இந்தப் படத்தில் அபிநயா, குழந்தை நட்சத்திரங்கள் அனுமிதா, அனுஷிதா, சுப்பிரமணிய சிவா, வெங்கட் சுபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – எழுத்து : ஜெகதீஷ் தம்பையா.எஸ், தயாரிப்பு நிறுவனம் : ராஜேஸ்வரி லட்சுமி நாராயணன் மற்றும் வினோத்கண்ணன், இசை : ஜி.கே.வி., ஒளிப்பதிவு : முகமது அமீன், படத் தொகுப்பு : ஈஸ்வர மூர்த்தி, கலை இயக்கம் : பிரபாகரன் ராகுல், நிர்வாகத் தயாரிப்பாளர் : பாலச்சந்தர், பத்திரிகை தொடர்பு : ஆர்.மணிமதன்.
இந்தப் படம் நான்காண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்டு பெட்டியில் பூட்டி வைத்திருந்தார்கள். இப்போதுதான் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அபிநயா தனது கணவர் மற்றும் தனது மகள்களான இரட்டை சகோதரிகளுடன் மலைப் பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு வருகிறார். காரில் வரும்பொழுது தற்செயலாக மலை மீது இருக்கும் ஒரு வீட்டில் இருந்து உருண்டு வரும் கேஸ் சிலிண்டர் கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தில் அபிநயாவின் கணவர் இறந்து விடுகிறார். குழந்தைகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்றாலும் அபிநயாவின் முகம் சிதைந்து போகிறது. இதனால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய கட்டாயமும் வருகிறது.
அபிநயாவின் குடும்ப நண்பரான சுப்பிரமணியம் சிவா அந்த குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் பண விஷயங்கள் அனைத்தையும் பராமரித்து வருகிறார். இப்பொழுது மருத்துவமனையில் சொல்லி அபிநயாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வைக்கிறார்.
குழந்தைகள் இருவரும் அம்மாவை எதிர்பார்த்து காத்திருக்க தன்னுடைய முகத்தில் சர்ஜரி செய்த நிலையில் முகத்தை மூடி மறைத்துக் கொண்டு வீடு வந்து சேர்கிறார் அபிநயா.
இதற்கு பின்பு வீட்டில் குழந்தைகளிடம் அன்பாக பேசாமல், பண்பாக பழகாமல்… கடுமையாக நடந்து கொள்கிறார் அபிநயா. இதனால் வந்திருப்பது நம்முடைய அம்மாதானா என்கிற ஒரு சந்தேகம் அந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
இதன் உண்மை நிலையை அறிய அந்த வீட்டிலிருந்து தப்பி செல்ல குழந்தைகள் முயல்கிறார்கள். இன்னொரு பக்கம் அபிநயாவை வைத்து சொத்துக்களை கைப்பற்றும் வேலையும் நடக்கிறது.
இறுதியில் அந்த வீட்டில் என்ன நடந்தது? உண்மையில் அபிநயாதான் வந்திருந்தாரா? குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது? என்பதெல்லாம் இந்த ‘இரட்டையர்’ என்ற படத்தின் கதை சுருக்கம்.
‘இரட்டையர்’ என்ற தலைப்பு வைத்து இரட்டை சகோதரிகளின் கதைதான் படம் என்று இயக்குநர் சொல்லி இருந்தாலும் உண்மையில் அபிநயாதான் இந்தப் படத்தை தாங்கி இருக்கிறார்.
முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அவருடைய முகம் தெரிகிறது. அதற்கு பின்பு முழுக்க முழுக்க பிளாஸ்டிக் போடப்பட்ட நிலையில் அவருடைய கண்கள் மட்டுமே தெரிய.. அதிலேயே தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
குழந்தைகள் மீதான கண்டிப்பு, தப்பிக்க வழி இல்லாமல் இருப்பது… சுப்பிரமணிய சிவாவிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது என்று அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
அனுமிதா, அனுஷிதா என்ற இரட்டை சகோதரிகள் படம் முழுவதும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள். திரும்பி வந்த அம்மாவின் நடவடிக்கையால் குழம்பிப் போய் இது நம்ம அம்மா இல்லை; வேறு யாரோ என்ற உண்மையை அவர்கள் வெளிப்படுத்துவதும், வீட்டிலிருந்து தப்பிப்பதற்காக அவர் செய்கின்ற சில நடவடிக்கைகள் ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை அழகாக கொண்டு வந்திருக்கிறது.
