் ஒரே ஒரு காட்சியில் மொத்த தியேட்டரையும் கை தட்ட வைத்து விட்டார் பாராட்டுக்கள்.

வில்லனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் நெஸ்லின் இப்படி ஒரு சின்ன வயது வாலிபனுக்குள் இப்படி ஒரு சைக்கோத்தனமும் கொடூரத்தனமும் இருக்குமா என்று சிந்திக்க வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கொலை முடியும்போதும் அவர் சிரிக்கின்ற சிரிக்கும், வழக்கை திசை திருப்புவதற்காக அவர் போடுகின்ற திட்டமும், கொலை செய்யப்படும் திட்டங்களும் பயங்கரமாக இருக்கிறது.

இப்படி ஒரு கிரிமினல் மைண்ட் உள்ள ஒரு இளைஞனை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் நெஸ்லின். இவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் மாமி என்ற பெண்ணும், ஆட்டோ டிரைவரும் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சூர்யாவின் உதவியாளர்களாக நடித்திருக்கும் ராஜ்பிரியன், சுரேஷ் மதியழகன் இருவருமே ஒருவருக்கொருவர் கலாய்த்து தள்ளி கொஞ்சம் லேசான நகைப்புடனேயே படத்தை நம்மை பார்க்க வைத்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஒளிப்பதிவை அழகு என்றே சொல்லலாம். ஒவ்வொரு பிரேமுக்குள்ளும் தேவையில்லாத ஒரு நபரோ அல்லது பொருளோ இல்லை. அந்த அளவுக்கு கச்சிதமாக வெளிப்புற காட்சிகளை படமாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கிய விதமும் பாராட்டுக்குரியது.

நஸ்ரியா, சூரியா இடையே ரொமான்ஸ் கிளம்புகின்ற அந்த காட்சியில் வசனத்தின் மூலம் நமக்குச் சொன்னாலும் அவர்கள் இருவரின் முக பாவனையிலும், நடிப்பிலும் நமக்கு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சுசின் ஷியாமின் இசையில் பாடல்கள் படத்தில் ஒலித்தன. ஆனால் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் பதற்றத்தை உருவாக்குவதைப் போல பல இடங்களில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணி இருக்கிறார்.

சூர்யாவின் வீட்டை வடிவமைத்திருக்கும் கலை இயக்குநர் அஸ்வினி கலையை மனதார பாராட்ட வேண்டும். அற்புதமான உழைப்பை கொடுத்திருக்கிறார். அந்த வீடு அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளுமே ஏதோ ஒருவிதத்தில் சூர்யாவுக்கு உதவி செய்வதை பார்க்கும் பொழுது இயக்குநரின் அறிவுத் திறமையும், கலை இயக்குநரின் வடிவமைப்பு திறமையும் பளிச்சிடுகிறது.

ஒரு கண் பார்வை இல்லாதவனுடன் கண் பார்வை உள்ளவன் போடுகின்ற சண்டை காட்சியை எவ்வளவு அழகாக வடிவமைக்க முடியுமோ அப்படி வடிவமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர் சேத்தன் டிசோசா.

படத் தொகுப்பாளரான அஜ்மல் ஷாபு தன்னுடைய கத்திரி வேலையை இன்னமும் கொஞ்சம் இறுக்கமாக செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் படத்தில் சூர்யா இந்தக் கொலையை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கப் போவதாக அறிவிப்பதுதான் படத்தின் இடைவேளையாக வருகிறது. அதை முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும்.

நஸ்ரியாவை வேலை கிடைப்பது அவருக்கு ட்ரைனிங் கொடுப்பது அதற்குப் பிறகு தன்னுடைய அம்மா அப்பாவை அழைத்து வருவது அவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை காட்டுவது என்று தேவையற்ற பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அதை எல்லாம் ஓரக்கட்டி விட்டு நேரடியாக சூர்யா களத்தில் இறங்குவதுபோல காட்டியிருந்தால் நேரம் மிச்சமாகி இருக்கும்.

மலையாளத்தில் ‘ரோமன்ஞம்’, ‘ஆவேஷம்’ என்ற பெயர் பெற்ற படங்களை இயக்கிய ஜித்து மாதவன் தனது மூன்றாவது படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்தும் சிறப்பாகவே இருப்பதால் இந்தப் படம்  சஸ்பென்ஸ் திரில்லராகவே சென்றிருக்கிறது.

படத்தின் துவக்கத்திலேயே சூர்யாவால் நடக்கும் அலப்பறைகள், அவருடைய முரட்டுத்தனமான பேச்சுக்கள், நேர்மை இல்லாத நடத்தைகள் இவருடன் டார்க் காமெடி என்று சொல்லப்படுகின்ற சில காமெடிகளையும் சேர்த்து படம் வேகம் எடுக்கிறது. ஆனால், திரும்பத் திரும்ப சூர்யா தான் ராஜினாமா செய்வதாக சொல்லும்போது கொஞ்சம் போர் அடிக்க வைத்துவிட்டது.

இடைவேளைக்குப் பின்புதான் படம் நகரவே ஆரம்பிக்கிறது. ஒரு கொலையை தடயம் இல்லாமல் எப்படி செய்ய வேண்டும்? போலீஸிடம் இருந்து எதையெல்லாம், எப்படி மறைக்க வேண்டும்? ஆதாரங்களை எப்படி சிதைக்க வேண்டும்? என்பதையெல்லாம் எதிர்கால குற்றவாளிகளுக்கு எடுத்துக்காட்டுவது போல திரைக்கதை அமைந்தது ஒரு வகையில் தவறாகவே நமக்குப் படுகிறது.

அதோடு, குற்றங்களின் பின்னணியில் இருக்கின்ற பல விஷயங்களை இதில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். இது காவல் துறைக்கும் உதவியாக இருக்கும். அந்த வகையில் காவல் துறையினருக்கும் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒரு படமாக இருக்கும்.

சூர்யாவுக்கு நிச்சயமாக இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

RATING : 3.5 / 5

Our Score