வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், உலக சினிமா வரலாற்றிலேயே இதுவரை யாரும் செய்யாத ஒரு பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் கதையின் நாயகனாகவும், பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் வழிகாட்டுதலோடு, பிவிஆர் (PVR) நிறுவனத்தின் ஆதரவுடன் இத்திரைப்படம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஒரு படம் உருவாக நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தேவை. ஆனால், ‘ONE MAN’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, படத்தொகுப்பு, CG உட்பட 70-க்கும் மேற்பட்ட பணிகளையும் எந்தவொரு உதவியாளர்களும் இல்லாமல் தனி ஒருவராகவே செய்துள்ளார் சங்ககிரி ராஜ்குமார்.
படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய அவர்,
“பணிகளை முடித்துவிட்டு ரிலீஸுக்காக கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். அவர் உடனடியாக பிவிஆர் நிறுவனத்திடம் பேசினார்.
‘தமிழராகிய நீங்கள் இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள், எங்களின் ஆதரவு உண்டு’ என பிவிஆர் நிறுவனம் உறுதியளித்தது.
தொழில் நுட்பப் பணிகளுக்குத் தன் ஸ்டுடியோ சாவியைக் கொடுத்து உதவிய இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜாவுக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா பேசுகையில்,
“ஆரம்பத்தில் எனக்குள் கேள்விக்குறி இருந்தது. ஆனால், தொழில் நுட்ப ரீதியாக மிகச் சிறந்த தரத்துடன் இப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
படத்தில் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களில் அவரே நடித்திருக்கிறார். நானும், இயக்குநர் லெனின் பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோரும் இப்படத்தைப் பார்த்த பிறகு ஏற்பட்ட ஆச்சரியத்தில் 10 நிமிடங்கள் பேசவே இல்லை. இது இந்தியத் திறமையின் உச்சம், ஒரு வரலாற்றுப் பதிவு” என்று பாராட்டினார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில்,
“பெரிய நிறுவனங்கள், பொருளாதார பின்னணி எதுவுமின்றி தனி மனிதராக ராஜ்குமார் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளார். இது சினிமாவைக் காட்டுத்தனமாக நேசிப்பவரால் மட்டுமே முடியும்.
தோழர் ராஜ்குமார் மிக நுட்பமான நடிகர், சிறந்த தெருக்கூத்து கலைஞர். இத்திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும்.
தொழில் நுட்பப் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களை ராஜ்குமார் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள தமிழக அரசு முன் வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இயக்குநர் சேரன் பேசுகையில்,
“ராஜ்குமார் சினிமாவில் சம்பாதிப்பதற்காக வரவில்லை. சாமானியனும் ஒரு சினிமாவை உருவாக்க முடியும் என்ற கர்வம் மிக்க சிந்தனை கொண்டவர்.
இப்படத்தை நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் உழைத்துச் செதுக்கியுள்ளார்.
இதில் அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருந்தாலும் ராஜ்குமார் தெரியமாட்டார், பாத்திரங்கள் மட்டுமே தெரியும்.
ஒரு நல்ல படத்தை எடுக்க ரூ.70 லட்சம் போதுமானது என்பதை ராஜ்குமார் நிரூபித்துள்ளார்.
இன்றைய சூழலில் அவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து அவருடைய புகழைத் தமிழ் சினிமா கொண்டாடியே தீரும்” என்றார்.
‘சேரன் வழங்கும் வெங்காயம்’ எனத் தான் தோளில் தூக்கிச் சுமந்த பழைய நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.