நல்லவரா கெட்டவரா என்பதே தெரியாமல் எப்போதும் சந்தேகத்துடனே பார்ப்பது போன்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சுப்பிரமணிய சிவா. அவருடைய இயல்பான நடிப்பு அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் சுப்ரமணிய சிவாவின் கேரக்டர் சிறப்பு என்றாலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு இவரை தேர்வு செய்திருப்பது அதனை இன்னும் சிறப்பு.
பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கட் சபா தன்னுடைய கெத்தான தோற்றத்தினாலும், சுப்ரமணிய சிவா மறைமுகமாக சொல்லுவதை டக்கென்று புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் அவர் பேசுகின்ற வசனமும், பேசும் விதமும் அந்தக் காட்சியை பெரிதும் ரசிக்க வைத்தது.
முகமது அமினின் ஒளிப்பதிவு சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான வகையில் இருந்தாலும் அந்த மலைப்பிரதேசத்தை அழகாக காட்டியிருக்கிறார். விபத்தினை படமாக்கியவிதமும், அந்த வீட்டுக்குள் நடக்கும் சில சஸ்பென்ஸ் சம்பவங்களை கேமராவின் மூலமாகவே நமக்குக் கடத்தி இருக்கிறார். அபிநயாவின் பிளாஸ்டிக் போடப்பட்ட முகத்தோடு அவரையும் சந்தேகக்கும்படியான அளவுக்கு காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
மலைப்பிரதேசத்தில் வெளிப்புற காட்சிகளை காட்டும் பொழுது அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு நடந்த அந்த வீட்டை எப்படி தேடி கண்டுபிடித்தார்கள் என்றும் தெரியவில்லை. இதற்காகவே கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
இசையமைப்பாளர் ஜி.கே.வி. பாடல்களில் கோட்டை விட்டாலும் பின்னணி இசையில் பயமுறுத்தலோடு கூடிய பார்வையை நம்மிடம் இருந்து பெற்று இருக்கிறார்.
வெறும் ஒன்றரை மணி நேர படமாக இந்தப் படத்தை மிகவும் க்ரிப்பாக கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.
இந்தப் படத்தை இன்னும் ஒரு ஐம்பது நிமிடங்கள் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அப்படி செய்தால் மிகவும் போர் அடித்து விடும் என்பதை உணர்ந்து இயக்குநரும் படத் தொகுப்பாளரும் இணைந்து செய்திருக்கும் இந்த படத் தொகுப்பு வேலையும் பாராட்டுக்குரியது.
பொதுவாக தமிழ் சினிமாக்களில் சைக்காலஜிக்கல் திரில்லர் படங்களில் பேய், பிசாசு, அமானுஷ்யம் என்றுதான் கொண்டு வருவார்கள். ஆனால், இந்தப் படத்தில் புதிய முயற்சியாக இரண்டு குழந்தைகளின் அம்மா பற்றிய எதிர்பார்ப்பும், தவிப்பும்… அம்மாவை தேடி அவர்கள் செய்கின்ற வேலைகளும் இந்தப் படத்தை வேறு கோணத்தில் நம்மைப் பார்க்க வைக்கிறது.
ஒரு தாய்க்கும், அவரது குழந்தைகளுக்கும் இடையில் நடக்கும் அடையாள போராட்டமும் உளவியல் சார்ந்த சிக்கல்களுமாக இந்தப் படத்தின் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஜெகதீஷ் தம்பையா.
ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்து தன்னுடைய இயக்கத்தை திறம்பட கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
RATING : 2.5 / 5









