அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில், சென்னையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் ‘அக்னி சிறகுகள்’ அறக்கட்டளையை முன்னெடுக்கும் கல்வியாளர் ஜான் பிரிட்டோ பேசும்போது,
“நாங்கள் இளைஞர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்களது கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.
2018 ஆம் ஆண்டு சிறு பொறியாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று வளர்ந்து 9 ஆம் ஆண்டைத் தொடுகிறது.
இதுவரை எங்கள் அமைப்பு சார்ந்த கல்லூரி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தோம்.
இப்போது அனைவரும் பங்கு பெறும் வகையில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் அக்னி சிறகுகள் அறக்கட்டளை காரியங்களை ஆற்றி வருகிறது.
இளைஞர்கள் இன்று எவ்வளவோ முன்னேறி வருகிறார்கள். சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள்.
அவர்களைத் ‘தற்குறிகள்’ என்று யாரும் அவமானப்படுத்த வேண்டாம். நேற்று இளைஞர்களாக இருந்தவர்கள்தான் இன்று முதியவர்களாக இருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு முதியோர்கள் முடிந்தால் ஆலோசனை கூறுங்கள் இல்லாவிட்டால் வழி விடுங்கள் “என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் பேராசிரியர் ஜி.தெய்வசுந்தரம் பேசியது:
“இன்றைய இளைஞர்களை நினைத்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது. எவ்வளவோ துறையில் முன்னேறி வருகிறார்கள்.
எண்ணத்தில் ஒளி இருந்தால், செயலிலும் ஒளி இருக்கும் என்பது பாரதியின் வாக்கு. அதன்படி இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள்.
அவர்களது கல்வி வேலை வாய்ப்புக்காக ‘அக்னி சிறகுகள்’ அமைப்பு இந்த அளவுக்கு கடமையாற்றுவதை நினைத்தால் எனக்குப் பெருமையாகவும் வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
தொழில் அதிபர் பிரகல்யா பேசியது:
“எந்த பொறியியல் கல்லூரி மாணவரும் முன்னேறாமல் இருக்கக் கூடாது. அனைவருக்கும் வெளிநாடு செல்வதுதான் பெரிய கனவாக இருக்கிறது.
ஏன் இந்தியாவில் இருந்துகூட சாதிக்கலாம். ஏன் சென்னையில்தான் வேலை என்றுகூட நினைக்கக் கூடாது. நாங்கள் மதுரையில் இயங்கி வருகிறோம்.
கிராமப் புறங்களில் இருந்து கொண்டு உங்கள் உள்ளூரிலிருந்து கொண்டே உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இன்று பொறியியல் கல்லூரி மாணவர் என்றாலே ஒரு 500 பேருக்கு என்னால் உதவ முடியும். அந்த அளவுக்கு நாங்கள் செய்து வருகிறோம்.
எப்போதும் உதவிடத் தயாராக இருக்கிறோம். அக்னி சிறகுகள் அமைப்பை சேர்ந்த இஞ்சினியர்கள் 400 பேருக்கு நாங்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம், எங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்தூரிராஜா பேசியது:
“ஒரு மனிதனுக்குக் கடைசிவரை அவனுக்கு சிறப்பையும் உயர்வையும் அளிப்பது கல்விதான். அந்தக் கல்வியை சிறப்பாகக் கற்க வேண்டும்.
என் தந்தைக்கு நாங்கள் 10 பிள்ளைகள். அவர் படிக்காதவர். அவர் வீட்டில் ஒரு சட்டம் போட்டார். நாங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பெயிலாக கூடாது. பெயிலானால் விவசாய வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்றொரு சட்டத்தைப் போட்டார்.
அதற்குப் பயந்து கொண்டு நாங்கள் படித்ததுதான். அந்த அடித்தட்டுக் கிராமத்தில் இருந்து படித்துக் கல்லூரிக்கும் சென்றேன். கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் பி.ஏ இரண்டாம் ஆண்டிலேயே காதல் குறுக்கிட்டது. அதனால் அது தடைப்பட்டது.
