Vetri – Arivumathi
Rangaraj Pandey – Sivanandhan
Brigida Saga – Mallika
Maaran – Moorthy
Saravanan – Sargunam
Lizzie Antony – Soodamani
Aruvi Madhan – Velmurugan
Kanya Bharathy – Annam
Subramaniam Siva – Dharman
Producer – KV Shabarreesh
Banner – 2M Cinemas, D Pictures
Co-Producer, Story, Director – Dayal Padmanabhan
Screenplay & Dialogue – Kavitha Bharathy
Dayal Padmanabhan
Music and Background Score – Darbuka Siva
DOP – M.V. Paneerselvam
Editor – Bhoopathy Vedhagiri
Lyrics – Bharathiyar, Bharathidasan, Dayal Padmanabhan
Creative Team – Shaan, Kavitha Bharathy, Saru Raj
Colorist – John Sriram
Art Director – Soolai Anbu,
Designer – Siva
Stills – Parthasarathy
Makeup – Kuppusamy
Costumes – Cuddalore Ramesh
Co-Director – Kannan Kaalimuthu
Associate Directors – Naresh
Tharagan D
Production Executives – Mariappan
Kutty Krishnan
VFX Supervisor – Stephen
PRO: Rekha
Social Media: Chowdrey
படத்தின் தலைப்பினை வைத்து, இது கலைவாணர், தியாகராஜ பாகவதர் இருவரையும் சிறைக்கு அனுப்பிய 1944-ம் ஆண்டு நடந்த அந்த கொலை சம்பவம் என்று நினைக்க வேண்டாம்.
இது அந்த கதை அல்ல; அதற்கு மாறாக பெரும் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சரியா? தவறா? என்கின்ற கேள்வியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
கிராமத்தில் வசிக்கும் வெற்றி படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் தன்னுடைய குடும்பத்தின் வறுமையை எண்ணி, அதே ஊரில் வசிக்கும் தன்னுடைய நண்பனான மாறனின் துணையோடு திருட்டுத் தொழிலில் இறங்குகிறார். மிக எளிதாக திருட்டு தொழிலை கற்றுக் கொள்கிறார். எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் அவரும் அவரது நண்பன் மாறனும் சேர்ந்து திருடுகிறார்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
இதே நேரம் வெற்றி அதே ஊரில் வசிக்கும் பிரிகடாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறக்கின்றன. இந்த நேரம்வரையிலும் பிரிகடாவுக்கு தன் கணவன் திருடன் என்பது தெரிந்தாலும் அதை விட்டுவிடும்படி சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.
மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க கட்டக் கடைசியாக ஒரே ஒரு திருட்டை செய்து விட்டு திருட்டுப் பணியில் இருந்து வி.ஆர்.எஸ். கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார் வெற்றி. ஆனால் அந்த கடைசி திருட்டுதான் வெற்றியை தூக்குக் கொட்டடியில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
திருடப் போன இடத்தில் நடத்த ஒரு குழப்பத்தினால் கொலை சம்பவம் நடக்கிறது. அந்தக் கொலையை நான்தான் செய்தேன் என்று நீதிமன்றத்திலேயே ஒத்துக் கொண்டதால், வெற்றிக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று சென்றும் மரண தண்டனை அவருக்கு உறுதி செய்யப்படுகிறது. அதற்கடுத்து ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட நாளை காலை 6:00 மணிக்கு வெற்றி தூக்கலிடப்பட இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவருடைய வாழ்க்கை கதையில் நடந்ததெல்லாம் திரைக்கு வருகிறது.
இறுதியில் என்ன ஆனது? இந்த மரண தண்டனையில் இருந்து வெற்றி தப்பினாரா? இல்லையா? அவர் யாரை கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார்?.. என்பதெல்லாம் இந்தப் படத்தின் நீதிமன்ற விசாரணைகளில் வரிசையாக சொல்லப்படுகிறது.
வெற்றி தமிழ் சினிமாவில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத ஒரு ஹீரோ. அவருடைய நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். அந்த வகையில் இந்தக் கதாப்பாத்திரமும் கச்சிதமாக அவருக்கு பொருந்தி இருக்கிறது.
