full screen background image

பேட்டில் – சினிமா விமர்சனம் 

பேட்டில் – சினிமா விமர்சனம் 

ஒரு லட்சியவாதியின் வாழ்க்கையில் காதல் இடைமறித்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல வந்திருக்கும் படம் இது.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த ஹீரோ அர்ஜுன் பிரபாகரனுக்கு இசையில் பெரும் ஆர்வம். தான் ஒரு ராப் பாடகராக புகழடைய வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக பல ராப் பாடல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வெல்கிறார்.

தன்னுடைய வீடு இருக்கும் பகுதியிலேயே இருக்கும் தனியார் பள்ளியின் ஆசிரியையான ஆராத்யாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் அர்ஜூன். வழக்கமான சினிமா ஹீரோக்கள் போலவே நாயகி பின்னாலேயே சுற்றி சுற்றி தன்னுடைய காதலை சொல்லி நாயகியை சம்மதிக்க வைக்கிறார்.

இந்த நேரத்தில் அர்ஜுனனின் பாடலைக் கேட்ட ஒரு இசை கம்பெனியின் உரிமையாளர் அர்ஜுனை அழைத்து தங்களுடைய இசை கம்பெனிக்கு ஒரு ராப் பாடலை பாடித் தரும்படி கேட்கிறார். அர்ஜுனும் வந்ததடா வாழ்க்கை என்ற நினைப்பில் இந்த வேலையை பற்றி கொண்டால் விரைவில் நாம் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று நினைத்து இந்த நிறுவனத்துடன் இணைந்து முதல் பாடலை வெளியிடுகிறார். அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது.

இதற்கு அடுத்து லண்டனில் நடக்கின்ற ஒரு போட்டியில் கலந்து கொள்ள அர்ஜுனுக்கு அழைப்பு வருகிறது. இந்த நேரத்தில் ஹீரோயின் ஆராத்யா வேலை செய்யும் பள்ளியில் பல அசபாவிதங்கள் நடக்கின்றன.

வொர்க் லோடு அதிகம் என்று ஆசிரியைகள் தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்ல.. தலைமை ஆசிரியை அந்தப் பள்ளியின் உரிமையாளரான சுப்ரமணியம் சிவாவுக்கு அதை பாஸ் செய்கிறார். சுப்பிரமணிய சிவாவோ டீச்சர்களின் சர்டிபிகேட் வாங்கி பத்திரமாக மறைத்து வைத்திருப்பதால் “இது பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். கண்டுக்காமல் விட்ருங்க…” என்கிறார்.

ஆனாலும் இதைத் தொடர்ந்து அந்த பள்ளி மாணவிகள் ஒரு சிலர் போதை பழக்கத்திற்கு ஆட்பட்டு விடுகிறார்கள். அதில் ஒரு சிறுமி தற்கொலை செய்து கொள்ள விசயம் விஸ்வரூபம் எடுக்கிறது.

இந்தப் பிரச்சனைகளைப் பற்றி ஒரு பாடல் எழுதி ராப் இசை அமைத்து அதை வெளியிடும்படி காதலன் அர்ஜூனிடம் ஆராத்யா கேட்க ஹீரோவும் அதற்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால், அந்த இசை கம்பெனி நடத்தும் உரிமையாளர் இதை ஏற்க மறுக்கிறார்.

இந்த குழப்பத்திற்கிடையில் பள்ளி உரிமையாளர் சுப்பிரமணிய சிவா ஹீரோவுடன் சண்டையிட்டு அவரை அடித்து துவம்சம் செய்கிறார். இதனால் கோபம் அடையும் அர்ஜுன் முதலில் இந்தப் பள்ளியை பிரச்சனையில் இருந்து மீட்கலாம் என்று நினைத்து களத்தில் இறங்குகிறார்.