இன்று இளைஞர்களுக்கு இரண்டு விஷயங்கள்தான் பெரிதாகத் தெரிகின்றன. முதலில் கல்வி, அடுத்தது காதல்.
கல்வியை முடிக்கும் முன்பு காதல் குறுக்கிடுகிறது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உங்களுக்கு பள்ளியில் எப்படி சேர்க்க வேண்டும்? கல்லூரியில் எப்படி சேர்க்க வேண்டும்? எப்படி வேலை வாய்ப்பு பெற்று தர வேண்டும்? என்பதற்கெல்லாம் பாடுபடும் பெற்றோர் உங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் விட்டு விடுவார்களா?
நீங்கள் ஏன் தவறான பாதையில் செல்கிறீர்கள்? காதலில் விழுந்தவர்கள் பலரும் திசை மாறுகிறார்கள். கல்விக்கு பெரும் குறுக்கீடாகக் காதல் இருக்கிறது.
உங்களுக்கு பெற்றவர் என்றும் துணை இருப்பார்கள். பெற்றோர்களால் வளர்க்கப்படாத பிள்ளைகள்தான் குற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். திசை மாறிப் போகிறார்கள்.
இன்று பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. வேலைக்காரிகள்தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு உரிய ஆரோக்கியம் கிடைத்து விடுமா ?
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே வெளிநாட்டு கனவுடன் சேர்க்கிறார்கள். ஏன்… என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? இங்கே எல்லாமே இருக்கின்றன.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு மிகவும் அற்புதமான மாநிலமாக இருக்கிறது. இங்கே உள்ள கல்வி, பண்பாடு, ஒழுக்கம் வேறு எங்கும் பார்க்க முடியாது.
கல்வி என்றும் என் வாழ்வில் துணை நின்று இருக்கிறது. எனக்கு என் மனைவி விஜயலட்சுமிதான் தெய்வம். அவர் சொன்னபடிதான் நான் கேட்டு வருகிறேன்.
எனக்கு தன்னம்பிக்கை தளர்ந்தபோதெல்லாம் ஊக்கம் கொடுத்தது அவர்தான். நான் சினிமாவில் சாதிக்கலாம் என்று நம்பிக்கை அளித்தவரும் அவர்தான்.
பெண்ணின் வழிகாட்டுதலில்தான் குடும்பம் வளர்கிறது. குடும்பத்தில் பொறுப்பைப் பெண்கள்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
என் பிள்ளைகளை வளர்த்ததெல்லாம் என் மனைவிதான்.
நானும் என் பிள்ளைகளைச் சிரமப்பட்டு தான் வளர்த்தேன். என் மகள்கள் இருவரும் சென்னையில் புகழ் பெற்ற மருத்துவர்கள். என் மகன்கள் இருவரும் திரையுலகில் இருக்கிறார்கள். தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. தனுஷ் சிறு வயதிலேயே நன்றாக படிப்பார். செல்வராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் கோல்டு மெடலிஸ்ட்.
பொறுப்பாகச் சொல்வதால் என் மனைவி சொல்லை நான் தட்டுவதில்லை. ஆனால் இன்றுள்ள பெண்கள் இப்படி இருக்கிறார்களா? இன்று பெண்ணுரிமை, பெண் விடுதலை, சமூக உரிமை என்று பேசிக் கொண்டு ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு குடிக்கிறார்கள். இது நல்லதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதனால்தான் திருமண வரிசையைவிட விவாகரத்து வரிசை நீண்டதாக இருக்கிறது.
கல்வி என்றவுடன் எனக்கு இருவர்தான் நினைவுக்கு வருகிறார்கள். ஒருவர் பெருந்தலைவர் காமராசர். இன்னொருவர் ஏபிஜே அப்துல் கலாம்.
காமராஜர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் நாம் இன்று கல்வியில் அடைந்திருக்கும் வளர்ச்சி அவர் போட்ட விதைதான்.
கலாம் அவர்கள் எவ்வளவு உயர்ந்தபோதும் மாணவரோடு கடைசிவரை உரையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக இருந்தார்.