இதற்கு முந்தைய படங்களிலிருந்து நிறையவே மேம்பட்டு, இந்தப் படத்தில் கொஞ்சம் மெச்சூர்டான நடிப்பினை காட்டியிருக்கிறார் வெற்றி.
ஒரு அலட்டல் இல்லாத ஹீரோயிஸம் இல்லாத ஒரு ஹீரோவாக… தவறு என்று தெரிந்தும் குடும்பத்திற்காக வேறு வழியில்லாமல் திருடுவதாக அவர் அப்பாவியாக சொல்கின்ற அந்த வசனம் அவரை நம்ப வைக்கிறது.
வேலைக்கு போகாமல் குடித்துக் கொண்டே இருக்கும் தன்னுடைய அப்பாவை திட்டித் இருக்கிறார் வெற்றி. ஆனால் அவரேதான் அதற்கடுத்து வேறு வழியில்லாமல் திருடவும் போகிறார்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவிதத்தில் அவர் பேசுகின்ற வசனங்கள் தான் ஏன் இப்படி வந்தேன் என்பதற்கான அவர் சொல்லுகின்ற சமாதானங்கள் சட்டத்தின் முன்பு குற்றமாக இருந்தாலும் அது அவரைப் பொறுத்தவரையில் சரிதான் என்று தன்னுடைய நடிப்பின் மூலமாக நம்மை கன்வின்ஸ் செய்து விடுகிறார் வெற்றி!
ஹீரோயினாக நடித்திருக்கும் பிரிகடா திருடன் என்று தெரியாமலேயே வெற்றியை காதலிப்பதும் பின்பு திருடன் என்று தெரிந்தும் தன் காதலை இழக்க விரும்பாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டு அந்தக் கிராமத்து வாழ்க்கையிலேயே மூழ்கிப் போகிறார். ஆனால், அந்தக் காதல் என்ற அந்த உணர்வு அவருடைய வாழ்க்கையை இன்றைக்கு புரட்டிப் போட்டிருப்பதை அவர் கண்களில் சோகத்துடன் காட்டுகின்ற காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
ஜெயில் கண்காணிப்பாளராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, அவரே நெறியாளர் என்பதால் அவரும், வெற்றியும் மாறி மாறி பேசுகின்ற காட்சிகளில் சட்டம், நீதி, அரசு, நீதிமன்றங்கள்… இதையெல்லாம் தன்னுடைய வாதத்தில் வைத்து அழகாக வாதிடுகிறார்.
சில இடங்களில் கண்டிப்பான தருணத்தில் குரலை உயர்த்திப் பேசி, வெற்றியை ஆஃப் செய்ய வைத்திருக்கிறார். வெற்றியும் ரங்கராஜ் பாண்டேவும் பேசுகின்ற அந்த வாதங்கள்தான் இந்தப் படத்தின் மிக முக்கியமான தருணங்கள்.
வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன் எப்போதும் போலவே ஒரு சாதாரண எளிய மனிதனாக வசனம் பேசி இருக்கிறார். வெற்றியின் அம்மாவாக நடித்திருக்கும் லிசி ஆண்டனி படத்தின் முதல் பாதியில் நம்மை அழுக வைத்துவிட்டார்.
நாளை காலை தூக்கிலிடப்படும் மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க சிறைக்கு வந்து அவர் கதறுகின்ற கதறல் நிச்சயம் படப் பார்ப்போரை கண்களை குளமாக்கும். அந்த அளவுக்கு லிசி ஆண்டனி தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.
வெற்றியின் குடும்பம் இன்றைக்கு நடுத்தெருவுக்கு வருவதன் காரணமாக இருக்கும் அந்த ஊரின் பணக்கார லட்சுமிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தூக்கிடும் நபராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா அவருடைய அறிமுக காட்சியில் என்ன செய்கிறார்.. ஏது செய்கிறார்.. என்பதே தெரியாத அளவுக்கு பூடகமாக செய்து கொண்டு வந்து கடைசியாக தூக்குக் கயிறை காட்டும் பொழுதுதான் அவருடைய கதாபாத்திரமாக புரிகிறது. அந்த வகையில் இயக்குநரின் அந்த அழகான இயக்கம், இந்தப் படத்தை கொஞ்சம் சஸ்பென்சாகவும் கொண்டு சென்று ரசிக்க வைத்திருக்கிறது.
