full screen background image

அங்கீகாரம் – சினிமா விமர்சனம் 

அங்கீகாரம் – சினிமா விமர்சனம் 

இந்தப் படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் படத் தயாரிப்பாளர் K.J.R. கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் தொழில் நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.

சமூகத்தின் கடை நிலையில் இருக்கும் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஹீரோ ஆதிரன் பானுமதி, தடகள விளையாட்டில் ஓட்டப் பந்தய வீரராக இருக்கிறார்.

உள்ளூரில் இருந்து நேஷனல் லெவல்வரையிலும் போட்டிக்கு சென்று பல பரிசுகளை வென்றிருக்கிறார். ரெக்கார்டும் செய்து இருக்கிறார். அந்த நேரத்தில் பொறுப்பற்ற அதிகாரிகளாலும், லஞ்ச ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தினாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

ஒரு போட்டியின்போது ஆதீரனின் காலில் காயங்கள் ஏற்பட, அந்தக் காயத்தை காட்டியே காமன்வெல்த் போட்டிக்கு இவரைத் தேர்வு செய்யாமல் விடுகிறார்கள் தேர்வுக் குழுவினர்.

தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் ஆதிரன். இதன் பின்பு என்ன நடந்தது? ஆதிரவன் காமன்வெல்த் போட்டிக்கு போனாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் இந்தப் படத்தின் நாயகனாக ஆத்திரம் பானுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய அம்மாவின் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் ஆதிரன், அம்மாவின் பெயரை தன்னுடைய பெயருக்கு பக்கத்திலேயே சேர்த்து அம்மாவை பெருமைப்படுத்தி இருக்கிறார்.

ஹீரோ ராஜேஷ் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது இவருடைய உடல் வாகுவில் இருந்தே தெரிகிறது. தடகள வீரர்களுக்கான உடல் அமைப்புகள் எப்படி இருக்குமோ அப்படியே தன்னை வருத்திக்கொண்டு இந்தக் கதாபாத்திரத்தில் உழைத்திருக்கிறார் ஆதிரன். நடிப்பிலும் தனக்கு வந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். தடகள வீர்ர் என்றாலும் அவருடைய வயது முகத்தில் தெரிகிறது. உணர்ச்சி மயமான நடிப்பை காட்ட வேண்டிய நேரத்தில் கொஞ்சமாக அவருடைய நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

இனி அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை தனக்கான ஸ்பெஷாலிட்டியை அவர் திரையில் காட்ட வேண்டும் என்று பாராட்டுகிறோம். தடகளப் போட்டிகளில் அவருடைய தொடையில் இருக்கும் நரம்புகள்கூட புடைத்துக் கொண்டிருப்பதை கச்சிதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

இவருடைய காதலியாக நடித்திருக்கும் சிந்தூரி விஸ்வநாத் இவரை புரிந்து கொண்ட ஒரு காதலியாகவும் போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் அவரும் ஒரு போட்டியாளராக மகளிருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஓடியிருக்கிறார். ஓரளவுக்கு நடித்தும் இருக்கிறார்.

பயிற்சியாளராக வசுந்தராவும் சில காட்சிகளில் வந்து போகிறார். மேலும் ஹீரோவின் காமன்வெல்த் கனவுக்கு தடை போடும் கோட் சூட் போட்ட வில்லனாக அஜீத் கோஷியும் சிறப்பாக நடித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரலாக நடித்திருக்கும் விஜி அவர்களையும் மனதார பாராட்டுகிறோம். உண்மையில் அவருடைய வசன டெலிவரியெல்லாம் அற்புதமாக இருந்தது. அவ்வளவு அழகாக தமிழ் வசனங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரித்து நடித்திருக்கும் இவரை அழைத்து வந்து நடிக்க வைத்த இயக்குநருக்கு  பாராட்டுங்கள்.

வழக்கமான அம்மாவாக தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா. மகன் மீது பாசத்தைக் கொட்டுகின்ற அந்த காட்சியிலும், தூய்மை பணியாளர் வேலையில் இருக்கின்ற சிரமங்களையும் அதிலும் ஒரு பெண் தொழிலாளி எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படுகிறார் என்பதையும் தன்னுடைய நடிப்பில் காட்டியிருக்கிறார் ரமா.

