full screen background image

‘விஸ்வநாத் & சன்ஸ்’ – சினிமா விமர்சனம்

‘விஸ்வநாத் & சன்ஸ்’ – சினிமா விமர்சனம்

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், உருவாகியுள்ளது இந்த  ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், நாசர், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)  – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

படத்தை இயக்கியிருப்பது வெங்கி அட்லூரி என்ற தெலுங்கு இயக்குநர். இவர் ‘தொல்லி பிரேமா'(தெலுங்கு), ‘மிஸ்டர் மஞ்சு'(தெலுங்கு), ‘RANGE DE’ (HINDI), ‘வாத்தி'(தமிழ் / தெலுங்கு), ‘லக்கி பாஸ்கர்'(தமிழ்) ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இதில் ஐந்து படங்கள் வெற்றியடைந்து, ஒரே ஒரு படம் மட்டும்தான் தோல்வி.

பல வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர் என்பதால் அவரது இயக்கத்தில் துணிந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா.

அவருடைய இப்போதைய வயதுக்கேற்ற கதாபாத்திரம்தான். ‘சஞ்சய் விஸ்வநாத்’ என்ற சூர்யா, துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்பவர்… வென்றவர்.

சின்ன வயதிலிருந்தே துப்பாக்கி சுடுதலில் தீவிர ஆர்வமுள்ளவராக இருந்தவர். அவருடைய அந்த துப்பாக்கி ஆர்வத்தை அவருக்குள் திணித்தவர் அவருடைய தந்தை.

இப்போது 40 வயதாகியும் சூர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்குக் காரணமும் அவருடைய தந்தைதான்.

அவருடைய தந்தை ரவீனா டாண்டனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர் மீது மகன் சஞ்சய்க்கு ஒரு கோபம்.

ஆனால் முதல் மனைவியான ராதிகாவும், இரண்டாவது மனைவியான ரவீனா டாண்டனும் கொஞ்ச நாட்களில் ராசியாகி விடுகிறார்கள். இருவரும் வீட்டுக்கு வந்து, போகும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். ரவீணாவுக்கும் ஒரு பெண் இருக்கிறார். சூர்யாவின் தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துவிட்டார்.

இந்த நேரத்தில் ராதிகா தனக்கு ஒரு பேரப் பிள்ளை வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவருக்கும் இதயத்தில் அடைப்பு வந்து ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய கட்டாயம். அப்போதும் அவர் தன்னுடைய விருப்பத்தைச் சொல்கிறார்.

அதனால் சூர்யா தன்னுடைய உறவினரான பெண் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க, அவர் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் தன்னுடைய ஃபிரெண்டை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

அவரை சந்திப்பதற்காக சான் பிரான்சிஸ்கோ செல்லும் சூர்யா அங்கே தன்னுடைய விந்தணுவை தானமாக கொடுத்து வாடகைத் தாய் (Surrogate Woman) முறையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அந்த குழந்தையுடன் 10 மாதம் கழித்து வீடு திரும்புகிறார் சூர்யா.

அம்மா ராதிகா முதலில் அந்தக் குழந்தையை ஏற்க மறுத்தாலும், பின்பு நமக்கு பேத்தி வந்துட்டாளே என்று நினைத்து அந்தக் குழந்தையை பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

இந்த நேரத்தில் குழந்தைக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை. உடனடியாக ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். இதற்காக அந்தக் குழந்தையின் அம்மாவிடமிருந்து திசுக்களை பெற வேண்டும் அப்படின்னு மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அதனால் மறுபடியும் சூர்யா அமெரிக்கா போய் அந்த வாடகைத் தாய் யார் என்று தேடி கண்டுபிடிக்கிறார். அவர்தான் ஹீரோயின் மமிதா பைஜூ.

அந்தப் பொண்ணுக்கு இப்போது 21 வயதுதான். ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசமே 20. மமிதாவை சென்னைக்கு அழைத்து வருகிறார் சூர்யா.

ஆபரேஷனும் நடக்கிறது. அதன் பின்பும் மமிதாவை தன் வீட்டில் தங்க வைக்கிறார் சூர்யா. ஆனால் கொஞ்ச நாள் போகப்போக மமிதாவுக்கும் அந்தக் குழந்தைக்குமான நெருக்கம் அதிகமாகிறது.