இருவரும் கல்வி என்ற விஷயத்தில் சாதித்த சாதனைகள் பெரியவை.
அந்த நிலையில் ‘அக்னி சிறகுகள்’ இந்தக் கல்வி வேலைவாய்ப்பு என்ற தளத்தில் பெரிய அளவில் சாதனை செய்கிறார்கள். அவர்களது திட்டங்கள் பெரிதாக இருக்கிறது.
அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அவர்கள் போதை ஒழிப்பு சார்ந்த விஷயங்களையும் இதில் எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.
அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் விவசாயத்தைக் கைவிட்டு விடுகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் தேர்தல் வரும்போது எவ்வளவோ வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள். ஆனால் விவசாயம் பற்றி ஏதாவது இருக்கிறதா? இன்று விவசாயம் என்கிற தொழில் ரியல் எஸ்டேட் தொழிலாக மாறியுள்ளது.
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நான் கௌரவ பேராசிரியராக சென்று வருகிறேன். என்னை சினிமா பற்றிதான் பாடம் எடுக்கச் சொல்கிறார்கள். விவசாயம் பற்றிப் பாடம் எடுக்கச் சொன்னால் நான் நன்றாக எடுப்பேன்.
விவசாயம் பற்றி கல்வியிலேயே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் எவ்வளவு துறையில் இருந்தாலும் அனைவருக்கும் உணவளிப்பவன் விவசாயிதான்.
ராணுவத்திலே எவ்வளவு வீரமாக எதிராளிக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றாலும் அவர்களுக்கும் உணவு தருபவன் விவசாயிதான்.
எனவே கல்வியை என்றும் கைவிட்டு விடாதீர்கள். அது உங்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கையையும் வாழ்க்கையில் தரும்” என்றார்.
விழா நிறைவில் ‘அக்னி சிறகுகள்’ கல்வி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் ‘‘
‘அக்னி சிறகுகள்’ கல்வி அறக்கட்டளை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒரு சமூகப் பொறுப்புள்ள இயக்கமாகும்.
இந்நிலையில், வருடந்தோறும் நடைபெறும் “கூடல்” நிகழ்வு, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மாற்றும் வல்லமை கொண்ட ஒரு பெரிய தளமாக உருவெடுத்துள்ளது.
“கூடல் – 26” என்பது வெறும் நிகழ்ச்சி அல்ல. இது இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒரு இயக்கம்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் இணைந்து, “மில்லியன் வேலைவாய்ப்புகள்” உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.
எங்கள் தாளாளர் திரு. டாக்டர் ஜான் பிரிட்டோ அவர்கள் தலைமையில், ‘அக்னி சிறகுகள்’ குழுமம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றும் இந்த முயற்சியை உறுதியாக முன்னெடுத்து வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த அரசின் பார்வை, உறுதி மற்றும் செயல் திறன், தமிழ்நாட்டை வேலைவாய்ப்பின் தலைநகரமாக மாற்றும் திசையில் நகர்த்துகிறது.
இதற்கு மாறாக, சில எதிர்க்கட்சிகள் சில குழுக்கள் — இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி எந்த தெளிவான திட்டமோ செயல்பாடோ இல்லாமல், வெறும் விமர்சன அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய எதிர்மறை அணுகுமுறைகள், சமூக முன்னேற்றத்திற்கு எந்த பயனும் அளிக்காது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
நாம் எதிர்ப்பதைவிட உருவாக்க வேண்டும். குறை கூறுவதைவிட வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்காகவே “கூடல்” போன்ற நிகழ்வுகள் மிக முக்கியமானவை.
‘அக்னி சிறகுகள்’ கல்வி அறக்கட்டளை, இளைஞர்களின் எதிர்காலத்திற்காக அரசு மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு, வேலைவாய்ப்பு புரட்சியை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.
“இளைஞர் வலுவானால், நாடு வலுவாகும்” — இதுவே எங்கள் நம்பிக்கை.’’ என்று கூறப்பட்டுள்ளது.