இதில் அவர் ஜெயித்தாரா.. இல்லையா? பாடல் போட்டிக்காக இங்கிலாந்துக்கு சென்றாரா.. இல்லையா? ஹீரோவும், ஹீரோயினும் திருமணத்தில் இணைந்தர்களா இல்லையா? அந்தப் பள்ளியின் பிரச்சனை என்னவானது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒட்டுமொத்த விடைதான் இந்த பேட்டில்’ என்ற படத்தின் கதை திரைக்கதை.

‘போராட்டம்’ என்ற பொருள்படும்படியாக ‘பேட்டில்’ என்ற ஆங்கில வார்த்தையை தலைப்பாக வைத்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் இந்தப் போராட்டம் பற்றிய சில வசனங்களையாவது படத்தில் வைத்திருக்கலாம்.

அறிமுக ஹீரோவான அர்ஜுன், ஜி.வி.பிரகாஷுக்கு தம்பி மாதிரி இருக்கிறார். அவ்வளவு பெரிய விஷயத்தை எல்லாம் தாங்கிக் கொள்வாரா? இவரால் தாங்க முடியுமா? என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல் ராப் பாடல்களை பாடும் திறமை வாய்ந்தவர் என்கின்ற ஒரே காரணத்தினால் இவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

அந்த ராப் பாடல்களைப் பாடும் பொழுது இவர் காட்டுகின்ற அந்த உடல் மொழி, வசனங்களை வேகம் வேகமாக பேசுகின்ற அந்த ஸ்டைல், முதன்முதலாக ஒரு இளைஞன் காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருப்பானோ அப்படியான ஒரு மனநிலை… இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி வருபவர்தான் இந்தப் படத்தின் ஹீரோவான அர்ஜுன்.

ஆனால் பள்ளி பிரச்சனையில் தலையிட்டு ஒரு ஹீரோ போல அவதாரம் எடுக்கும் போது நம்மிடம் இருந்து ரொம்ப தொலைவுக்கு போய்விட்டார் ஹீரோ அர்ஜுன். குருவி தலையில் பனங்காய் வைத்தது போல சில காட்சிகள் நமக்கு சிரிப்பைத்தான் தந்தது. பரவாயில்லை.. அடுத்தடுத்த திரைப்படங்களில் அவருடைய உருவத்திற்கும், தோற்றத்திற்கும் ஏற்ப கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

ஹீரோயின் ஆராத்யா காதல் போர்ஷனில் சிறப்பாக தன்னுடைய முகஜாடையிலேயே காதலை ஏற்றுக் கொண்டும் சிற்சில ஜிம்மிக்ஸ் செய்தும் பெரிதும் கவர்கிறார்.

பள்ளிக்குள்ளே நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஒரு துணிச்சல்மிக்க பெண்ணாகவும், கடைசிவரையில் காதலனுக்குத் துணையாக இருக்கும் அந்தக் குணமும் இவருடைய கேரக்டரை கடைசிவரையில் கொண்டு வந்திருக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவாவிற்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் சொல்லும் படம்தான். அவருடைய கோபம், ஆத்திரம், ரௌத்திரம், திமிர் என்று அத்தனை நவரசங்களையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டி நம்மை பயமுறுத்தி இருக்கிறார். இனிமேல் துணை கதாபாத்திர கேரக்டர்களையெல்லாம் விட்டுவிட்டு வில்லனாகவே அண்ணன் ஒரு ரவுண்டு வரலாம். அதற்குரிய நடிப்பு அவரிடத்தில் இருக்கிறது.

மேலும் படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் காயத்ரி, சுருளி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவணா சுப்பையா, மோசமான அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் பலர் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

இது இசையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் என்பதால் இசை அமைப்பாளர் ஜீவா ராப் இசை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் தன்னுடைய இசை மூலமாக காட்டி இருக்கிறார்.

ஒரு இசை என்பது ஒரு ரசிகனின் மனதில் ஊடுறுவி அந்த இசையின் ஊடாக வெளிவரும் பாடல் வரிகளில் நம்மைத் தூண்டிவிட வேண்டும். அப்படிப்பட்ட இசைதான் இங்கே நீடித்து நிலைத்து நிற்கும்.