அதே சமயம் ராதிகாவுக்கும், மமிதாவுக்குமான நட்பும் பெரிதாகிறது. அந்த வீட்டையும் அந்த வீட்டில் இருக்கின்ற மற்றவர்கள் பழகுகின்ற விதத்தையெல்லாம் பார்த்த பின்பு “நாம் இங்கேயே இருந்திரலாமே?” என்று நினைக்கும் மமிதா சூர்யாவை மனதுக்குள் காதலிக்க துவங்குகிறார்.

ஆனால் சூர்யாவோ அந்தக் காதலை ஏற்கவில்லை. அவர்கள் இருவருக்கும் ஆன வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் சூர்யா முடியாது என்று மறுக்கிறார்.

“வந்த வேலை முடிஞ்சிருச்சுல்ல. நீ அமெரிக்கா கிளம்பு என்று சொல்லி மமிதாவை திருப்பியனுப்புவதில் உறுதியாக இருக்கிறார்.

மமிதாவோ சூர்யா வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார். 

இதன் பிறகு என்ன நடக்கிறது? மமிதாவின் இந்தப் போராட்டம் ஜெயித்ததா? இல்லையா? மமிதாவை சூர்யா திருமணம் செய்தாரா? இல்லையா? 

இதுதான் இந்தப் படத்தின் சொல்ல முடிந்த அளவுக்கான ஒரு திரைக்கதை.

சூர்யா இப்போது வேறு ஒரு லெவலுக்கு போய்விட்டார். அடுத்த கமலஹாசன் என்று சொல்கின்ற அளவுக்கு தன்னுடைய நடிப்பில் நிறைய வெரைட்டீஸ ஒவ்வொரு படத்திலும் காட்டிக் கொண்டே வருகிறார் சூர்யா.

இந்தப் படத்திலும் வித்தியாசமான நடிப்பைக் காட்ட முயன்றிருக்கிறார்… ஒரு சில இடங்களில்..! ஆனாலும் இன்னமும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாமே என்று நமக்கு சொல்லத் தோன்றுகிறது.

அதோடு இவருக்கான கதையும், திரைக்கதையும் அந்த அளவுக்கு சூட் ஆகவில்லை என்பதும் உண்மை.

ஏனெனில் ‘கஜினி’யில் வரக் கூடிய சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போலவே இதுலயும் சஞ்சய் விஸ்வநாத் என்று வைத்துவிட்டாலே அந்தப் படம் மக்களிடையே ரீச் ஆகும் அல்லது அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கக் கூடாது.

அப்படி நினைத்துதான் ஒரு மாபெரும் தவறை செய்துவிட்டார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

அவருக்கு அடுத்து இந்தப் படத்தை முழுக்க முழுக்க பார்க்க வைத்திருப்பது ஹீரோயினாக நடித்திருக்கும் மமிதா பைஜூதான்.

அற்புதமான நடிப்பு. ரொம்ப துள்ளலான நடிப்பு. அந்த 21 வயசுல ஒரு பொண்ணுக்கு எப்படி ஒரு துள்ளல் இருக்குமோ, அது மாதிரியான ஒரு துள்ளலான நடிப்பு. தியேட்டருக்கு வரக் கூடிய அத்தனை ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் கவரக் கூடிய அளவுக்கு ஒரு அழகான நடிப்பை காண்பித்திருக்கிறார்.

இடையிடையே அவர் பேசுகின்ற சில வசனங்களே, நமக்கு காமெடியை உருவாக்குகின்றன.

அதிலும் இவருக்கும் ராதிகாவுக்கும் இருக்கிற அந்த ஃப்ரெண்ட்ஷிப் கொஞ்சம் கொஞ்சமா வளர்றதைப் பார்க்கும்போது நமக்கே ரொம்பவும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.

“பேசாமல் இங்கேயே இருந்துறேம்மா” அப்படின்னு நம்மையே மனதுக்குள் சொல்ல வைத்திருக்கிறார்கள் அந்த திரைக்கதையில்!