ஒளிப்பதிவாளர் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பதிவாக்கி இருக்கிறார் என்பது தெரிகிறது. தடகள வீரர்களின் ஓட்டப் பந்தயத்தை பதிவு செய்வது மிகப் பெரிய வேலை. அதிலும் ஒரு உணர்ச்சிப் பங்களிப்போடு ஹீரோ ஜெயிக்க வேண்டும் என்று படம் பார்ப்பவர்களை சொல்ல வைப்பதுபோல எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நம்முடைய உணர்வுகளை தூண்டி விடுகிறது.

கலை இயக்குநரையும் பாராட்ட வேண்டும். ஒரே ஒரு ரூம் கொண்ட ஒரு வீட்டில் அம்மா, தங்கை, அண்ணன் என்று ஒரு குடும்பம் எப்படி அந்த இத்துணூண்டு வீட்டில் வாழ்கிறது என்பதை அப்படியே காட்டியிருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு அந்த வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் வடிவமைத்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் எளிமையான வரிகளால் நமக்கு புரிகிறது. கோர்ட்டு காட்சிகளில் எல்லாம், பின்னணி இசையை அடித்து  இறக்காமல் நம்மை காப்பாற்றி இருக்கிறார் ஜிப்ரான். படத் தொகுப்பாளரும், தடகளப் போட்டிகளை கச்சிதமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

அறிமுக இயக்குநரான தென்பாதியன் தான் சந்தித்த ஒரு விளையாட்டு வீரரின் உண்மைக் கதையில் இருந்து இந்தப் படத்தை அமைத்திருக்கிறார். படத்தில் இறுதியில் அந்த உண்மையான ஹீரோவும் தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.

இந்தியாவில் இப்போது எந்த பக்கம் திரும்பினாலும் லஞ்சம் ஊழல்தான்! ஒரு சாதாரண லிப்ட் ஆபரேட்டர்களிலிருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.ஸ். ஆபிஸர்கள்வரையிலும் இந்த லஞ்சம் பரவி இருக்கிறது. இந்தத் திருட்டுத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் கதையை இயக்குநர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

அங்கே நடக்கும் சில காட்சிகள் லாஜிக் எல்லை மீறலாக அப்பட்டமாக தெரிந்தாலும் எப்படியாவது இந்த ஹீரோவுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். அவர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நாம் நினைப்பதால் படம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்புதான் அந்த லாஜிக் மீறல்கள் எல்லாம் நம் கவனத்திற்கு வருகிறது. அந்த அளவுக்கு இயக்குநர் தன்னுடைய மிக சிறப்பான இயக்கத்தை கொடுத்திருக்கிறார்.

நீதிமன்றத்தில் பேசப்படும், சொல்லப்படும் பல விஷயங்கள் இப்போதுதான் நிறைய பேருக்கு தெரிய வருகிறது. வழக்கு எப்படி பதிவு செய்வது? நீதிபதியிடம் எப்படி பேசுவது? கோர்ட்டு நடைமுறைகள் என்ன? என்பதையெல்லாம் போகிறபோக்கில் அப்படியே சொல்லிவிட்டு போயிருக்கிறார். இதுவும் நமக்கு ஒரு புது அறிவை கொடுத்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று நீதிபதிகள் மாறி மாறி வந்தாலும் இந்த வழக்கில் இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் கிண்டலும், கேலியுமாய் இருக்க.. ஏழை ஜனங்களுக்கு இந்தியாவில் நீதி கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான் என்பதை காட்டிவிட்டது.

சென்ற மூன்று வருடங்களாக இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவர் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்பத்தினார் என்று இந்த வீராங்கனைகள் பேட்டி கொடுத்தார்கள். அந்த அமைப்பின் தலைவரை நீக்க வேண்டும் என்று டெல்லியில் பெரிய போராட்டமே நடத்தி களைத்துப் போனார்கள்.

ஆணாதிக்கத்தோடு கூடவே அதிகார வெறியும் எதிர்ப்பாளர்களுக்கு இருந்ததால் பாவம் நம்முடைய இந்திய வீராங்கனைகளால் எதுவும் செய்ய முடியாமல் விட்டுவிட்டார்கள். இப்போதுவரையிலும் இந்தப் பிரச்சினை நீடித்து நிலைத்து நிற்கிறது. நீதிமன்றத்திலும் வழக்கு தூங்குகிறது.

இந்த 2026-லும் இப்படி பெண்களுக்கெதிராக பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.

இந்த விஷயத்தை மக்களிடம் தெரியப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்தையும், படத்தின் தயாரிப்பாளர்களையும் இயக்குநரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

RATING : 4 / 5

 

Our Score