வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடப் போவதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஓடிடி ரிலீஸ் விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இரண்டும் தனித்து எடுத்திருக்கும் முடிவைத் தங்களது சங்கம் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக இரண்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படத்தை திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல வருடங்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது.
ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படும். ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து வருகிறது.
இதனால் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான், அந்தந்தத் திரைப்படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவைத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ள இயலாது எனத் தெரிவித்துள்ளது.
அக்கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி,
தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான், அந்தத் திரைப்படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
ஆனால், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அப்படித் தயாரிப்பாளர்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினைத் தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதைத் தெரிவிக்கிறோம்.
மேலும், வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவுகூட வராமல், ரூ. 700 கோடிக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அவ்வாறு பெரும் இழப்பினைச் சந்தித்தும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே, விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினைக் கண்டித்து,
வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழ்த் திரையுலகில் புதிய திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும்,
தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்துவது என்றும்,
தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், மேற்படி பிரச்சினையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று,
சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைத்து தமிழ்நாடு அரசு மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.









