இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம், ‘தி பாரடைஸ்’ (The Paradise) . சுதாகர் செருகுரி தனது எஸ்.எல்.வி சினிமாஸ் (SLV Cinemas) நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘ஆயா ஷேர்’ (Aaya Sher) யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று மெகா ஹிட் பார்ட்டி நம்பராக மாறியுள்ள நிலையில், தற்பொழுது வெளியாகியுள்ள ‘யேஷனாகுலா கட்டமிடா’ (Yeshanagula Kattamida) என்ற இரண்டாம் பாடல் ரசிகர்களிடையே இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியான வெஸ்டர்ன் பீட்டுகளுக்கும், கமர்சியல் மாஸ் பாடல்களுக்கும் பெயர்பெற்ற அனிருத், இம்முறை தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய அக்மார்க் நாட்டுப்புறக் கலையை (Telangana Folk) கையில் எடுத்து, தனது பிரத்யேக நவீன பாணியுடன் கலந்து ஒரு அசாத்திய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார்.
தெலங்கானா கிராமிய மண்வாசனை மாறாத அசல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, இப்பாடலை பிரபல பாடலாசிரியர் காசர்லா ஷியாம் தனது தனித்துவமான பாணியில் எழுதியுள்ளார்.
நாட்டுப்புறப் பாடகர்களான பிரபா பங்காரிகல்லா மற்றும் அதுலா ஜங்கிரெட்டி ஆகியோரின் எதார்த்தமான குரல்களில், அனிருத்தின் துடிப்பான இசையுடன் இணைந்து இப்பாடல் அசுர பலத்துடன் உருவாகியுள்ளது.









