நடிகர், நடிகைகள் :
இசக்கி கார்வண்ணன் – போலீஸ் இன்ஸ்பெக்டர் அமைதி ராஜ்
அபி நட்சத்திரா – பழங்குடிப் பெண் அழகு
பிரவீன் பழனிசாமி – பள்ளி ஆசிரியர் செல்வம்
காதல் சுகுமார் – காவலர் விடியல்
செல்வகுமார் – காவலர் குப்புசாமி
சௌந்தர் – கிராமத்து தபால் காரர்
குயிலி நாச்சியார் – மருத்துவச்சி
உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா: முகமூடி அணிந்த பெண்களின் கொலைக் குழு உறுப்பினர்கள்.
கரன் சக்ரவர்த்தி (சங்கிலி), ஆலன் கிருஷ்ணா (வானகமுடி), சித்து குமரேசன் (காளி), ஆனந்த் சௌந்தரராஜன் (கதம்பன்), நேசன் (இன்பார்மர்) மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
இயக்குநர்: தி.கிட்டு
திரைக்கதை: திருமுருகன்
இசை: தீசன்
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
படத்தொகுப்பு: சி.எம். இளங்கோவன்
கலை இயக்குநர்: முஜிபுர் ரகுமான்
சண்டைப்பயிற்சி: சுரேஷ்
ஒப்பனை: அப்துல்
ஒலிப்பதிவுக் கலவை: மொஹிதீன்
ஒலி விளைவுகள்: சேகர்
டி ஐ: ரகு
பத்திரிக்கை தொடர்பு: ஏ. ஜான்
போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹீரோ இசக்கி கார்வண்ணன் ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். அவர் எந்த இடத்திற்கு வேலைக்கு போனாலும் தொடர் குற்றங்களை செய்யும் கொலையாளிகளை மேல் அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே என்கவுண்டரில் சுட்டுக் கொள்வார்.
இதனாலேயே இசக்கி தன்னுடைய இன்ஸ்பெக்டர் பணியில் இதுவரையில் 14 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இப்போது பதினைந்தாவது தடவையாக ‘செங்காடு’ என்ற கிராமத்திற்கு மாற்றப்படுகிறார்.
அந்த மலைப் பகுதியில் தேயிலை தோட்டங்கள் நிறைய இருக்கின்றன. அதனுடைய முதலாளிகள் வேறு வேறு ஆட்களாக இருக்கிறார்கள். அந்தக் காட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் 2 போலீஸார்தான் இருக்கிறார்கள். அந்த போலீஸ் ஸ்டேஷனில் எந்த ஒரு புகாரும் பெண்டிங்கில் இல்லை என்பது சுவாரசியமானது.
அந்த ஊரில் அந்த எஸ்டேட்டை பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இடையே எந்தவிதமான மோதலும் இல்லை. அதனால் அந்தக் கிராமத்து மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதேயில்லை. இதனால் போலீஸாருக்கும் வேலையே இல்லை.
அந்த ஊரில் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் யாரும் அங்கே பொறுப்புக்கு வராமல் இருப்பதால் அந்த ஊரிலேயே படித்த பெண்ணாக இருக்கும் அபி நட்சத்திரா, அந்த ஊரின் சின்ன பசங்கள், பெண்களை வைத்து அவர்களுக்கு படிப்பு சொல்லித் தருகிறார்.
இந்த நேரத்தில் பிரவீன் பழனிச்சாமி அந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியராக மாறுதல் பெற்று வந்திருக்கிறார். வந்த இடத்தில் அவருக்கு அபி நட்சத்திரா மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. இதை அபி நட்சத்திரா விரும்பவில்லை என்றாலும் ஆசிரியர் கொஞ்சம் சபல புத்தி உள்ளவராக இருப்பதால் அபி நட்சத்திராவைப் பின் தொடர்கிறார்.
இந்த நேரத்தில்தான் திடீரென்று அவர் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தியைக் கேட்டவுடன் துள்ளிக் குதித்து வருகிறார் இன்ஸ்பெக்டர் இசக்கி. வாத்தியாரை யார் கொலை செய்தது என்று விசாரிக்க துவங்குகிறார். அந்த விசாரணை பல்வேறு ஆட்களிடையே பயணிக்கிறது.
அதோடு அந்த ஊரின் காட்டுப் பகுதியில் ஒரு ஐந்து பேர் கொண்ட கும்பல் தங்களுடைய உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு ஒரு சிலரை காட்டுக்குள் வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறார்கள். இதுவரையிலும் அந்த உடல்களும் கிடைக்கவில்லை. அந்த கொலையாளிகளும் யார் என்று தெரியவில்லை.. நமக்கு மட்டுமே அந்தக் கொலையாளிகளையும், கொலை செய்யப்பட்டவர்களையும் காண்பித்து இருக்கிறார்கள்.