அந்த வகையில் அவருடைய நடிப்புதான் இடைவேளைக்குப் பின்பும் இந்தப் படத்தை ரொம்பவும் ரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது

‘கலையரசி’ ராதிகா இயல்பாகவே இன்னொரு குழந்தை மாதிரி பேசுவதில் மன்னி. இந்தப் படத்தில் அதே மாதிரி ஒரு சில இடங்களில் அவருடைய நடிப்பும், பேச்சும், நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு.

அவருடைய அந்த அம்மா பாசம், குழந்தைக்காக ஏங்குகின்ற உணர்வு. “நான் பாட்டியாகணும், எனக்கு ஒரு பேரப் பிள்ளை வேணும்” என்று எதிர்பார்க்கின்ற ஏக்கம்… இதிலெல்லாம் ராதிகாவின் நடிப்பு பாராட்டக் கூடியது.

தன்னுடைய நீண்ட நாளைய நடிப்பு அனுபவத்தை வைத்து இந்தப் படத்திலும் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார் ராதிகா!

சுனில் ரெட்டி, அவருடைய மனைவியா நடிச்சவங்க… இந்த ரெண்டு பேருமே அந்தக் கேரக்டர்ல எதுக்காக நடிச்சாங்கன்னே தெரியல. அந்த அளவுக்கு ரொம்ப கேவலப்படுத்துற மாதிரி… செருப்பால அடி வாங்குற மாதிரி எல்லாம் திரைக்கதை அமைத்தது பெரும் தவறு.

கிளைமாக்ஸ் காட்சியில் வந்து நம்மை கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார் நாசர்.

ரொம்ப நாளாச்சு நாசர் சார இப்படி ஒரு கல கல கேரக்டர்ல பார்த்து.! ரொம்ப நல்ல காமெடி கேரக்டர். அவரும் கடைசியில ரொம்ப அழகா சிரிக்க வச்சுட்டு போயிட்டாரு.

அப்புறம் பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி ரவீனா டாண்டன். ரொம்ப வருஷம் கழிச்சு ‘ஆளவந்தான்’ படத்துக்குப் பின்னாடி இந்தப் படத்துலதான் பார்க்கிறோம்.

ரொம்ப அழகான ஒரு அமைதியான நடிப்பு. இரண்டாவது மனைவியாகிவிட்ட அந்த சோகம், கணவர் இறந்துவிட்டாலும் அதற்குப் பின்பு ராதிகாவோடு குட் அட்டாச்ல இருக்கிறது சிறப்பான திரைக்கதை.

கடைசியா சூர்யாவிடம் கல்யாணம் பண்ணியாகணும்னு அழுத்தமா சொல்ற அந்த விதம். அவருடைய நடிப்பு… இந்தப் படத்துக்கு ஒரு பூஸ்ட்டுதான்.

மற்ற நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடைவேளைக்குப் பின்பு வரும் குன்னூர் காட்சிகளில் எல்லாம் இயற்கைக் காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்.

ஆனால், படத்தின் முற்பகுதியில் சூர்யாவின் வீட்டை ரொம்ப அழகா விஸ்தாரமா காட்டும்போது அழகாத்தான் இருக்கு.

ஆனால் வீட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளை ஏன் இப்படி ஒரு கிரே கலரில், மங்கலான வெளிச்சத்தில் படமாக்கினார்கள் என்று தெரியவில்லை. இன்னமும் அழகான லைட்டிங்ஸில் எடுத்திருக்கலாம்.

ஒரு சில காட்சிகளில் மமிதா பைஜூவை பார்க்கவே நமக்கு பாவமாக இருந்தது. அந்தப் பொண்ணுக்கு மேக்கப்கூட போடலையா..? அப்படியே கொண்டு வந்து நிறுத்திட்டாங்களோ… என்று நினைக்கத் தோன்றியது.

இன்னமும் கொஞ்சம் மமிதாவை அழகாக காட்டியிருக்கலாம். கேமராவில் ஏன் இப்படி பண்ணாங்கன்னு தெரியல. கேமரா ஒர்க் நமக்கு ரொம்ப ரொம்ப ஏமாற்றமாகிவிட்டது.