தூக்குத் தண்டனையை கொடுக்கும் நீதிபதியான கன்யா பாரதியும் தன்னுடைய சிறந்த நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். அதிலும் கன்யா பாரதி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும்பொழுது உண்மையாகவே நமக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழ்த் திரையுலகில் நிறைய அனுபவம் கொண்ட ஒளிப்பதிவாளர் எம்.பி.பன்னீர்செல்வம் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார். மீடியம் பட்ஜெட் படம் என்றாலும் காட்சிப்படுத்தலில் அழகினைக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்திய அரசியல் சட்டத்தை கேள்வி எழுப்பும்விதமாக வெற்றியும், ரங்கராஜ் பாண்டேவும் வாக்குவாதம் செய்கின்ற அந்தக் காட்சியை படம் பிடித்தபோது, பல வசனங்களை குலோஸப் காட்சிகளிலேயே படம் பிடித்து காட்டி நம் மனதில் அந்த வசனங்களை அழுத்தமாக பதிவு செய்ய உதவி இருக்கிறார் பன்னீர்செல்வம்.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம் என்பதுடன், பாடல் வரிகளும் மிக எளிமையானதாக இருந்து நம்மை ஈர்க்கிறது.
பின்னணி இசையிலும் சிக்க வைத்திருக்கிறார் தர்புகா சிவா. தூக்கு தண்டனை என்கின்ற ஒரு மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் திரைக்கதையில் எந்த அளவுக்கு நம் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தேவையுள்ள இடங்களில் இசையமைத்து தேவையில்லாத இடங்களில் மௌனித்துவிட்டு அந்த சோகத்தில் நம்மையும் பங்கெடுத்துக் கொள்ள வைத்திருக்கிறார் தர்புகா சிவா.
படத் தொகுப்பாளரின் திறமையான தொகுப்பினால், படம் கடைசிவரையிலும் போரடிக்காமல் செல்கிறது.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே இயக்கமும், வசனங்களும்தான். கவிதா பாரதி மற்றும் இயக்குநர் இருவருமே இணைந்துதான் வசனங்களை எழுதி இருக்கிறார்கள். நியாயமான வசனங்கள்தான். பல வசனங்கள் இன்றைக்கு நீதிமன்றங்களில் வாதிடப்பட வேண்டிய வசனங்கள். கேட்கப்பட வேண்டிய வசனங்கள்.
இந்த அளவுக்கு மரண தண்டனையை எதிர்க்கும் வசனங்களை வேறு எந்தப் படத்திலும் நாம் பார்த்ததில்லை. மரண தண்டனை வேண்டுமா.. வேண்டாமா.. என்பது இன்றைக்கு இந்திய முழுவதுமே பேசப்பட்டுதான் வருகிறது.
நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பலாத்காரங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் இதற்கெல்லாம் ஒரே தீர்வு.. ஒரு மாதத்திற்கு உள்ளாக விசாரணை நடத்தி உடனடியாக அவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கலிட வேண்டும் அல்லது சுட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோப உணர்வு, இந்திய மக்களிடையே இன்றைக்கு பரவி இருக்கிறது.
இந்த நேரத்தில் மரண தண்டனை என்பதே தேவையா.. இல்லையா.. என்ற சர்ச்சையை இந்தப் படம் எழுப்பியிருக்கிறது. எந்த ஒரு குற்றமும் உடனே நடப்பதில்லை. ஒரு உணர்ச்சி குவியலின் இறுதியில். கட்டு கடங்காத கோபத்தினால் நடப்பது தான் கொலை என்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் திட்டமிட்டு செய்கின்ற கொலைகளுக்கு கொடுக்கலாமே என்றும் கேள்வியை எழுப்புகிறார்கள்.
