full screen background image

அந்தரன் – சினிமா விமர்சனம்

அந்தரன் – சினிமா விமர்சனம்

‘அந்தரன்’ என்றால் ‘எந்தப் பிடிப்பும் இல்லாமல் ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பவன்’ என்று அர்த்தமாம்!

படத்தின் நாயகி இவானா வருணை சுற்றிலும் நடக்கும் சில கொலைகள்தான் படத்தின் கதை கரு.

ஹீரோயின் இவானா ஒரு நபரை காதலித்து வருகிறார். சில நாட்களிலேயே அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதன் பிறகு திருமணம் வேண்டாம் என்று கோபத்தில் சொல்லிவிட்டு ஒதுங்கி இருக்கும் இவானாவை அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். வயது போகிறது என்று கவலைப்படுகிறார்கள்.

இதனால் வேறு வழி இல்லாமல் அம்மா, அப்பாவுக்காக அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ஆனால், திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு அந்த வருங்கால கணவர் ஒரு மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

ஒரு ஆண்டு கழித்து இப்போது இவானா காதலிக்கும் இரண்டாவது காதலனும் ஒரு விபத்தில் சிக்கி உயிர் இழக்கிறார்.

இந்த மூன்று சம்பவங்களுக்கும் விடை தெரியாமல் போலீஸார் தவிக்கிறார்கள். இதை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் பிரஜினை தனிஅதிகாரியாக நியமிக்கிறார் போலீஸ் உயரதிகாரி.

பிரஜினும் களத்தில் இறங்கி அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த செயல்கள் அனைத்துமே இயல்பாக நடந்தது என்று இவானாவும் அவருடைய பெற்றோரும் சொல்கிறார்கள்.

இறந்து போனவர்களுக்கும் வேறு யாருடனாவது விரோதமா, சண்டையோ எதுவும் இல்லை என்பதால் ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்காமல் தலை சுத்த வைக்கிறது இந்த வழக்கு.. ஒரு சின்ன தடயமும்கூட கிடைக்காமல் இந்த வழக்கினா எப்படி கொண்டு செல்வது என்பது தெரியாமல் பிரஜினும் விழித்துக் கொண்டிருக்கிறார்.

பிரஜின் அடிக்கடி இவனாவிடம் பேசிக் கொண்டே இருப்பதாலும் அவரை தொடர்ந்து சந்திப்பதாலும் தன்னை அறியாமலேயே இவானாவை காதலிக்கத் துவங்குகிறார் பிரஜின்.

ஆனால், இவானா இதை ஏற்க மறுக்கிறார். என்னை நீங்கள் காதலித்தாலோ அல்லது திருமண செய்ய முனைந்தாலோ உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமா என்று நான் பயப்படுகிறேன் என்கிறார் இவானா. ஆனால் பிரஜின் இப்படியாவது உண்மையான குற்றவாளியை பிடித்து விடலாமே என்று நினைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இவானாவை வற்புறுத்துகிறார்

இதற்குப் பிறகு என்ன நடந்தது? பிரஜினை கொலை செய்தார்களா? அல்லது அவர் தப்பித்தாரா? இதுவரை இந்த மூன்று கொலைகளை யார் செய்தது?.. என்பதுதான் இந்த அந்தரன் படத்தின் சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த ஸ்டோரி.

நாயகனாக நத்திருக்கும் பிரஜின் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். போலீஸ அதிகாரியாக எப்படி எல்லாம் விசாரிக்க வேண்டும்.. எப்படி பேச வேண்டுமோ எதையெல்லாம் மனதில் கொண்டு துப்பறிய முயன்றிருக்கிறார்.

இவானாவுடன் காதலில் விழுந்த பிறகு காதலிக்கும் வேண்டும் ஆனால் தானும் உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முன்னேற்பாடுகளோடு அவர் படுகின்ற அந்தப் பதட்டமும், நடிப்பும் உணவுப்பூர்வமாக அமைந்து அவரை பாராட்ட வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் இவானாவும் ஒரு நல்ல நடிப்பையே கொடுத்திருக்கிறார். தன்னை சுற்றி மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற அவருடைய வேதனையையும், பெற்றோர்களிடம் அதை பகிர்ந்து கொள்வதுமாக.. அவர் மீது ஒரு துளி சந்தேகம்கூட வராத அளவுக்கு தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், ரமேஷ் பாபு, கீதா பத்மன் என்று ஒரு பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.

பொதுவாக சஸ்பெஸ் திரில்லர் படங்களில் ஒளிப்பதிவும் ஒரு கேரக்டராக நடிக்க வேண்டும் என்பது மரபு. இந்தப் படத்திலும் அதேபோல ஒளிப்பதிவாளர் கிருஷ்ண ராமச்சந்திரன் தன்னால் முடிந்த அளவுக்கான திறமையை காட்டி சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். மாடியில் இருந்து கீழே விழும் அந்த காட்சியை பதைபதைக்கும் விதமாகப் படமாக்கி இருக்கிறார்.

காதல் பாடல்கள் ஒலிக்கின்றன. அதற்கான மாண்டேஜ் ஷாட்களை பிரமாதமாக படமாக்கி இருக்கிறார்கள். பின்னணி இசை படத்தை நகர வைக்க உதவி இருக்கிறது.

சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் அதனுடைய தன்மை கெடாமல் கடைசிவரையிலும் கூர்ந்து கவனிக்க வைத்திருப்பது போல காட்சிகளை அழகாக தொகுத்து தந்திருக்கிறார்கள் படத் தொகுப்பாளர்களான இக்னேஷியஸ் அஸ்வின், சதீஷ் குரேசேவா இருவரும்!

படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், ஒரு காதலியைச் சுற்றி இருக்கும் ஒரு மர்ம கதை என்றாலும் அழகான ஒரு திரைக்கதையை வைத்து, எதிர்பார்க்காத டிவிஸ்ட்கள் மூலம் படம் பரபரப்பாக செல்வதுபோல வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

பொதுவாக இது மாதிரியான படங்களில் கொலையாளி யார்.. அவரா.. இவரா.. என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்துவோம். அதையெல்லாம் தொடர்ச்சியாக நம் மனதில் திணித்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராவணன்.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அழகியல் தன்மையோடு குறையாத வண்ணம் கடைசிவரையிலும் அமர வைத்து படம் பார்க்க வைக்கும் வித்தையை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராவணன்.

அவருக்கும், அவருடைய படக் குழுவினருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

RATING : 3.5 / 5

Our Score