அப்புறம் இசை… அடித்து ஆடி இருக்கார் ஜி.வி.பிரகாஷ். மூன்று பாடல்களும் சிறப்புதான். அதிலும் கல்யாண பாடல் பட வெளியீட்டுக்கு முன்பேயே ரொம்பவே ஹிட் ஆயிருச்சு.

அந்த பாட்டு கொண்டாட்டமான பாட்டுதான். அதேசமயம் அந்த பாட்டைவிடவும் அந்த பாடல் காட்சியின் நடனமும் அழகுதான்.

அந்தப் பாடல் காட்சியை இடையிடையே காட்சிகளையும் சேர்த்துக் கொண்டு போயிருப்பதால் நமக்கு ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி பார்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வந்தது.

இருந்தாலும் அந்தப் பாடலும், பாடல் காட்சிகளும் ரொம்பவும் சூப்பர். 

இந்தப் படம் ஒட்டு மொத்தமாக என்ன செய்தியை சொல்ல வருகிறது என்பது  ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி.

ஆனால் அதைவிட இயக்குநரைக் கண்டிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கு. அதை சொல்லியே தீர வேண்டும்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி ஒன்று உண்டு.

ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார் சூர்யா. அதில் தன்னுடைய வீட்டில் 30 வருடமாக டிரைவராக வேலை பார்த்தவரின் மகனை அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கிறார்.

அந்த மகன் லைவ்ல வந்து, ‘இவர்தான் என்ன படிக்க வச்சாரு’ன்னு எல்லார் முன்னாடியும் சொல்றாரு. எல்லாரும் கை தட்டுறாங்க.

அதே சமயம் அந்தப் பையனோட அப்பா தன்னுடைய வீட்டில் டிரைவராக இருந்தார்னு சூர்யா சொன்னவுடனேயே அந்தப் பையன் பம்மிடுறான். ஏன்னா தான்  ஒரு  டிரைவரோட மகன் என்பதை அவன் வெளியில் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் சூர்யா இதை அந்தப் பையனிடம் சொல்லிக் காட்டுகிறார். “உங்க அப்பாவாலதான் உனக்கு நான் உதவி பண்ணேன். அதனால உங்க அப்பாவை என்னைக்கும் நீ நினைச்சு பாக்கணும். என்னைய விட்டுரு, அப்பாவை என்றென்றும் நினைவில் வச்சிருக்கணும்” என்று அறிவுரை சொல்கிறார். 

தியேட்டரிலும் பயங்கர கை தட்டல்கள். உண்மையாவே ஒரு புல்லரிப்பு வருவதுபோல அற்புதமாக அந்த சீனை படமாக்கி இருந்தார் டைரக்டர்.

ஆனால் பாருங்க… இதுக்கு அடுத்து என்ன கூத்து நடந்துச்சுன்னா?!

சூர்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் நல்ல மனிதர் அப்படின்னு சொல்றாங்க. கொஞ்சம் அழுக்கு பார்க்காதவர். அப்படியே வளர்ந்துட்டாரு.  இன்னொருத்தருடைய எச்சில் பட்ட கிளாஸைகூட வாங்க மாட்டேன் அப்படின்னு சொல்லும் அளவுக்கு கவுரவமும் பார்க்கிறார்.

ஆனால் அவர் மாதாமாதம் கரெக்டா 27-ஆம் தேதி ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போய் பெண்களை எல்லாம் ஹோட்டலுக்குக் கூப்பிட்டு சல்லாபம் பண்ணக் கூடிய ஒரு மன்மதராசா கேரக்டர் என்பது தெரிய வருகிறது.

இதை யார் சொல்வது? அவங்க அம்மாவே சொல்றாங்க, ராதிகாவே சொல்றாங்க. சரி இதை சொல்றதோட நிறுத்தி இருக்கலாமே..?!

அதுக்கப்புறம் “ஒரு நாள் என் மகனுடைய பேக்ல இருந்து நான் இதை எடுத்தேன்”னு சொல்லி காண்டம் பாக்கெட் எடுத்து மமீதாவிடம் காட்டுறாங்க.

