full screen background image

ஹார்ட்டின் – சினிமா விமர்சனம் 

ஹார்ட்டின் – சினிமா விமர்சனம் 

முக்கோண காதல் பற்றிய படம் இது. ஹீரோ சனந்தின் காதலியான மடோனா காதலுக்கு பிரேக்கப் என்று சொல்லிவிட்டு அவருடைய சொந்த ஊரான ஊட்டிக்கு சென்று விடுகிறார்.

இங்கே இருந்தால் காதல் தோல்வியின் நினைவு தன் மனதை பாரமாக்குகிறது என்று நினைத்த சனந்த், ராஜஸ்தானில் ஜெய்ப்பூருக்கு வருகிறார். அங்கே தன்னுடைய நண்பனான வாட்ஸ்அப் மணியுடன் இணைந்து ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

தன குடும்பத்தினரின் கல்யாணம் பண்ணிக்கோ என்ற நச்சரிப்பைத் தாங்க முடியாமல் ஐடி ஊழியரான இமையாவும் ஜெய்ப்பூருக்கு வருகிறார். அங்கே தற்செயலாக சனந்தை சந்திக்கிறார். முதல் பார்வையிலேயே இமையாவுக்கு சனந்தைப் பிடித்துப் போகிறது. ஏன் எதற்கு என்று தெரியாமல் வருவதுதானே காதல்?! அதுபோல இந்தக் காதலையும் எடுத்துக் கொள்ளலாம்.

சில, பல காட்சிகளுக்குப் பிறகு இமையா தன்னை காதலிப்பதை உணரும் சமந்தும் இரண்டாவது முறையாக அந்தக் காதல் என்னும் போதையில் வீழ்கிறார். அடுத்தது கல்யாணம்தானே என்று நினைத்து இரு வீட்டு குடும்பத்தினரும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு விபத்தில் சிக்குகிறார் சனந்த். இந்த விபத்தின் விளைவாக அவருக்கு மெமரி லாஸ் ஆகிறது. கடைசியாக முதல் காதலியான மடோனாவை காதலித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் வரையில்தான் சனந்துக்கு நினைவில் இருக்கிறது.

வேறு எதுவும் நினைவில் இல்லாததால் இத்தனை நாட்கள் காதலித்து டூயட் பாடி நெருங்கி பழகிக் கொண்டிருந்த இமையாவையே யார் என்று கேட்கிறார் சனந்த்.

இவருடன் நெருங்கி பழகிவர்களை எல்லாம் அழைத்து வாருங்கள். அவர்கள் வந்து இவர்களிடம் பேசினால் இவருக்கு பழைய ஞாபகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் சொல்கிறார்.

இதனால் இமையா மடோனாவுக்கு போன் செய்து அழைக்கிறார். ஆனால், அதைக் தட்டிக் கழிக்கிறார் மடோனா. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் தன்னுடைய காதலியை தேடி ஊட்டிக்கு வந்து விடுகிறார் சமந்த்.

பின்னாடியே இமையாவும், சனந்தின் அப்பா, அம்மாவும் வந்து விடுகிறார்கள். மடோனா இப்போதும் தன்னை காதலிப்பதாக நினைத்து சனந்த் அவரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள இவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தத்தளிக்கிறார் மடோனா.

இதற்குப் பிறகு என்ன நடந்தது? கடைசியாக யாரை திருமணம் செய்தார்?  இமையா என்ன ஆனார்? என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான திரைக்கதை.

இதுவரையிலும் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் ஹீரோவுக்கு நண்பனாக.. இன்னொரு ஹீரோவாக என்று நடித்துக் கொண்டிருந்த சனந்த், இந்தப் படத்தில்தான் முதல்முறையாக தனி ஹீரோவாக இருக்கிறார்.

இறுக்கமான முகம்.. சிரிப்பே வராத முகம் திராவிட கலரில் இருந்தாலும் விஷாலுக்கு அடுத்த வாரிசாகவே நம் கண்களுக்கு தெரிகிறார் சனந்த்.

இரண்டாவது காதல் துவங்கிய பின்புதான் கொஞ்சமேனும் சிரிக்கிறார். புன்னகைக்கிறார். ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்வதற்கும், காதலை காட்டுவதற்கும் அதிகமான காட்சிகள் இல்லை என்பதால் எப்போதும் ஒரு சோகத்தை தாங்கிக் கொண்டு அதை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் காதலனாகவே நமக்குத் தெரிகிறார். இது போதாது சனந்த். அடுத்தடுத்த படங்களில் வெரைட்டியான நடிப்பினை காட்ட முயலுங்கள்.

