நடிகர்கள் :-
சமந்தா – ஸ்வர்ணா
திகந்த் மஞ்சாலே – அனிருத்
கௌதமி – காமாக்ஷி
ஆனந்த் – ராமய்யா ராஜு
ஸ்ரீலக்ஷ்மி – பாம்மா
குல்ஷன் தேவய்யா – கருணா
மன்ஜூஷா – கிரண்மயி
சைதன்ய கிருஷ்ணா – சரத்
ஸ்ரீமுகி – அனசூயா
தொழில் நுட்பக் குழு:-
உருவாக்கியவர்: ராஜ் நிடிமொரு
இயக்குநர் : டீ ஏ நந்தினி ரெட்டி
தயாரிப்பு: டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்கள்: ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ் ஐஎஸ்சி
இசை: சந்தோஷ் நாராயணன்
எழுதியவர்கள்: ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி
சிஈஓ: ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு
ஆசிரியர்: தர்மேந்திர காகராலா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதர்
அதிரடி இயக்குனர்: லீ விட்டேக்கர், ஏஜாஸ் குலாப்
நடன இயக்குனர்: போனி வர்மா
ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்
ஃபைட் மாஸ்டர்: மார்வெல் நட்ராஜ்
ஒலி வடிவமைப்பு: பிரதீப் ஜி
ஒலிக்கலவை: அஜித் ஏ ஜார்ஜ்
நிர்வாக தயாரிப்பாளர்: ராகேஷ் ரெட்டி கதம்
பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்
தன்னுடைய முதல் திருமணம் முடிவுக்கு பின்னர் சென்னை பக்கமே அதிகம் வந்திராத சமந்தா தன்னுடைய புது கணவருடன் இணைந்த பின்பு அவருடைய தயாரிப்பிலும், சினிமாவிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இப்போது அவருடைய நடிப்பில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டிருக்கும் திரைப்படம் இந்த ‘எங்கள் தங்கம்’!
சமந்தாவும், அனிருத் என்ற திகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். திகந்த் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர். திகந்தின் தங்கைக்கு திருமணம் நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஏற்கனவே தன் மதன் திருமணத்தை ஆதரிக்காத திகந்தின் அப்பா அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்.
அதனால் சொந்த ஊருக்கே வராமல் இருந்த திகந்த் தன்னுடைய தங்கையின் நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு வர வேண்டிய கட்டாயம். தன் மனைவி சமந்தாவுடன் சொந்த ஊருக்கு வருகிறார் திகந்த்.
அதே நேரம் ஜெயிலில் இருக்கும் நக்சலைட் தீவிரவாதியான கருணா என்ற குல்ஷன் தேவய்யா தன்னுடைய அடியாட்கள் மூலமாக சமந்தா இருக்கும் ஊரை கண்டுபிடித்து வந்து விடுகிறார்.
குல்ஷனின் வருகைக்குப் பின்பு அந்த வீட்டில் நிறைய குழப்பங்கள் நடைபெறுகின்றன. மாமனாருக்கும், மாமியாருக்கும் பிடித்ததுபோல சமையல் கற்றுக் கொண்டு அக்மார்க் ஒரு பாசமான மருமகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமந்தா திடீரென்று குல்ஷனின் வருகையை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்துகிறார்.
சண்டை காட்சிகளில் பறந்து பறந்து அடிக்கிறார். தாக்குகிறார். சமந்தாவுக்கு ஏதோ ஒரு முன் கதை இருக்கிறது என்பதை அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் உணர்கிறார்கள். இது அந்த வீட்டில் இருக்கும் அனைவரையுமே மிகவும் பாதிக்கிறது.