நீதிமன்றத்தில் பேசப்படும் அத்தனை வசனங்களும் மிகச் சிறந்த அரசியல் சொல்லாடல்கள். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரு தனி மனிதன் செய்வதை அரசை செய்வது சரிதானா என்று கேட்கின்ற கேள்விக்கு நிச்சயம் சட்ட நூல்களை வைத்து நாம் பதில் சொல்ல முடியாது.
அதே நேரம் உணர்ச்சிகளின்படி எந்த ஒரு வழக்கையும் நடத்தி தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதை இயக்குநர் இந்தப் படத்தில் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.
மரண தண்டனை தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களாகிய நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் தயாள் இந்த படத்தின் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதைவிட இந்த வழக்கில் வெற்றிக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை சரியா தவறா என்றுதான் நாம் பார்க்க முடியும்.
அப்படி பார்த்தால் நிச்சயம் வெற்றி செய்த குற்றத்திற்கு மரண தண்டனை என்பது தவறுதான். அரிதிலும் அரிதான வழக்குகளில், குற்ற செயல்களில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. அந்த வகையில் பார்த்தல் இந்த சாதாரண கொலைக்கு எதற்காக மரண தண்டனை என்பது என்ற சந்தேகம் நமக்கும் வருகிறது.
இன்னொரு பக்கம் பார்க்கப் போனால் இயக்குநரின் கதை திரைக்கதையில் நாம் ஏற்க முடியாத திரைக்கதையும் கொஞ்சம் இருக்கிறது.
வெற்றி அந்த வீட்டில் ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் அவர் தெளிவாக எடுத்து வைத்தாரா இல்லையா என்பதை இயக்குநர் காட்டவில்லை.
ஏனென்றால் ஒரு சிறுமியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்றால் நிச்சயமாக நீதிமன்றத்தில் இந்த மரண தண்டனை என்கின்ற பேச்சே வந்திருக்காது.
ஒரு பக்கம் பார்த்தால் வெற்றி செய்தது சரி என்றே நாம் நினைக்கலாம். ஆனால் அந்த சிறுமி பற்றிய கதையை வெளியில் சொல்லாமல் நீதிமன்றத்தில் சொல்லாமல் வெற்றி மரண தண்டனையை பெற்றிருந்தால் நிச்சயம் இதன் தவறு வெற்றியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வடிவமைத்த இயக்குநர் இடத்தில்தான் இருக்கிறது.
இந்த ஒரே ஒரு கொலைக்காக மட்டும் மரண தண்டனை அளவுக்கு இழுத்து வந்ததை நாம் மறப்போம்.. மன்னிப்போம்.. அதே சமயம் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப சட்டங்களும் வீதிகளும் மாற்றப்பட வேண்டியவைதான்.
அந்த வகையில் இந்த மரண தண்டனை பற்றிய பேச்சுக்களும், பிரச்சாரங்களும் வரவேற்கப்பட வேண்டியது. நாடு முழுவதும் மக்களிடத்தில் இதற்காக வாக்கெடுப்பு நடத்தலாம்.
ஆனால் இங்கே ஒரு சில கொலை சம்பவங்கள்.. பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய பாலியல் கொடூரங்கள் நடக்கும்போது அந்தக் குற்றவாளிகளையெல்லாம் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொள்ள வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் நம் எல்லோர் மனதிலும் வருகிறது. அந்த வகையில் இந்தக் காலகட்டத்திலும் மரண தண்டனை வேண்டுமா.. வேண்டாமா என்ற கேள்வியை இயக்குநர் எழுப்பி இருப்பது அரசியல்தனமானது.
இது சரியா தவறா என்பதை படம் பார்க்கும் ரசிகர்களாகிய நீங்களே ஒரு முடிவுக்கு வந்து கொள்ளுங்கள் என்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்.
அந்த வகையில் இந்தப் படம் ஒரு சமூக விழிப்புணர்வு திரைப்படமாகவும், சட்டம், நீதி, நேர்மை, நியாயம், தர்மம், நீதிமன்றங்கள், தீர்ப்புகள் என்று நீதித்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதால்… இது வரவேற்கத்தக்க படம் என்றே சொல்லலாம்.
RATING : 4 / 5









