இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில்,
சித்து மூலி மணி, ஸ்ரீவைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி.ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.என்.சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டிருக்கிறார்.
வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் (Walkthrough Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
படத்தின் கதைக் களம் முழுக்க, முழுக்க பெங்களூருதான்.
ஒரு தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் புதிதாக வேலைக்கு சேர்கிறார்கள்.
நான்கு பேருமே வெவ்வேறுவிதமான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருந்தாலும், இளைஞர்களாக இருப்பதால் மிக எளிதாக நண்பர்களாகி விடுகிறார்கள்.
அந்தக் கம்பெனி மார்க்கெட்டிங் ஏஜெண்ட்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ளாக இத்தனை ஆர்டர்களைப் பெற வேண்டும் என்று டார்க்கெட் கொடுத்து டார்ச்சர் செய்கிறார்கள்.
இதை செய்து முடிக்காதவர்களை திட்டி தீர்க்கிறார்கள். வேலையை விட்டு அனுப்பப் போகிறோம் என்று மிரட்டுகிறார்கள்.
தனித்தனியாக சென்றால் ஆர்டர்கள் கிடைக்காமல் இருப்பதால் கம்பெனியின் விதிமுறையை மீறி நால்வரும் ஒரே பகுதியில் சேர்ந்து போய் ஆர்டர் தேடுகிறார்கள்.
இந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய பணக்காரரின் மகன் கடத்தப்படுகிறான். அவனை கடத்தியவர்கள் சாதாரணமான ஒரு காமெடி கடத்தல்காரர்கள்.
அவர்களை தேடும்பணியில் போலீஸ் ஈடுபடும் பொழுது இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் ஹீரோக்களான நான்கு பேரும் இருப்பதை கண்டறிகிறார்கள்.
இதனால் டிவிகளில் பிரேக்கிங் நியூஸாக இந்த நான்கு பேரின் புகைப்படங்கள் வெளியாகிறது.
அதோடு இவர்களுக்கு அந்த நிறுவனத்தில் பயிற்சி கொடுத்தவரும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டு ‘கவனிக்கப்படுகிறார்’.
இந்த நால்வரும் ஒரு கட்டத்தில் அந்த வில்லன் கோஷ்டியிடமே சேர்கிறார்கள்.
இப்போது எப்படியாவது அந்த சிறுவனை இவர்களிடமிருந்து விடுவித்து போலீஸிடம் ஒப்படைத்து தாங்கள் தப்பிக்க வேண்டும் என்று ஹீரோக்கள் நினைக்கிறார்கள்.
இவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
‘COLD CALL’ என்பது மார்க்கெட்டிங் பிரிவில் கையாளப்படும் ஒரு வார்த்தை.
ஒரு சிறந்த வியாபார முடிவு ஒரு போன் கால் மூலமாக கிடைத்தால் அதுதான் ‘கோல்டு கால்’ என்பார்கள்.
அப்படி ஒரு போன் அழைப்பினால்தான் இந்த நான்கு பேரும் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள் என்பதால் இந்தத் தலைப்பைப் பொருத்தமாக வைத்திருக்கிறார்கள்.
சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு கதாநாயகர்களும், தங்களது கதாபாத்திரங்களின் தன்மைகளை உணர்ந்து தங்களால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு இணையாகப் பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி மற்றும் கீர்த்தனா புல்கி ஆகிய நால்வரும் தங்களது நடிப்பை இயன்றவரையில் கொடுத்திருக்கிறார்கள்.
மேனேஜராக நடித்தவர், பயிற்சியாளராக நடித்தவர், அப்பாவி வில்லனாக நடித்தவரும், அவருடைய முட்டாள் உதவியாளரும்கூட ரசிக்கக் கூடிய வகையில் நடித்திருக்கிறார்கள்.
சரவணனின் ஒளிப்பதிவில் மிகையில்லை. குறையும் இல்லை. ஒரு நடுவாந்திரமாக பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் படப்பதிவு செய்து இருக்கிறார்.
பாடல்கள் இந்தக் காலத்திற்கு ஏற்றார் போல் சட்டென புரியாத வகையிலேயே வரிகள் எழுதப்பட்டு, இசையும் அது போலவே அமைந்திருக்கிறது.
பின்னணி இசையும் நாடகத்தனமாகவே அமைக்கப்பட்டு இடையிடையே காமெடியை தூண்டிவிடும் வகையில் காமெடி ஸ்ட்ரோக்களையும் அமைத்து இது ஒரு காமெடி டிவி ஷோ என்பதாக மாற்றி இருக்கிறார்கள்.
படத் தொகுப்பாளர், கலை இயக்குநர் மற்றைய தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களால் முடிந்த பணியை செய்திருக்கிறார்கள்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் தம்பிதுரை ஒரு சின்ன பட்ஜெட் படத்தை கன்னடத்தில் எடுத்து அது ஓடவில்லை எனில் பெரும் நஷ்டத்தை சம்பாதிக்க வேண்டுமே என்பதற்காக…
மற்றைய மூன்று மொழிகளிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிடும் வகையில் நான்கு கதாநாயகர்களையும் நான்கு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்து கச்சிதமாக கதை, திரைக்கதையை அமைத்து படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால் டப்பிங்கை சரியாக செய்யாமல்விட்டதனால் பல இடங்களில் கன்னட வசனங்கள் அப்படியே ஒலிக்கின்றன.
பல இடங்களில் வசனங்கள் பேசி முடித்த பின்பும் திரையில் நடிப்பவர்களின் உதடுகள் அசைகின்றன. சில இடங்களில் நடிகர்களின் உதடுகள் அசையாமல் இருக்க வசனம் மட்டும் திரையில் ஒலிக்கிறது.
இப்படியான பல தவறுகளுக்கு இடையில் இந்தப் படத்தை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த நிலைமையில் இந்தப் படத்தைப் பற்றி நாம் என்ன சொல்வது?!
RATING – 2 / 5