அதுக்கு அடுத்த சீன்லயே இதை சூர்யாகிட்டயே உடைச்சிடுறாங்க மமிதா. “உங்க அம்மாதான் சொன்னாங்க… நீங்க மாதாமாதம் 27-ஆம் தேதி வெளிநாட்டுக்கு போய் ஜாலியா கொண்டாடிட்டு வருவீங்கலாமே?” அப்படின்னு கேட்டுவிடுகிறார்.

இது அம்மாவுக்கும் தெரிஞ்சு போச்சான்னு மகன் ஃபீல் பண்றாரு. எப்படி?

ராதிகாவின் பக்கத்தில் சூர்யா உட்கார்ந்து கொண்ட ‘”ஏம்மா இது உனக்கும் தெரிஞ்சு போச்சா..?” என்று! “ஆமாண்டா மகனே, எப்படியோ தெரிஞ்சிருச்சு..” என்கிறார் அம்மா ராதிகா. “இனிமேல் தெரிஞ்சுக்காத மாதிரி இருந்துக்கோ…” என்று மகன் சூர்யா சொல்கிறார். இது என்ன வகையான திரைக்கதை?

சூர்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக அவரை நல்லவராகவே காட்டியிருக்கிறார்கள். தொலைக்காட்சி வாயிலாக புதிய, இளைய மாணவர்களுக்கு, இளைஞர் சமுதாயத்திற்கு அறிவுரை சொல்கிறார்.

அப்படி அறிவுரை சொல்கிறவர் இப்படி நடந்துக்கலாமா? சொந்த வாழ்க்கையில் இப்படி இருக்கலாமா? இப்படி இருப்பவருக்கு மாணவர்களுக்கும், மக்களுக்கும் அறிவுரை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? 

இப்படி இந்த இயக்குநர் யோசித்திருக்க வேண்டாமா?! இயக்குநரைவிடுங்கள்… ஹீரோவான சூர்யா சற்று யோசித்திருக்கலாமே?!

இதைவிட கொடுமை கடைசியில் நடக்கிறது! நாசர் அடிக்கடி தாய்லாந்து போய் இதே மாதிரி ஜாலியா இருந்துட்டு வருவார் என்று அவரது மனைவி சுதா புகார் சொல்கிறார். 

அதை கேட்டுவிட்டு மமிதா நாசரிடம் சூர்யாவை காட்டி ‘இவரும் உங்கள மாதிரியேதான். வேறு பல நாட்டுக்கெல்லாம் போய் கொண்டாடிட்டு வருவாரு’ என்கிறார்.

உடனே நாசர், “ரொம்ப வசதியா போச்சு.. அப்போ அடுத்த தடவை நம்ம ரெண்டு பேருமே தாய்லாந்து போய் வரலாம்” என்கிறார்.

நாசர் யார்? சூர்யாவோட தங்கச்சியோட ஹஸ்பண்டோட சித்தப்பா. சம்மந்தி வீட்டுக்காரர். இப்படி “நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து தாய்லாந்து போவோம்”னு சொன்னா என்ன அர்த்தம்?

முட்டாள்தனமான கேரக்டர் ஸ்கெட்ச். முட்டாள்தனமா திரைக்கதையை கடைசியா கொடுத்துவிட்டார்கள்.

இதனால் இந்தப் படத்தை நம்மால் ரொம்பவும் நல்ல படம் என்று சொல்ல முடியவில்லை.

“உங்களுக்காக இந்தப் படத்தில் ஒரு நல்ல மெசேஜ் வச்சிருக்காங்க…” என்று நாம் சொல்லி படம் பார்க்க வருபவர்கள் இந்த திரைக்கதையை பார்த்துவிட்டு என்ன சொல்வார்கள்? என்ன நினைப்பார்கள்?

இந்த ஒரே ஒரு திரைக்கதையே, இந்தப் படத்தின் ஒட்டு மொத்த தன்மையையும் குப்புறக் கவிழ்த்து விட்டது,

சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்பொழுது இது மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் வந்தால் அது அவர் மீது இருக்கும் இமேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால், இனி வரும் காலங்களில் இது மாதிரியான கேரக்டர்களில் நடிக்காமல் தவிர்க்கும்படி தம்பி சூர்யாவை கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 3 / 5

Our Score