இதற்கு பின்பு என்ன நடந்தது? சமந்தாவின் முன் கதை என்ன? குல்ஷன் சமந்தாவை அழைத்துச் சென்றாரா? அல்லது சமந்தாதான் வெற்றி பெற்றாரா? அவருடைய குடும்பத்தினர் என்ன ஆனார்கள்? இதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
அடக்கமான, அழகான, அன்பான மனைவியாகவும், மருமகளாகவும் காட்சி அளிக்கும் சமந்தா ஒரு கட்டத்தில் கைகளை கட்டிக் கொண்டு ஸ்டைலாக தலையை சாய்த்து கொண்டு தன்னை பின் தொடர்ந்து வந்து பாலோ செய்து வரும் இரண்டு பேரை மிரட்டி அனுப்புகின்ற பொழுது சமந்தாவுக்கு ஏதோ ஒரு கதை பின்னணியில் இருக்கிறது என்று நமக்குப் புரிகிறது. அந்த ஒரு நிமிட காட்சியில் அவர் காட்டுகின்ற அந்த கெத்தும், மிரட்டலான பார்வையும்தான் இதற்கு பின்பு படம் முழுவதும் சமந்தாவிடம் காணப்படுகிறது.
புகுந்த வீட்டினரை கவர்வதற்காக தன்னுடைய தோழியை ஊருக்கு வரவழைத்து லாட்ஜில் தங்க வைத்து விடியற்காலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் அனைவரும் எழுவதற்குள்ளாக பல உணவு பதார்த்தங்களை வகை வகையாக செய்து வீட்டில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கும் அந்த காட்சிகள் சில சில காமெடி வசனங்கள் மூலமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
அந்த வீட்டின் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், திருமண ஏற்பாடுகள், கடவுளர்களை வழிபடும் முறை… இதெல்லாம் எதுவுமே தெரியாத சமந்தாவிற்கு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அதை உணர்த்துகின்ற இடத்திலும் சரி… பக்காவான குடும்ப கதை போல் தெரிந்தது. இந்த அளவுக்கு சமந்தா தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
அதன் பிறகு சண்டை என்று வந்துவிட்டால் நானும் இன்னொரு ஜாக்கிசான்தான் என்று சொல்லாமல் சொல்லும்விதமாக சேலை அணிந்திருக்கும் நிலையிலேயே அவர் அடிக்கின்ற அடியும், எதிரிகளை பந்தாடும்விதமும் இது சமந்தாதானா என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
சமந்தாவின் இந்த திடீர் ஜான்சி ராணி மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச்சும், சண்டை காட்சிகளும் வெகுவாக கவர்கின்றன, அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை, உழைப்பைக் கொடுத்திருக்கிறார் சமந்தா.
இவருடைய கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாளே சமந்தாவுக்காக நிறைய இடங்களில் விட்டுக்கொடுத்து போகும் ஒரு நல்ல கணவனாக நடித்திருக்கிறார். சமந்தாவின் மாமியாராக நடித்திருக்கும் கௌதமி நீண்ட நாட்கள் கழித்து ஒரு தமிழ் படத்தில் தலையை காட்டி இருக்கிறார் அதிகமான வசனங்கள் இல்லாமல் எமோஷன் காட்சிகளில் மட்டும் நடித்திருக்கிறார் கௌதமி.
இவருடைய கணவராக நடித்திருக்கும் ஆனந்த், தோழியாக வந்து கடைசி வரையில் கொஞ்சம் கொஞ்சம் காமெடி செய்திருக்கும் மஞ்சுஷா, சமந்தாவிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சந்தேகப்பட்டு கொண்டு இருக்கும் கொழுந்தன் சைதன்ய கிருஷ்ணா, இவரது மனைவியாக நடித்திருக்கும் அழகு பதுமை ஸ்ரீமுகி, ஏதோ ஒன்று சமந்தாவிடம் இருக்கிறது என்று துவக்கத்திலிருந்து சந்தேகப்பட்டு கொண்டே இருக்கும் பாட்டி ஸ்ரீலக்ஷ்மி என்று பலரும் இந்தப் படத்தில் ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டியின் சிறப்பான இயக்கம்தான்.
வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா படுமிரட்டலாக நடித்திருக்கிறார். அதிலும், சமந்தாவின் மாமா… அவளை பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்லி.. உள்ளே வந்ததிலிருந்து அவர் காட்டுகின்ற மிடுக்கும், மிரட்டலும் இன்னும் என்ன என்ன செய்யப் போறானோ என்று நமக்குக் கொஞ்சம் பயத்தை கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் காட்சிகளின் அழகைவிடவும் சண்டை காட்சிகளை மட்டும் மிக அழகாக படமாக்கி இருக்கிறார். சமந்தாவின் கோபமான குளோசப் காட்சிகளையும், சிரித்தபடியே இருக்கும் அழகான முகத்தையும் பல கோணங்களில் படம் பிடித்து சமந்தாவின் நீண்ட நாள் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
சண்டை இயக்குநரை நிச்சயமாக நாம் பாராட்ட வேண்டும். அப்படியொரு வேகமான விறுவிறுப்பான சண்டை காட்சிகளை படத்தில் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையில் கொண்டாட்டமான அந்த கல்யாண பாடல் கைதட்ட வைத்துவிட்டது. அதனுடைய நடன இயக்குநரையும் நிச்சயமாக இதற்காகப் பாராட்ட வேண்டும்.
சமீப ஆண்டுகளில் இந்தியாவில் மிகப் பெரிய அளவுக்கு பொழுதுபோக்கு துறையில் வெப் சீரிஸ்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில் இது போன்ற மாஸான சண்டை காட்சிகளை அடக்கிய தேசபக்தி படங்கள், போதை கடத்தல் சம்பவங்கள், ஜாதி மத மோதல்கள், படு பயங்கர கொலைகள் என்பதை எல்லாம் வெப் சீரியஸ் ஆக கொண்டு வந்து கொட்டிவிட்டார்கள்.
அதனால் இப்போதைய இளைய தலைமுறையினர்கூட இப்படிப்பட்ட படங்களைத்தான் பார்க்கத் தயாராக இருப்பதால் இது போன்ற கதைகளைதான் உருவாக்குகிறார்கள். அந்த வகையில் சமந்தாவின் கணவரான ராஜ் நெடிமரு தன்னுடைய நண்பர் வசந்த் மரிம்கண்டிடியுடன் இணைந்து இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதையை எழுதி தயாரித்திருக்கிறார்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பெண் இயக்குநரான பி.வி.நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்கி இருப்பதுதான். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஆக்சன் காட்சிகள் இப்படி ஒரு வெறித்தனத்தை காட்டுகிறது என்றால், நந்தினி ரெட்டியின் அடுத்தடுத்த படங்கள் இந்த ஃபார்முலா படிதான் இனி வரும் என்று எதிர்பார்க்கலாம்.
நக்சலைட்டுகள், காடுகளில் மறைந்து வாழும் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் என்று வடகிழக்கு மாநிலங்களில் இருக்கின்ற இந்த குழுக்கள் அவைகள் உண்மையாக என்ன செய்கிறார்கள்? ஏன் இப்படி துப்பாக்கியை கையில் ஏந்தினார்கள் என்பதை எல்லாம் லைட்டா கூட சொல்லாமல்… ஏதோ போலீசுக்கும் அவர்களுக்கும் ஜென்ம பகை என்பது போல கதையை கொண்டு போய் இருப்பதுதான் இந்தப் படத்தின் ஒரே ஒரு பின்னடைவு.
முதல் பாதியில் குடும்ப கதையாக கொஞ்சம் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் கொண்டு போய் இடைவேளைக்கு பின்பு துப்பாக்கி, அரிவாள் வெட்டு, குத்து என்று சமந்தாவை பூலான் தேவி அளவுக்கு கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர்.
இது நிச்சயமாக இப்போதைய இளைய சமூகத்தையும், கலைஞர்களையும், இளைஞர்களையும், கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்தான். நேரம் இருந்தால், நேரம் கிடைத்தால், பொழுது போகவில்லை.. எனில் அவசியம் இந்தப் படத்தை பார்த்து மகிழுங்கள்!
RATING : 3.5 / 5