இந்தப் படத்தில் ஹீரோ பாடும் ராப் இசையில் மிக வேகமாக பேசுகின்ற பாடல் வரிகள் நம்முடைய காதுகளில் இருந்து உடனுக்குடன் வெளியேறி விடுவதால் நம்மால் அதை முழுமையாக ரசிக்க முடியவில்லை. முதலில் இது போன்ற இசையில் எந்த ஒரு மனிதனின் உணர்வையும் தூண்டிவிட முடியாது என்பதை இயக்குநர் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றபடி படத்தில் போடப்பட்டிருக்கும் பாடல்களை எழுதியவர்களை பாராட்டலாம். ஒரு சில பாடல் வரிகள் மிக எளிமையாக இருந்து அதன் சிச்சுவேஷனை சொல்லி இருக்கின்றன. ஆனால், மொத்தமாகப் பார்க்கப் போனால் இது குறியைத் தாக்குவதற்கு முன்பாகவே விழுந்துவிட்ட ஏவுகணை போல ஆகிவிட்டது.

அஜித்தின் ஒளிப்பதிவில் குறையில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வசதி வாய்ப்புகளை வைத்து கொஞ்சம் தரமான ஒளிப்பதிவினை கொடுக்க முயன்றிருக்கிறார்.

கலை இயக்குநர் இளஞ்செழியன் நிச்சயம் பாராட்டுக்குரியவர். சில செட்டுகளை குறைந்த செலவில் அமைத்திருக்கிறார் போல் இருக்கிறது. படத் தொகுப்பாளரும் தன்னால் முடிந்த அளவுக்கான காட்சிகளை தொகுத்து நம்மை ரசிக்க வைக்க முயன்று இருக்கிறார்.

தற்போது இந்தியாவிலேயே கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளைவிடவும் தனியார் பள்ளிகளை மிக அதிகமாக மக்கள் நாடுகிறார்கள். காரணம் அங்கே உடன் படிக்கும் மாணவர்கள் மிடில் கிளாசுக்கு மேலாக இருப்பார்கள். அதனால், நம்முடைய பிள்ளைகளும் கொஞ்சம் டீசன்டாக கற்றுக் கொள்வார்கள். என்று பெற்றோர்கள் நினைப்பதுதான். ஆனால், அதே தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகளை வேலை, வேலை என்று சொல்லி கசக்கிப் பிழிகிறார்கள்.

ஆசிரியைகளின் ஒரிஜினல் சர்டிபிகேட்டை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் எப்போது வெளியேறச் சொல்கிறார்களோ அப்போதுதான் பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியை வெளியேற முடியும் என்கின்ற ஒரு ஜெயில் மாதிரியான வாழ்க்கையைத்தான் தனியார் பள்ளி ஆசிரியைகள் இப்போதும் அனுபவித்து வருகிறார்கள்.

அவர்களின் கஷ்டங்களையும், போராட்டங்களையும் இந்தப் படத்தில் இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இந்தப் படம் நிச்சயமாக பாராட்டக் கூடிய கதையம்சத்தில்தான் வந்திருக்கிறது. ஆனால், திரைக்கதையிலும் வசனத்திலும் இன்னமும் கொஞ்சம் டிஸ்கஷன் செய்து விறுவிறுப்பானவகையில் ரசிக்கும்படியாக எழுதியிருக்கலாம். அதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டதால் நம்மால் முழுமையாக இந்தப் படத்தில் ஒன்ற முடியவில்லை.

மக்களுடைய எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை கலையின் ஊடாக கொண்டு சென்றால் அது நிறைய மக்களை சென்றடையும். அரசுகளையும் கவனிக்க வைக்கும். இதை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இயக்குநரின் இந்த முயற்சிக்கு நமது பாராட்டுக்கள்!

இந்த பேட்டில்’ படம் நிச்சயமாக பார்க்கக் கூடிய படமாகத்தான் வந்திருக்கிறது.

RATING 3 / 5

 

Our Score