முடிவில் என்ன ஆனது? ஆசிரியரை கொலை செய்தது யார்? இன்ஸ்பெக்டர் இசக்கி கண்டுபிடித்து விட்டாரா? பொதுமக்களின் பங்களிப்பு இதில் என்ன? இவைகள்தான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் ஒரு போலீசுக்குரிய கெத்தோடு இருக்கிறார். அவருடைய தோற்றமே அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது. ஒரு கம்பீரமான தோற்றத்திலும் அனைவரையும் பயமுறுத்தும் அளவுக்கான விசாரணை முறையிலும் அவருடைய நடிப்பை அழகாக காட்டி இருக்கிறார்.
அவருடைய விசாரணை எந்தப் பக்கம் போகிறது என்பது அவருடன் இருக்கும் இரண்டு காமெடி போலீசாரால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் காமெடியான திரைக்கதை.
அந்த ஊரில் படித்த பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமே நம்மை கவர்கிறார். அழகான முகத்துடன் அழகாக தமிழ் பேசி, வசன உச்சரிப்பில்கூட ஒரு அழகை காட்டி இருக்கிறார். அவருடைய ஒரு சில முகபாவனைகள் அவர் ஒரு சிறந்த நடிகை என்பதை நமக்கு சொல்கிறது.
ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிச்சாமி, சில காட்சிகளே வந்தாலும் கவனத்தை இருக்கிறார். மேலும் தூங்கி வழியும் கான்ஸ்டபிளாக காதல் சுகுமாரும் மற்றும் கான்ஸ்டபிள் செல்வகுமார், கரன் சக்கரவர்த்தி, சௌந்தர் என்று இங்கிருந்து அழைத்துக் கொண்டு போனவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களைவிடவும் அங்கேயே இருக்கும் கிராமத்து ஆட்களும் மிகச் சிறப்பாக தங்களுடைய எதார்த்தமான நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள்.
இந்த படம் 1970-களில் நடப்பதால் அதற்கு ஏற்றவாறு நவீனத்தின் ஒரு நிழல்கூட படாத அளவுக்கு ஒரு மலை கிராமத்தில் முழுக்க, முழுக்க படத்தினை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் தி.கிட்டு.
கலை இயக்குநரின் அழகான வடிவமைப்பின் அந்த ஊரின் வீடுகளும், மக்களின் வாழ்வியல் இடங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன இதற்காக கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம் இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைப் பிரதேசத்தை அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்கிறார். எந்த ஒரு சிறு இடரலும் இல்லாமல் அவர் காட்டியிருக்கும் படப் பதிவு பாராட்டுக்குரியது.
இசையமைப்பாளர் தீசன் தன்னுடைய இசையில் பாடலுக்கான இசையைவிடவும், பின்னணி இசையை சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கே உரித்தான பாணியில் கொடுத்து இருக்கிறார்.
ஆங்கிலேயர் காலத்தில் நடந்த படுகொலைகளும் அதற்கு பின்னணியில் உதவியாக இருந்தவர்களும் அதற்குப் பிறகு வழிவழியாக அந்த கிராமத்தில் நடக்கின்ற கொலைகளையும் திரைக்கதையில் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்றாலும், படத் தொகுப்பாளர் இளங்கோவன் இந்த டிவிஸ்ட்கள் நிறைந்த திரைக்கதையை கொஞ்சம் அழகுபட கச்சிதமாக தொகுத்துத் தந்திருக்கிறார்.
இந்த ஊரில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது மாதிரியான சூழலோடு படம் துவங்கி, இறுதியாக இரண்டாம் பாகத்தில்தான் இந்த படத்தின் மையக் கதை முடிவடையும் என்று சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியில் திரைக்கதை கொஞ்சம் வேகமாக வீறு நடை போட்டு போக, இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் திரில்லராக கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டு வரலாற்றுச் செய்திகளோடு இந்தப் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் தி.கிட்டு.
ஒரு கொலையை விசாரிக்க போக அதன் பின்னணியில் இதற்கு முன்பு நடந்த பல கொலைகளையும் இந்தக் கொலைகளுக்கு மூல காரணமாக நடைபெற்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் அதை எதிர்த்து அந்த ஊர் பெண்களே போராடுகின்ற ஒரு சுவாரசியத்தையும் இந்தப் படத்தில் இணைத்துத் தந்திருக்கிறார்கள்.
எப்படியோ இதனுடைய இரண்டாவது பாகம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதிலும் இந்த சிங்கப் பெண்கள் படையைப் பற்றி டீடெயிலாக சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் இந்த ‘ஆட்டி‘ திரைப்படம் அதிரடியான ஆடுகளத்தைக் காட்டியிருக்கிறது.
RATING : 2.5 / 5