கதாநாயகி இமையா தமிழ் சினிமாவுக்கு புது வரவு. முதல் பாதி முழுவதும் திரையை ஆக்கிரமித்து இருக்கிறார். தான் காதலித்துக் கொண்டிருந்தாலும் சனந்துக்கு தன் மீது காதல் இருக்கா? இல்லையா? என்பதை தேடிக் கொண்டே இருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய சிரிப்பும், வெட்கமும்.. அந்த இளம் வயது பெண்களுக்கு எப்படி இருக்குமோ அதை அப்படியே நமக்குக் காட்டி இருக்கிறார். ரசிக்க முடிகிறது. இடைவேளைக்கு பின்பு எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இப்படி ஒரு காதல் தோல்வியை கொடுத்துவிட்டு அதுக்கு என்ன காரணம் என்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மடோனா. மிக அழகுதான். ஆனால், நடிப்பும் அது போலவே வந்தாலும் அவருடைய குரல்தான் இடைஞ்சலாக இருக்கிறது.

கடைசியில் தான் பெரிதும் தவிர்த்துவிட்டுத் தப்பி வந்த சனந்திடம் மீண்டும் காதல் வயப்படும் காட்சிகளிலும் கிளைமாக்ஸிலும் நடிப்பில் பாராட்ட வைத்திருக்கிறார் மடோனா.

சனந்தின் நண்பனாக நடித்திருக்கும் வாட்ஸ் அப் மணியும், அவருடைய மனைவியான டெனிதாவும் அவர்களின் கேரக்டருக்கேற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூர் கோட்டைகளும், அரண்மனைகளும் நிரம்பியிருக்கும் ஊர். ஏரிக்கு  நடுவில் கட்டப்பட்டிருக்கும் கோட்டை, மலை மீது இருக்கும் கோட்டைகள் என்று அனைத்தையும் நாமே ஜெய்ப்பூருக்கு போய் வந்தது போல காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி.முகேஷ்வரன். ஜெய்ப்பூரிலிருந்து ஊட்டிக்கு கேமிரா ஜம்ப் ஆனாலும் ஊட்டியின் அழகை அதிகமாக காண்பிக்காமல் விட்டிருக்கிறார். ஆனால், நாயகிகளின் அழகை ஒரு இன்ச்கூட விடாமல் பதிவாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் தன்னால் முடிந்த அளவுக்கான இசையை கொடுத்திருக்கிறார். பாடல்கள் திரும்பவும் கேட்க வேண்டும் போல இருந்தது எதிர்பாராத ஒரு அதிர்ச்சி. பின்னணி இசையிலும் தாம் தூம் என அடிக்காமல் லவ் மூடு வரும் அளவுக்கு வாசித்திருக்கிறார்.

பிளாஷ்பேக் காட்சிகளும், இப்போதைய காட்சிகளும் தொடர்ந்து வருவது போலவே குழப்பம் வராமல் படத் தொகுப்பு செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அசோக் குமார் நினைவுகளை இழக்கும் ஒரு காதலன், தனக்கு நினைவில் இல்லாத காதலியையும், நினைவில் இருக்கும் முன்னாள் காதலியையும் எப்படி நேர் கொள்கிறான் என்ற வித்தியாசமான திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

இப்போதைய இளைஞர்களை கவரும் வகையில் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாதது மிகப் பெரிய வருத்தம்தான். கொஞ்சம், கொஞ்சம் காமெடி வசனங்களை கொடுத்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்.

பொதுவாக காதல் கதைகளில் காதலனாக இருந்தாலும் சரி, காதலியாக இருந்தாலும் சரி.. படம் பார்க்க வரும் ரசிகர்களின் உணர்வுகளையும் தூண்டிவிட வேண்டும். தியேட்டருக்கு வருகின்ற சின்ன பசங்களையும் நாமும் ஒரு லவ்வை செய்யலாமா என்று சொல்ல வைக்க வேண்டும்.

ஹீரோவின் மறதி நோய் படத்தில் எந்தவிதத்திலும் காதலை வளர்ப்பதாக இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஒருவர் இருந்தால்.. இப்போதைய காதலியை மற்றவர்கள் சொல்லிக் கேட்ட பின்பு எப்படி ஹீரோ அவரை அணுகுவார்.. பழகுவார்.. பேசியிருப்பார்.!. அதையெல்லாம் இந்தப் படத்தில் இயக்குநர் செய்யத் தவறிவிட்டதால், நமக்கும் அந்தக் காதல் பீலிங் வரவில்லை என்பதுதான் உண்மை.

ஹார்டின் என்று டச் ஆன ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு படத்தை எடுத்திருந்தாலும் இந்த ஹார்ட்டின நம்முடைய ஹார்ட்டை தொடவில்லை என்பது வருத்தமான விஷயம்.

RATING : 3 / 5

Our Score